Tuesday 9 July 2019

இந்தியர்களுக்கான ‘ஒற்றை தலைமை’ யார்? பதிலளிக்குமா பக்காத்தான் ஹராப்பான்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைத்து ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில்  காலடி எடுத்து வைத்து இரு மாதங்களை கடந்து விட்டது.
ஆயினும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சுற்றி முன்வைக்கப்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கு விடை காண முடியாத சூழலில் மிக முக்கியமான கேள்விக்குக்கூட பதில் கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கும் அவலநிலை மலேசிய இந்தியர்களுக்கே உரித்தானது போல.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்கக்கூடிய தலைவர் யார்?’ என்ற கேள்வியே அது.

ஓராண்டுகால ஆட்சிக்குப் பின்னரும் இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கக்கூடிய ‘ஒற்றை தலைமை’ யார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படாதது வேதனைக்குரிய ஒன்றாகும்.

கடந்த 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியின்போது மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாக மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) தலைமை வகித்து வந்தது. இந்தியர்களின் பிரதிநிதி நாங்கள்தான் என்ற ஒற்றை சொல்லுக்காகவே பல ஏளனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் இக்கட்சி ஆளானது.

தமிழ்ப்பள்ளி தொடங்கி ஆலயம், பொருளாதாரம், குடியுரிமை, சமூக நலன் என சுடுகாடு வரையிலும் இந்தியர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளை தங்களது தலையின் மேம் போட்டுக் கொண்ட மஇகாவும் அதன் தலைவர்களும் அன்றைய எதிர்க்கட்சியினரின் (இன்றைய ஆளும்கட்சியினர்) பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதோடு மக்களின் வெறுப்புகளையும் சம்பாதிக்க நேர்ந்தது. அதன் விளைவாகவே கடந்த மூன்று தவணைகளாக பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இன்று ஆட்சி அதிகாரத்தையும் இழந்து நிற்கிறது.

மஇகாவின் ஒரு சில நடவடிக்கைகள் தோல்வியை தழுவியிருந்தாலும் இந்தியர் சார்ந்த பல நடவடிக்கைகளில் மஇகாவின் கை ஓங்கியிருந்ததை யாரும் மறுக்க முடியாது. யானைக்கே அடி சறுக்கும்போது மஇகா மட்டும் இதில் விதிவிலக்காகி விட முடியுமா?

இந்தியர்களை பிரதிநிதித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும்  தாங்கி கொண்ட மஇகாவே தோல்வியை சந்திக்கும் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இந்தியர்களை பிரதிநிதித்து 4 அமைச்சர்கள், 1 துணை அமைச்சர் பதவி வகிக்கும் நிலையில் இந்தியர்களுக்கான பிரதிநிதி யார்? என்ற கேள்வி இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற மஇகாவின் மத்திய செயலவைக்  கூட்டத்திற்குப் பின்னர் பேசிய அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பக்காத்தான் ஹராப்பானில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் தலைவர் யார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தற்போதுள்ள நான்கு அமைச்சர்களில் குலசேகரன், சேவியர் ஜெயகுமார், கோபிந்த் சிங், துணை அமைச்சர் சிவராசா ஆகியோர் பல இன கட்சிகளின் பிரதிநிதிகள் ஆவர். 

இவர்களால் இக்கட்சியில் இந்தியர்களுக்கு மட்டும் குரல் கொடுக்க முடியாது. பல இனத்தவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வு உண்டு. அமைச்சர் எனும் ரீதியில் இந்தியர் சார்ந்த விவகாரங்கள் தொட்டு கேள்வி எழுப்பினால் ‘இது என் அமைச்சுக்கு உட்பட்டதல்ல; நீங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை பாருங்கள்’ என மக்களை அலைகழிக்க வைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழாமல் இல்லை.

ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் வழி தன்னை இந்திய சமுதாயத்தின் போராளி என நிலைநிறுத்தி இன்று அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் பொ.வேதமூர்த்தி இந்திய சமுதாயத்தின் தலைவராக அங்கீகரிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கும் சிக்கல் எழாமல் இல்லை.

தற்போது செனட்டராக நியமனம் செய்யப்பட்டு அதன்வழி அமைச்சராக பதவி வகிக்கும் வேதமூர்த்தியின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு காலத்தில் முடிவு பெறுமா? அல்லது அடுத்த  மூன்றாண்டுகளுக்கு செனட்டர் பதவி நீட்டிக்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியே.

பக்காத்தான் ஹராப்பானில் இந்தியர்களுக்கான கட்சியை ஆரம்பிப்பதாக சொன்ன வேதமூர்த்தி, செனட்டர் பதவி இல்லாத நிலையில் இந்தியர் சார்ந்த அரசியல் கட்சியை வைத்துக் கொண்டு எவ்வாறு இந்தியர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? என்ற டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கேள்வியிலும் ஆயிட்ரம் அர்த்தங்கள் புதைந்துள்ளது.
இந்தியர்களின் பல பிரச்சினைகளை மையமிட்டு 14ஆவது பொதுத் தேர்தலில் சூறாவளியாய் சுழன்று 80 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர் வாக்குகளை பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இந்தியர்களுக்கு தலைமை தாங்குகின்ற ‘ஒற்றை தலைமை’  யார் என்ற கேள்விக்கு அடுத்த பொதுத் தேர்தலுக்குள் விடை கிடைத்து விடுமா?

இந்த கேள்வி டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுடையது மட்டுமல்ல; பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்தும்/ வாக்களிக்காமலும் அரசாங்கத்தின் தயவை எதிர்பார்த்து  காத்துக் கொண்டிருக்கும் சராசரி ஒவ்வோர் இந்தியர்களின் மனதுக்குள்ளும் புகைந்து கொண்டிருக்கும் கேள்வியாகும் என்பதை பக்காத்தான் ஹரப்பான் தலைமை மறந்து விடக்கூடாது.

No comments:

Post a Comment