புத்ராஜெயா-
மித்ரா தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து இலெட்சுமணன் சண்முகம் விலகுயுள்ளதை பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசிய இந்திய சமுதாயத்தின் அதிகமான எதிர்பார்ப்பின் காரணமாக மித்ரா மிகப் பெரிய அழுத்தத்திற்கு ஆளாகி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுமார் அரை ஆண்டு காலமாக மித்ராவை வழிநடத்தி வந்த ச.இலெட்சுமணன், தனிப்பட்ட காரணத்திற்காகவும் சொந்த வாழ்க்கைச் சூழ்நிலையைக் கருதியும் மித்ராவின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அவரின் இந்த முடிவுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, அதை ஏற்றுக் கொள்வதாகவும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை, சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை மித்ராவுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில், இலெட்சுமணன் பல வகையாலும் எனக்கு உதவிகரமாகத் திகழ்ந்துள்ளார். குறிப்பாக, நம்பிக்கைக் கூட்டணி அரசு, மலேசிய இந்திய சமுதாயத்திற்கான கடப்பாட்டை ஈடேற்றுவதில் அதிகபட்சமாக கடமை ஆற்றியுள்ளார்.
இந்த வேளையில், லெட்சுமணனின் கடப்பாடு, கடமை உணர்வு, சமுதாய சேவையில் அவர் காட்டிய ஈடுபாட்டை யெல்லாம் நினைவுகூர்கிறேன் என்று அவ்வறிக்கையில் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment