கோலாலம்பூர்-
கிம்மா போன்ற கட்சி உங்களை
பிரதிநிதிப்பதற்கு இருந்தாலும் மஇகாவை மறந்து விட வேண்டாம் என்று அதன் தேசியத் தலைவர்
டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்திய முஸ்லீம் சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.
மஇகாவின் முன்னேற்றகரமான
வளர்ச்சி பாதையில் இந்திய முஸ்லீம் சமூகத்தினரின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் மறந்து
விடமுடியாது. முஸ்லீம் சமூகத்தினர் ஆதரவு மஇகாவுக்கு இன்னும் ஆழமானதாக அமைந்திட வேண்டும்.
முன்பு மஇகாவின் மிகப் பெரும்
பலமாக முஸ்லீம் சமூகத்தினர் திகழ்ந்தனர். டான்ஶ்ரீ உபைதுல்லா போன்ற பல இந்திய முஸ்லீம் தலைவர்கள்
மஇகாவின் இமாலய வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
இந்திய முஸ்லீம் சமூகத்தினரின்
பங்களிப்பை நீக்கி மஇகாவின் சரித்திரத்தை எழுதி விட முடியாது. அந்தளவுக்கு இந்திய முஸ்லீம்
சமூகத்தினருக்கும் மஇகாவுக்கும் நெருக்கமான உறவு
உண்டு.
மத ரீதியில் வேறுபட்டிருந்தாலும்
தமிழ் மொழியால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இன்னும் சொல்லப் போனால் இந்திய முஸ்லீம்
சமூகத்தினரிடையேயான தமிழ் மொழி எங்களுக்கு ஒரு முன்னுதராணமாகும்.
இந்திய முஸ்லீம் சமூகத்தினரை
பிரதிநிதிப்பதற்காக ‘கிம்மா’ கட்சி இருந்தாலும் மஇகாவை மறந்து விட வேண்டாம். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் மஇகா
இந்திய முஸ்லீம் சமூகத்தினரையும் மறந்து விடாது என நேற்று மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில்
நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றும்போது
மேலவை தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மத்திய செயலவை இடம்
மஇகா மத்திய செயலவையில் முன்பு
முஸ்லீம் சமூகத்தினர் இடம்பெற்றிருந்த நிலையில் சில ஆண்டு காலமாக அவர்களின் பிரதிநிதித்துவம்
இடம்பெறாதது பெரும் ஆதங்கமாக உள்ளது.
அந்த ஆதங்கத்தை போக்கும்
வகையில் கூடிய விரையில் இந்திய முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மஇகா மத்திய செயலவை
இடம்பெறுவார். நியமிக்கப்படும் நபர் யார்? என்பது பிறகு முடிவு செய்யபடும் என்று அவர்
சொன்னார்.
இந்த நிகழ்வில் மஇகாவின்
முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ
எம்.சரவணன், முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, கிம்மா கட்சியின் தேசியத்
தலைவர் டத்தோ சைட் இப்ராஹிம், ம இகாவின் உதவித் தலைவர்கள் டத்தோ தோ.முருகையா, டத்தோ
சி.சிவராஜ், தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.அசோஜன், நிர்வாகச் செயலாளார் டத்தோ ஏ.கே.ராமலிங்கம்,
டத்தோ ப.கமலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.