கோலாலம்பூர்-
இன்று நடைபெற்று முடிந்த ரந்தாவ் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் முன்னிலை வகிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் இரு சுயேட்சை வேட்பாளர்களுடன் தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் மோதிக் கொள்கின்றன.
இந்நிலையில் இன்று காலை முதலே நடைபெற்ற வாக்களிப்பில் தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் முன்னிலை வகிக்கும் நிலையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஶ்ரீராம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு மே 9இல் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் மலேசியர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கடந்த இரு இடைத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது.
இப்போது ரந்தாவ் இடைத் தேர்தலிலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தோல்வியை தழுவுமேயானால் இது மூன்றாவது தோல்வியாக கருதப்படுவதோடு மக்களின் ஆதரவை இழக்கும் அபாயக் கட்டத்திற்கு இக்கூட்டணி தள்ளப்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றுமா? கோட்டை விடுமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். அதுவரை பொறுப்போம்.
No comments:
Post a Comment