Tuesday 9 April 2019

ரந்தாவ் இடைத் தேர்தலில் 'ஆர்.கே.நகர்' படக்குழுவுக்கு என்ன வேலை? இந்தியர்களை முட்டாளாக்க முயற்சியா?

ஆதிரன்

சிரம்பான் -
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிதாக ஆட்சி அமைத்த நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) மீது மலேசிய இந்தியர்கள் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சநஞ்சமல்ல.

புதிய ஆட்சியில் புடி விடியல் கிடைக்கும். பொருளாதாரத்தில் பின் தங்கிய சமூகம் ஏற்றம் காணும் என்றெல்லாம்  இந்திய சமுதாயம் நம்பிக்கைக் கொண்டிருந்தது.

ஆனால் இந்நாட்டு இந்தியர்களுக்கு கலைநிகழ்ச்சியும் விருந்துபசரிப்பு மட்டுமே போதும். நடிகர்களை அழைத்து வந்து கூத்து காட்டினால் ஆதரவளித்து விடுவர் என்ற சிந்தனையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் இருப்பது இந்திய சமுதாயத்திற்கே பெரும் ஏமாற்றம் ஆகும்.

ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்  நாளை 10ஆம் தேதி 'ஆர்.கே.நகர்' தமிழ்த் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவுள்ளது என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் இத்திரைப்படத்தின் தென்னிந்திய நடிகர்களுடன் பிகேஆர் கட்சியின் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவலே இந்திய சமுதாயத்தின் கோபக் கனலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணிதான் கலை நிகழ்ச்சி நடத்தி இந்திய சமுதாயத்தை ஏமாற்றியது என குற்றம் சாட்டிய மக்கள் பிரதிநிதிகள் (முன்பு எதிர்க்கட்சியினர்) அணிவகுத்துள்ள கூட்டணியில் இன்னமும் இதுபோன்ற அவலங்கள் அரங்கேற்றப்படுவது தொடர்கதைதானா?

கடந்த கால பொதுத் தேர்தல் நேரத்தின்போது தொலைக்காட்சியில் தமிழ் சினிமாவை ஒளிபரப்பியதற்காக தேசிய முன்னணி அரசாங்கத்தை குறை கூறிய மாண்புமிகுகள், இப்போது ஓர் இடைத் தேர்தலில்  தென்னிந்திய நடிகர்களையே அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவது யாரை முட்டாளாக்க பார்க்கிறார்கள்?

இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக போர்ட்டிக்சன் இடைத் தேர்தலின்போது நடிகர் கமல்ஹாசன், ரந்தாவ் இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் படக்குழு என தென்னிந்திய நடிகர்களை நம்பி அரசியல் நடத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தள்ளப்பட்டுள்ளதா? அல்லது இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்து விட்டதன் எதிரொலியாக இது புலப்படுகிறதா?

தமிழக அரசியலைபோல்  நடிகர்களை நம்பித்தான் அரசியல் செய்ய வேண்டிய  கட்டாய சூழலுக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தள்ளப்படுமேயானால் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிகர்கள் களமிறக்கப்படலாம். இல்லையேல் அடுத்த தேர்தலில் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களாக நடிகர்களே களமிறக்கப்படும் சூழலும் ஏற்படலாம்.

ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய சமுதாயம் சினிமாக்காரன் பின்னாடியே ஓடிக் கொண்டிருக்கும் கூட்டமல்ல என்பதை இந்த ரந்தாவ் இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு உணர்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

No comments:

Post a Comment