ஜோர்ஜ்டவுன் -
நாட்டில் மூத்த குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இனியும் காலம் தாழ்த்தாது, அரசு விரைந்து உரிய அங்கீகாரம் வழங்க முன் வர வேண்டுமென்று பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
நிறைவடைந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டிலுள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டம் கட்டமாக குடியுரிமை வழங்கப்படுமென்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்திருந்ததை அச்சங்கம் நினைவு கூர்ந்திருக்கிறது.
குடியுரிமை கோரியும் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தும் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் பலர் ஏக்கத்துடன் காத்திருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு அங்கீகாரம் கிட்டுவதில் இழுபறி நிலைமை நீடித்து வருவது தொடர்பில் பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
மூத்த குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தேசிய பதிவுத் துறையும், உள்துறை அமைச்சும் காரியமாற்றுவதில் விவேகத் திறனுடனும் விரைந்தும் செயல்படவேண்டுமென்று பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதிலும் அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும் மேற்கண்ட இரு அமைப்புகளுமே காரணமென்பது புலப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் இவ்விரு தரப்புகளும் காலம் தாழ்த்தாமல் செயல்படுவது பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.
விண்ணப்பங்களுக்கான அங்கீகாரம் இழுபறி நிலையில் தத்தளிப்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இது குறித்து வினவினால், இவ்விரு துறைகளின் பொறுப்பதிகாரிகள் பொருத்தமற்ற காரணங்களைக் கூறுவது ஏற்புடையதல்ல.
இந்நாட்டிலேயே பிறந்து பன்னெடுங்காலமாக வாழ்ந்து, தங்களுக்கான குடியுரிமைக்கு போராடுகின்ற மூத்த குடிமக்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதில் பாகுபாடும் பாராபட்சமும் காட்டப்படுவது எள்ளளவும் நியாயமில்லை எனவும் நசீர் வன்மையாகச் சாடியிருக்கிறார்.
குடியுரிமை விண்ணப்பங்களின் அங்கீகாரத்திற்கு காத்திருப்போரின் பரிதாப நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு உரிய வகையில் உதவுவதற்கு பிரதமரின் தலையீடு அவசியமென்று வேண்டுகோள் விடுத்திருக்கும் நசீர், இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பதிகாரிகளுக்கு விரைந்து காரியமாற்றும் கட்டளை பிறப்பிக்கபடுவது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment