கோலாலம்பூர்-
தாய்மொழி நாளிதழில் நிருபராக பணியாற்றிய விக்னேஸ்வரன் மூர்த்தி இன்று காலை மரணமடைந்தது ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
தமிழ்மொழி சார்ந்த விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த விக்னேஸ்வரன் தாய்மொழி நாளிதழின் கல்வி பிரிவின் (மாணவர் பக்கம்) நிருபராக பணியாற்றியதோடு குயில் மாத இதழிலும் ராகா வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். அதோடு தமிழ் நாளிதழ்களில் கவிதை புனைவதிலும் வல்லவராக திகழ்ந்தார்.
அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவராக திகழ்ந்த இவரின் திடீர் மறைவு குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமின்றி ஊடகவியலாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எழுத்துலகில் சாதனை இளைஞனாக உருவெடுப்பார் என்று எண்ணிய விக்னேஸ்வரன் இளம் வயதிலேயே மரணத்தை தழுவியது ஏற்க முடியாமல் சமூக ஊடகங்களில் பலர் தங்களது அனுதாபத்தை பதிவிட்டு வருகின்றனர்.
விக்னேஸ்வரனின் இறுதிச் சடங்கு நாளை 11ஆம் தேதி காலை 11.00 மணிக்கு No. 1012 Batu 14, Kampung Baru, Jalan Changlun, 06000 Jitra, kedah எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, விக்னேஸ்வரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் 'பாரதம்' மின்னியல் ஏடு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment