Friday, 5 April 2019

சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஆலய நிர்வாகங்கள் கடப்பாடாகக் கொள்ள வேண்டும்- கணபதிராவ் வலியுறுத்து

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
 அதிக பொருட்செலவில் ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுவதை விட அதற்கான செலவில் ஒரு பங்கை சமுதாய நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட ஆலய நிர்வாகங்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் மறுசீரமைப்பு செய்வதற்கும் நாம் லட்சக்கணக்கான வெள்ளியை செலவிடுகிறோம். இதனால் ஆலயங்கள் கம்பீரமாக தோற்றமளிக்கும்; சமுதாயத்தின் அடையாளமாக மட்டுமே காட்சியளிக்கும்.
ஆனால் அதையும் தாண்டி சமுதாயம் சார்ந்த பல நல் திட்டங்களுக்கு சென்றடைய வேண்டிய பணம் ஆலய நடவடிக்கைகளுக்கு சென்றடையும்போது அதை ஆக்கப்பூர்வமாக செலவிடுவதோடு சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவிடும் கடப்பாட்டை ஆலய நிர்வாகங்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

இம்மாநிலத்திலுள்ள சில ஆலயங்கள் இத்திட்டத்தை முன்னெடுத்தாலும் அதை பெரும்பாலான ஆலயங்கள் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சமுதாயத்திற்கும் ஆலயத்திற்குமான நெருக்கம் அதிகரிக்கும்.

சமுதாயத்தில் பின்தங்கிய மக்களை ஆலயமும் பொது இயக்கங்களும் கைவிடுகின்ற சூழலில்தான் பிற தரப்பினர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதோடு பின்னாளில் மதமாற்ற நடவடிக்கை அரங்கேற்றுவதை நாம் எல்லோருமே அறிந்து வைத்துள்ளோம் என்று நேற்று மாநில அரசு செயலகத்தில் நடந்த ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வின்போது கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

ஆலய நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு 17 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் ஆலய திருப்பணி, சீரமைப்பு, சமய நடவடிக்கைகள் என பல்வேறு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு மானியம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன்.

சில ஆலயங்களுக்கு அதிகமாக கொடுத்து சில ஆலயங்களுக்கு மானியம் இல்லை என்று கூறுவதை காட்டிலும் அனைத்து ஆலயங்களுக்கும் மானியம் சென்றடைய வேண்டும் என்பதால் போதுமான மானியத்தை ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் 53 ஆலயங்களுக்கு வெ.395,000 மதிப்பிலான மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின்போது சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய கிராமத் தலைவர்களும் ஆலயப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment