ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் இந்திய சமுதாயத்தின் மத்தியில் அம்முடிவு 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது' போல் அமைந்துள்ளது.
இநதிய சமுதாய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கு ஏதுவாக முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின்போது 2017இல் 2,200 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இவ்வாண்டு மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதாலும் தகுதி வாய்ந்த பல மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் இந்திய சமுதாயம் அதிருப்தி கொண்டு பொங்கி எழுந்தது.
இந்திய சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை உணர்ந்த ஆளும் தரப்பினர் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறினர். ஆனால் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கண்டு இந்திய சமுதாயம் ஏமாற்றமும் அதிருப்தியுமே அடைந்துள்ளது.
25,000ஆக இருந்த மெட்ரிக்குலேஷன் இடங்களை 40,000ஆக உயர்த்துவதாக அறிவித்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக், அதில் 90% பூமிபுத்ராவினருக்கும் 10% பூமிபுத்ரா அல்லாதோருக்கும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
மெட்ரிக்குலேஷனில் வழங்கப்பட்ட மிக குறைவான இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று மகஜர் கொடுத்ததும் அதிருப்தியை வெளிபடுத்தியதும் இந்திய சமுதாயம். ஆனால் மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் பூமிபுத்ராவின் அந்தஸ்து பறிக்கப்படக்கூடாது என மலாய் சமூகத் தலைவர்கள் குரல் மட்டுமே கொடுத்தனர்.
மகஜர் கொடுத்து அதிருப்தியை வெளிபடுத்திய இந்திய சமுதாயத்திற்கு மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன என்று அதிகாரப்பூர்வமாக கல்வி அமைச்சர் அறிவிக்காத நிலையில் கோரிக்கையே வைக்காத சமூகத்திற்கு கூடுதலாக 13,500 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது இந்திய சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
60 ஆண்டு கால தேசிய முன்னணியை வீட்டுக்கு அனுப்பி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமரச் செய்ததில் இந்தியர்களின் பங்கு அளப்பரியதாகும். ஹிண்ட்ராஃப் போராட்டத்தில் தொடங்கிய இந்தியர்களின் எழுச்சியே ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட முதல் போராட்டமாகும்.
இந்தியர்களின் போராட்டத்தில் எல்லாம் பிறர் குளிர் காயும் போக்கும் தேசிய முன்னணியில்தான் இருந்தது என்றால் இன்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலும் அதுதான் தொடர்கிறது.
இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் ஏமாளி சமூகமா? அல்லது ஏமாற்றம் தான் இவர்களின் தலையெழுத்தா? என்பதை ஆட்சி புரியும் மாண்புமிகுகள் விவரிப்பார்களா?
No comments:
Post a Comment