மலேசியவாழ் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
பூர்வகுடி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்வதற்கான தருணமிது. அதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி அரசு பூர்வகுடி மக்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்டங்களையும் உத்திகளையும் வகுத்து வருகிறது என்று புத்ராஜெயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பூர்வகுடி மக்கள் தேசிய மாநாட்டில் தலைமையுரை ஆற்றியபோது அவர் சொன்னார்.
சுற்றுலாத் துறையுடன் இணைந்த வர்த்தக வாய்ப்பு பூர்வகுடி மக்களுக்கு பொருத்தமாக அமையும். அதன்வழி, தாங்கள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களையும் வனவள உற்பத்திப் பொருட்களையும் பூர்வகுடி தொழில் முனைவோர் சந்தைப்படுத்த முடியும்.
உட்புறப் பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடியினர் வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் அதேவேளை தாங்கள் நிலையான வருமானம் ஈட்டும் சூழலையும் அமைத்துக் கொள்ளலாம்; அதன்வழி தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும். குறிப்பாக, பூர்வகுடி சமுதாயத்தில் இளம் தொழில்முனைவர்கள் அதிகமாக உருவாவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். தற்பொழுது அமலில் இருக்கும் பொருளாதாரக் கொள்கைக்கு உட்பட்டே இதை உருவாக்க முடியும் என்றும பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த பிரதமரை, பிரதமர் துறை அமைச்சரும் பூர்வகுடி மக்கள் நலத் துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான செனட்டர் பொன்.வேதமுர்த்தி பிரதமரை எதிர்கொண்டு வரவேற்றார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தல் சமயத்தில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து இந்த அரசு ஒருபோதும் பின்வாங்காது. அதன் அடிப்படையில், தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் 38-ஆவதாக இடம்பெற்றுள்ள பூர்வகுடி சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்னும் நிலையில் நம்பிக்கைக் கூட்டணி அரசு உறுதியைக் கடைப்பிடிக்கும் என்றார்.
அதற்கு ஏதுவாக, பூர்வகுடி சமூக நலத்துறை(JAKOA), இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு ஏற்ப அது மாற்றி அமைக்கப்படும். அதன் அடிப்படையில்தான் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சின்கீழ் இருந்த இந்தப் பிரிவு, பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டு அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் கண்காணிப்பின்கீழ் தற்பொழுது செயல்பட்டு வருகிறது.
எனவே, பூர்வகுடி சமுதாயத்திற்கு 100% விழுக்காட்டு வசதியை எல்லா வகையிலும் ஏற்படுத்தித் தருவதில் இந்த அரசு தொடர்ந்து அக்கறை காட்டும் என்றும் பிரதமர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment