ஷா ஆலம்-
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மக்கள் மத்தியில் குறிப்பாக பெற்றோரிடத்தில் ஆளும் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வையே உண்டாக்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் வலியுறுத்தினார்.
ஐநாவின் சிறார் உரிமை மாநாட்டு ஒப்பந்தம் பிரிவு 28இன் கீழ் அனைத்து மாணவருக்கும் கல்வி உரிமை தரப்பட வேண்டும். அதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி உரிமை வழங்கிட கடமைப்பட்டுள்ளது.
கல்வி உரிமையை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுமேயானால் அது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில் 8ஏ,9ஏ பெற்ற மாணவர்கள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த புறக்கணிப்புக்கு பி40 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என காரணம் சொல்வது ஏற்புடையதல்ல.
மெட்ரிக்குலேஷன் தேர்வுக்கான கல்வி தரம், இன விகிதாச்சார அடிப்படை புள்ளி விவரங்களை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்த புள்ளி விவரங்கள் ரகசியமானது அல்ல என்பதால் அதனை பொதுவில் வெளியிட அரசாங்கம் தயக்கம் காட்டக்கூடாது என கணபதிராவ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment