Tuesday, 30 April 2019

மூத்த குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் காலம் தாழ்த்தாதீர் – பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கம் கோரிக்கை

ஜோர்ஜ்டவுன் -

நாட்டில் மூத்த குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இனியும் காலம் தாழ்த்தாது, அரசு விரைந்து உரிய அங்கீகாரம் வழங்க முன் வர வேண்டுமென்று பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

நிறைவடைந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டிலுள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டம் கட்டமாக குடியுரிமை வழங்கப்படுமென்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்திருந்ததை அச்சங்கம் நினைவு கூர்ந்திருக்கிறது.

குடியுரிமை கோரியும் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தும் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் பலர் ஏக்கத்துடன் காத்திருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு அங்கீகாரம் கிட்டுவதில் இழுபறி நிலைமை நீடித்து வருவது தொடர்பில் பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தேசிய பதிவுத் துறையும், உள்துறை அமைச்சும் காரியமாற்றுவதில் விவேகத் திறனுடனும் விரைந்தும் செயல்படவேண்டுமென்று பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதிலும் அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும் மேற்கண்ட இரு அமைப்புகளுமே காரணமென்பது புலப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் இவ்விரு தரப்புகளும் காலம் தாழ்த்தாமல் செயல்படுவது பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.

விண்ணப்பங்களுக்கான அங்கீகாரம் இழுபறி நிலையில் தத்தளிப்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இது குறித்து வினவினால், இவ்விரு துறைகளின் பொறுப்பதிகாரிகள் பொருத்தமற்ற காரணங்களைக் கூறுவது ஏற்புடையதல்ல.

இந்நாட்டிலேயே பிறந்து பன்னெடுங்காலமாக வாழ்ந்து, தங்களுக்கான குடியுரிமைக்கு போராடுகின்ற மூத்த குடிமக்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதில் பாகுபாடும் பாராபட்சமும் காட்டப்படுவது எள்ளளவும் நியாயமில்லை எனவும் நசீர் வன்மையாகச் சாடியிருக்கிறார்.

குடியுரிமை விண்ணப்பங்களின் அங்கீகாரத்திற்கு காத்திருப்போரின் பரிதாப நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு உரிய வகையில் உதவுவதற்கு பிரதமரின் தலையீடு அவசியமென்று வேண்டுகோள் விடுத்திருக்கும் நசீர், இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பதிகாரிகளுக்கு விரைந்து காரியமாற்றும் கட்டளை பிறப்பிக்கபடுவது அவசியமாகும் என்று  தெரிவித்தார்.

Monday, 29 April 2019

இந்து சமயத்தை இழிவாக பேசிய ஸம்ரி வினோத் கைது

பெட்டாலிங் ஜெயா-
இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசிய சர்ச்சைக்குரிய சமய போதகர் முகமட் ஸம்ரி வினோத் காளிமுத்து கைது செய்யப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்தியது.

பெர்லிஸ், ஆராவில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஸம்ரி வினோத் கைது செய்யப்பட்டார்.

இந்து மத நம்பிக்கையையும் இந்துக்களின் தெய்வங்களையும் ஸம்ம்ரி வினோத் இழிவாக பேசிய காணொளி அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கொதித்தெழுந்த இந்துக்கள் அவருக்கு எதிராக
நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார் செய்தனர்.

இனத்துவேஷ கருத்துகளை பேசியது குற்றவியல் சட்டம்  செக்‌ஷன் 298ஏ, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தியது தொடர்பில் தகவல், பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233 ஆகியவற்றின் கீழ் ஸம்ரி வினோத் விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பெர்லிஸ் போலீஸ் தலைவர் நோர் முஷார் முகமர் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதி கிளந்தான், கம்போங் பஞ்சோர் பள்ளிவாசலில் உரையாற்றிய ஸம்ரி வினோத் இந்து மதம் தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார்.

Sunday, 28 April 2019

மக்கள் ஆதரவு சரிவு இறுதி முடிவு அல்ல- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொண்டிருந்ததே மக்களின் ஆதரவு சரிவு கண்டிருப்பதற்கு காரணம் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வில் பக்காத்தான் அரசாங்கம் மீதான ஆதரவு சரிவு கண்டிருப்பதை ஒப்புக் கொண்ட அவர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் கூடுதல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழலில் மக்களின் ஆதரவு சரிவு கண்டிருக்கிறது.
ஆயினும் இந்த சரிவு  இறுதி முடிவு அல்ல. ஆக்ககரமான திட்டங்களீன் வழி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர்களின் ஆதரவை பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் பெறும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Friday, 26 April 2019

இது என்னய்யா அப்பளத்திற்கு வந்த சோதனை? அப்பளம் பொட்டலத்தினுள் காற்று ஊதும் பணியாளர்

கோலாலம்பூர்-
இந்தியர்களின் உணவுகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது அப்பளம். வீடுகளிலும் விசேஷ நிகழ்வுகளிலும் ஆலய திருவிழாவிலும் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் அப்பளத்தை தனியாக பொட்டலம் கட்டி அதை விற்பனை செய்யும் உணவகங்களின் வாடிக்கையாகும்.(இதில் சில உணவகங்கள் விதிவிலக்காகின்றன)

பொட்டலம் கட்டி விற்பனை செய்யப்படும் அப்பளம் ஆரோக்கியமானது, பாதுகாப்பானது என எண்ணி இவ்வளவு நாட்களாக அதை உண்டு வந்த வாடிக்கையாளர்களின் எண்ணத்தில் இடி விழுந்தது போல காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உணவகப் பணியாளர் ஒருவர் அப்பளத்தை பொட்டலம் கட்டும்போது அதில் வாயுவை நிரப்புவதற்கு பதிலாக வாயால் காற்று ஊதி பொட்டலத்தை கட்டும் காணொளியை வாடிக்கையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது, எந்த உணவகம் போன்ற எந்த தகவலும் இணைக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட பணியாளருக்கு எதிராக சமூக வலைத்தலவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

உணவகங்களில் அப்பளத்தை பொட்டலம் கட்டி அதை விற்பனை செய்வதையே பலர் விரும்பாத நிலையில் இத்தகைய நடவடிக்கை 'இனி பொட்டலம் கட்டிய அப்பளத்தை யாரும் தொடவே கூடாது' என்ற எண்ணத்தையே உருவாக்கி வருகிறது.

Thursday, 25 April 2019

மெட்ரிக்குலேஷன் விவகாரம்; இந்தியர்களின் போராட்டத்தில் பிறர் குளிர் காயும் அவலம் தொடர்கதையா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் இந்திய சமுதாயத்தின் மத்தியில் அம்முடிவு 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது' போல் அமைந்துள்ளது.

இநதிய சமுதாய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கு ஏதுவாக முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின்போது 2017இல் 2,200 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் இவ்வாண்டு மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதாலும் தகுதி வாய்ந்த பல மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் இந்திய சமுதாயம் அதிருப்தி கொண்டு பொங்கி எழுந்தது.

இந்திய சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை உணர்ந்த ஆளும் தரப்பினர் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறினர். ஆனால் நேற்று நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கண்டு இந்திய சமுதாயம் ஏமாற்றமும் அதிருப்தியுமே அடைந்துள்ளது.
25,000ஆக இருந்த மெட்ரிக்குலேஷன் இடங்களை 40,000ஆக உயர்த்துவதாக அறிவித்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக், அதில் 90% பூமிபுத்ராவினருக்கும் 10% பூமிபுத்ரா அல்லாதோருக்கும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

மெட்ரிக்குலேஷனில் வழங்கப்பட்ட மிக குறைவான இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று மகஜர் கொடுத்ததும் அதிருப்தியை வெளிபடுத்தியதும் இந்திய சமுதாயம். ஆனால் மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் பூமிபுத்ராவின் அந்தஸ்து பறிக்கப்படக்கூடாது என மலாய் சமூகத் தலைவர்கள் குரல் மட்டுமே கொடுத்தனர்.

மகஜர் கொடுத்து அதிருப்தியை வெளிபடுத்திய இந்திய சமுதாயத்திற்கு மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன என்று அதிகாரப்பூர்வமாக கல்வி அமைச்சர் அறிவிக்காத நிலையில் கோரிக்கையே வைக்காத சமூகத்திற்கு கூடுதலாக 13,500 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது இந்திய சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
60 ஆண்டு கால தேசிய முன்னணியை வீட்டுக்கு அனுப்பி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமரச் செய்ததில் இந்தியர்களின் பங்கு அளப்பரியதாகும். ஹிண்ட்ராஃப் போராட்டத்தில் தொடங்கிய இந்தியர்களின் எழுச்சியே ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட முதல் போராட்டமாகும்.

இந்தியர்களின் போராட்டத்தில் எல்லாம் பிறர் குளிர் காயும் போக்கும் தேசிய முன்னணியில்தான் இருந்தது என்றால் இன்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலும் அதுதான் தொடர்கிறது.

இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் ஏமாளி சமூகமா? அல்லது ஏமாற்றம் தான் இவர்களின் தலையெழுத்தா? என்பதை ஆட்சி புரியும் மாண்புமிகுகள் விவரிப்பார்களா?

மெட்ரிக்குலேஷன் இடங்கள் 40,000ஆக உயர்வு- அமைச்சரவையில் முடிவு

புத்ராஜெயா-
மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக முன்பு வழங்கப்பட்ட 25,000 எண்ணிக்கையிலிருந்து 40,000ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் பூதாகரமாக வெடித்த மெட்ரிக்குலேஷன் விவகாரம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் வகையில் நடைமுறையில் உள்ள 25,000 இடங்களை 40,000ஆக உயர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த எண்ணிக்கை உயர்வில் 90% பூமிபுத்ராவினருக்கும் எஞ்சிய 10% பூமிபுத்ரா அல்லாதோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என பழைய நடைமுறையே பின்பற்றப்படும்.

இந்த எண்ணிக்கை உயர்வுக்கு தேவைபடும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதியமைச்சருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Wednesday, 24 April 2019

மெட்ரிக்குலேஷன் விவகாரம்; 2,200 மாணவர்களுக்கும் கதவுகள் திறக்கப்படுமா? மூடப்படுமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமூகத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் இன்று எடுக்கப்படும் முடிவை இந்தியர்களை குறிப்பாக தகுதி வாய்ந்த இந்திய மாணவர்களை திருப்தி கொள்ள செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்கள் வழங்கப்பட்டன. ஆனால், 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை பிடித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 2018ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி ஒன்றின் மூலமே இந்திய சமுதாயம் மேம்பாடு காண முடியும் என்று ஆளும் அரசாங்கத்தில் பல மாண்புமிகுகள் உணர்ந்திருந்தும் மெட்ரிக்குலேஷன் விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் அளவுக்கு ஏன் பொறுமை காத்தனர்?, இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதாக முழங்கிய அமைச்சர்களும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு சிறந்த முறையில் தீர்வு காண தவறியது ஏன்? என்பதே இந்திய சமுதாயத்தின் கேள்வியாக உள்ளது.

மெட்ரிக்குலேஷன் விவகாரத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சிறந்த தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சு கூறியிருந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மெட்ரிகுலேஷன் பயில்வதற்கு 2,200 இந்திய மாணவர்களுக்கும் கதவுகள் திறக்கப்படுமா? அல்லது மூடப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தர்பார் படத்தில் இணைகிறார் நயன்தாரா

சென்னை-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா இன்று படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

மேலும், ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 3 மாதங்கள் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கவுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இப்படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர்கள் ஆட்குறைப்பு; பேராக்கில் 2021இல் அமல்படுத்தப்படும்- சிவநேசன்


ஈப்போ- 

மத்திய அரசாங்கம் பரிந்துரைத்துள்ள அரசு பணியாளர் குறைப்பு நடவடிக்கை 2021ஆம் ஆண்டு முதல் பேராக் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

நாடு தழுவிய நிலையில் தற்போடு அரசு பணியில் உள்ள 1.7 மில்லியன் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக மாநில அரசு இலாகாக்களிலும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கை புதியது அல்ல என்றும் கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

அரசு துறையை சீர்படுத்தவும் பணியிடங்களை எண்ணிக்கையை நிலைநிறுத்தவும், பணியிடங்களை மறுசீரமைப்பு செய்யவும்  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது சேவையாற்றி வரும் பணியாளர்கள் இதில் உள்ளடங்க மாட்டார்கள் எனவும் தற்காலிக பணியமர்த்தும் முறை தளர்த்தப்படுவதோடு  ஈராண்டு அடிப்படையிலான பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கைருட்டின் தர்மிஸி (தேமு) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

பூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள் - அமைச்சர் வேதமூர்த்தி

புத்ராஜெயா-
புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று மாநாட்டுத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி  தெரிவித்தார்.

இவற்றில் பூர்வ குடிமக்களின் பாரம்பரிய நிலம்,  கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தலைமைத்துவம், அடிப்படை கட்டமைப்பு, பண்பாடு ஆகிய ஏழு அம்சங்கள் குறித்த தீர்மானங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

நிலம் குறித்த தீர்மானத்தில், பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நிலம், 134ஆவது சட்டம் அல்லது நாட்டின்  நிலக் குறியீட்டின் அடிப்படையில் அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என்பது ஒரு மைல்கல் தீர்மானம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். தவிர, பூர்வகுடி சமுதாயத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலான நிலமும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப்போல கல்வித் தீர்மானத்தைப் பொறுத்தவரை, பூர்வகுடி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பால்ய வயதில் மணம் முடிப்பதைக் காட்டிலும் அவர்களின் கல்வி மேம்பாட்டில் அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சுகாதார பாதுகாப்பிற்காக, சுகாதாரத் துறை, பூர்வகுடி மேம்பாட்டுப் பிரிவு (JAKOA), பூர்வகுடி பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பு கொண்ட சுகாதார செயற்குழு அமைக்கப்படும். பொருளாதாரம் குறித்த தீர்மானத்தில், பூர்வகுடி தொழில்  முனைவோர் வங்கிக் கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூர்வகுடியினர் தங்களின் வட்டாரப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சரவாக் மாநிலத்தில் உள்ள நடைமுறையைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதைப்போல, பூர்வகுடி இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும்  கலைஞர்களின் வளர்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்கும்படி மற்றொரு தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விவரித்தார்.
முன்னதாக காலையில் மாநாடு தொடங்கியபோது தேசிய ஒற்றுமை, சமூல நல அமைச்சருமான பொன். வேதமூர்த்தியின்  வரவேற்புரை, பூர்வகுடி சமூகத் தலைவர் முகமது பின் நோகிங் உரையைத் தொடர்ந்து பிரதமர் துன் மகாதீர் தலைமை உரை ஆற்றினார்.

பிற்பகலில் குழு அடிப்படையிலான கருத்தரங்குகள் நடைபெற்றன. நேற்று ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பூர்வகுடி சமூகத்தின் வட்டாரத்  தலைவர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்பினர் என ஏறக்குறைய 1,200 பேர் கலந்து கொண்டனர். பூர்வகுடி சமூகத்தில் இருந்து ஏராளமான பெண்களும் இந்த முழுநாள் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பூர்வகுடி மக்களின் வளர்ச்சிக்கு வர்த்தகம் - வேலை வாய்ப்பு -பிரதமர் துன் மகாதீர்

புத்ராஜெயா-

மலேசியவாழ் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

பூர்வகுடி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொள்வதற்கான தருணமிது. அதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி அரசு பூர்வகுடி மக்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கான திட்டங்களையும் உத்திகளையும் வகுத்து வருகிறது என்று புத்ராஜெயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பூர்வகுடி மக்கள் தேசிய மாநாட்டில் தலைமையுரை ஆற்றியபோது அவர்  சொன்னார்.

சுற்றுலாத் துறையுடன் இணைந்த வர்த்தக வாய்ப்பு பூர்வகுடி மக்களுக்கு பொருத்தமாக அமையும். அதன்வழி, தாங்கள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களையும் வனவள உற்பத்திப் பொருட்களையும் பூர்வகுடி தொழில் முனைவோர் சந்தைப்படுத்த முடியும்.

உட்புறப் பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடியினர்  வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் அதேவேளை தாங்கள் நிலையான வருமானம் ஈட்டும் சூழலையும் அமைத்துக் கொள்ளலாம்; அதன்வழி தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும்.  குறிப்பாக, பூர்வகுடி சமுதாயத்தில் இளம் தொழில்முனைவர்கள் அதிகமாக உருவாவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். தற்பொழுது அமலில் இருக்கும் பொருளாதாரக் கொள்கைக்கு உட்பட்டே இதை உருவாக்க முடியும் என்றும பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னதாக மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த பிரதமரை, பிரதமர் துறை அமைச்சரும் பூர்வகுடி மக்கள் நலத் துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான செனட்டர் பொன்.வேதமுர்த்தி பிரதமரை எதிர்கொண்டு வரவேற்றார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தல் சமயத்தில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து இந்த அரசு ஒருபோதும் பின்வாங்காது. அதன் அடிப்படையில், தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் 38-ஆவதாக இடம்பெற்றுள்ள பூர்வகுடி சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்னும் நிலையில்  நம்பிக்கைக் கூட்டணி அரசு உறுதியைக் கடைப்பிடிக்கும் என்றார்.

அதற்கு ஏதுவாக, பூர்வகுடி சமூக நலத்துறை(JAKOA), இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு ஏற்ப அது மாற்றி அமைக்கப்படும். அதன் அடிப்படையில்தான் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சின்கீழ் இருந்த இந்தப் பிரிவு, பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டு அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் கண்காணிப்பின்கீழ் தற்பொழுது செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 853 பூர்வகுடி கிராமங்கள் இருக்கின்ற நிலையில், 84 விழுக்காட்டு கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது; அதைப்போல சுமார் 80 விழுக்காட்டு கிராமங்களுக்கு மின் வசதியும் 79 விழுக்காட்டு கிராமங்களுக்கு நீர் விநியோக சேவையும் ஏழைக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 82% குடும்பங்களுக்கு வீட்டு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பூர்வகுடி சமுதாயத்திற்கு 100% விழுக்காட்டு வசதியை எல்லா வகையிலும் ஏற்படுத்தித் தருவதில் இந்த அரசு தொடர்ந்து அக்கறை காட்டும் என்றும் பிரதமர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு

கொழும்பு-
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட  வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியான வௌிநாட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

பலியானவர்களில் 8 பேர் இந்தியர்கள் எனவும், 6 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 26 பேர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 23 April 2019

தொடர் குண்டு வெடிப்பு; புலனாய்வில் களமிறங்குகிறது இன்டர்போல்

வாஷிங்டன்-
தொடர் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் டீம்' என்ற குழுவை அனுப்புவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது, பகுப்பாய்வு செய்வது ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள் டுவிட்டர் பதிவில்  இன்டர்போல் அறிவித்துள்ளது.
"தேவைப்பட்டால் டிஜிட்டல் தடயவியல், பயோமெட்ரிக்ஸ் ஆகியவற்றில் கூடுதல் நிபுணர்கள் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆய்வு செய்யும் நபர்களையும் அனுப்புவோம்" என்றும் அது.கூறியுள்ளது.

Monday, 22 April 2019

வெடிகுண்டு தாக்குதல்: 160 பேர் பலி' 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொழும்பு-
இலங்கையின் கொழும்பு, மட்டகளப்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயம், ஆலயம், ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில்160க்கும் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈஸ்டர் நாளை முன்னிட்டு அதிகமானோர் தேவாலயங்களுக்கு வந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலில் பலியாடவர்களில் 35 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

இலங்கையில் குண்டு வெடிப்பு: நூலிழையில் உயிர் தப்பினார் ராதிகா

சென்னை-

இலங்கை தலைநகர் கொழும்பு,  மட்டக்களப்பில்  இடங்களில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

மட்டக்களப்பு சீயோன் ஆலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில்102 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு சென்றிருந்த ராதிகா சரத்குமார் குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் "சின்னமான் கிராண்ட் ஹோட்டலிலிருந்து நான் புறப்பட்ட சிறிது நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்பமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Sunday, 21 April 2019

'ஹிண்ட்ராஃப்' போராட்டத்தை மறந்து விட்டாரா வேதமூர்த்தி?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்தியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக ஆளும் அன்றைய ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக 2007ஆம் தலைநகரில் நடத்திய 'ஹிண்ட்ராஃப்' போராட்டத்தை ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மறந்து  விட்டாரா? எனும் கேள்வி எழுகிறது.

அன்றைய தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என கூறி 25 நவம்பர் 2007இல் ஒரு லட்சம் இந்தியர்கள் ஹிண்ட்ராஃப்' போராட்டத்தில் பங்கெடுத்து தங்களின் அதிருப்தியை வெளிபடுத்தினர்.

இந்தியர்களின் இந்த அதிருப்தி அலையின் காரணமாக ஹிண்ட்ராஃப் சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியதோடு அந்த அமைப்பிற்கு தாம் தான் தலைவர் என கூறி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமையிலான அரசாங்கத்தில் துணை அமைச்சர் பதவியையும் தற்போதைய துன் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் வகித்து வருகிறார் வேதமூர்த்தி.

இந்தியர்களின் உரிமைக்காக மட்டுமே போராடி அமைச்சர் பதவியை தற்போது வகித்து வரும் வேதமூர்த்தி, மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் 'ஹுண்ட்ராஃப்' போராட்ட உணர்வை தற்போது காட்ட மறுப்பது ஏன்?

மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்களை டத்தோஸ்ரீ நஜிப் முன்பு வழங்கியிருந்தார்.
ஆனால் இன்றைய பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் 2,200 இடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதும் இந்தியர்கள் மத்தியில்ப, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2,200 அல்லது அதற்கு கூடுதலான மெட்ரிக்குலேஷன் வாய்ப்புகளை  வேதமூர்த்தி பெற்று கொடுப்பாரா? அல்லது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியிலும் இந்தியரின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறது என கூறி அமைச்சர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்வாரா? என்ற கேள்விக்கான   விடையை இந்திய சமுதாயம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

சாப்பிடுவதை பற்றி பேசுவதை விட உரிமைகளுக்காக குரலெழுப்ப வேண்டும்- கமலநாதன் சாடல்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய உணவகங்களில் உணவருந்துவதை பேசி கொள்வது பெருமை அல்ல. மாறாக இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கப்பதே மக்கள் பிரதிநிதிக்கு அழகானது என்று முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் இந்தியர்கள் சார்ந்த பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

இந்நிலையில்  மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் தகுதி வாய்ந்த  இந்திய மாணவர்கள் புறக்கணிகப்பட்டுள்ளது சமூகத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய இந்திய மாண்புமிகுகள் ஆக்ககரமான திட்டங்களை மேற்கொள்ளாமல் மெளனம் காப்பது இந்தியர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்திய உணவகங்களில் உணவருந்துவதை பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் இந்திய அமைச்சர், முதலில் இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முனைய வேண்டும்.

இந்தியர் உணவகங்களில் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவொன்றும் பெரிய விவகாரம் அல்ல, இந்தியர்களின் நலனுக்காக் குரல் கொடுப்பதும் போராடுவதுமே தலைவனுக்குரிய தகுதிகள் ஆகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கமலநாதன் குறிப்பிட்டார்.

இதற்கு முன், ரந்தாவ் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது உரையாற்றிய  மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், இந்தியர் உணவகங்களில் மட்டுமே சாப்பிடுவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரிக்குலேஷன்; இந்திய மாணவர்களின் எண்ணிக்கை என்ன? - கமலநாதன் கேள்வி

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் இவ்வாண்டு எத்தனை இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை கல்வி அமைச்சு வெளியிட தயக்கம் காட்டுவது ஏன்? என்று முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கேள்வி எழுப்பினார்.

முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின்போது இந்திய மாணவர்களுக்காக 2,200 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்கள் யாவும் இந்திய சமுதாயத்திற்காக தேமு அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களில் ஒன்றாகும்.

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்த்தி செய்யப்படாத பூமிபுத்ரா இடங்களையே இந்தியர், சீனர்களுக்கு வழங்கியதாக கூறப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பூமிபுத்ரா இடங்களை கொண்டு இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் முன்பு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அரசாங்கக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் இந்திய சமுதாயத்திற்கு 2,200 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டது.

தகுதி வாய்ந்த இந்திய மாணவர்களுக்கு கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும் எனும் நோக்கில் 105இல் தொடங்கிய மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 2,200 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால் இன்றைய பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் எத்தனை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற விவரத்தை பொதுவில் வெளியிட தயக்கம் காட்டுவது?

மெட்ரிக்குலேஷன் பயில எத்தனை இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்ற விவரத்தை கல்வி துணை அமைச்சர், அல்லது இந்திய அமைச்சர்கள் பொதுவில் அறிவிக்க வேண்டும். 

அதோடு மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அதன் நகலை எங்களிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஇகா கல்வி பிரிவு தலைவருமான டத்தோ கமலநாதன் வலியுறுத்தினார்.

Saturday, 20 April 2019

மெட்ரிக்குலேஷன்: 2,200 இடங்கள் 'On- Off' முறையைச் சார்ந்ததா? மஸ்லி மாலிக்கை சாடினார் நஜிப்

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,200 மெட்ரிக்குலேஷன் இடங்கள் 'On- Off' (தற்காலிகமானது) முறையை சார்ந்தது அல்ல என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி அடையும் இந்திய மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 1,500 இல் இருந்து 2,200ஆக அவ்வெண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

கல்வி அமைச்சர் சொல்வதை போல் 'On- Off' முறையின்படி வாய்ப்புகள் ஏற்படுத்தவில்லை எனவும்  பூர்த்தி செய்யப்படாத மலாய்க்காரர்களின் இடங்களையே ஒதுக்கீடு செய்ததாகவும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

இந்திய சமுதாயத்திற்காக சிறப்பு திட்டத்தின் கீழ் 2,200 இடங்கள் ஒதுக்கப்பட்டது என்று பேஸ்புக் பக்கத்தில் டத்தோஸ்ரீ நஜிப் இவ்வாறு குறிப்பிட்டார்.

'On- Off' திட்டம் என அதனை மிக சர்வ சாதாரணமாக குறிப்பிட வேண்டாம் என்று கல்வி அமைச்சரை சாடிய நஜிப், இந்த 2,200 இடங்களை இன்னும் அதிகரிக்க தேமு திட்டம் கொண்டிருந்தது என்று அவர் சொன்னார்.

போயிங் விமானம் பயன்படுத்தி படமாக்கப்படும் விஷாலின் புதிய படம்

சென்னை-
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் விஷால் தற்போது நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நாயகியாக நடிகை தமன்னா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரமாண்டமான போயிங் 757/200 ரக விமானத்தை படக்குழுவினர் பயன்படுகின்றனர். இந்த படத்தின் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ஸ் இயக்க ஏற்பாட்டில் கே.ஜே.பாபுவின் ‘யா ரஹுமானே’ ஆல்பம் வெளியீடு கண்டது

ரா.தங்கமணி


கோலாலம்பூர், ஏப்.20-

நாட்டின் கலைத்துறையில் நன்கு அறிமுகமான கே.ஜே.பாபுவின் இசையில் மலர்ந்துள்ள ‘யா ரஹுமானே’ ஆல்பம் வெளியீடு அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் எஸ்டபிள்யூ மண்டபத்தில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது.

சஹாபாட் இந்திய முஸ்லீம் செமலேசியா (சிம்ஸ்) ஏற்பாட்டில் கே.ஜே.பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது.

சிம்ஸ் இயக்கத்தின் தலைவர் ஹாஜி சைட் புஹாரி இந்த ஆல்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
இந்த ஆல்பம் குறித்து பேசிய கே.ஜே.பாபு, இதுநாள் வரை மலேசியக் கலைஞர்களின் முழுமையான பங்கெடுப்பில் இஸ்லாமிய பாடல்கள் அடங்கிய தொகுப்பு வெளியீடு கண்டதில்லை.

மலேசியக் கலைஞர்கள் இந்தியாவிலும் இந்தியக் கலைஞர்களின் தயாரிப்பிலான இஸ்லாமிய பாடல் தொகுப்புகளே வெளியீடு கண்டு வந்தன. இப்போதுதான் முதன் முறையாக மலேசியக் கலைஞர்களின் முழு பங்களிப்பில் ‘யா ரஹுமானே’  பாடல் தொகுப்பு வெளியிடப்படுகிறது.

9 பாடல்கள் அடங்கிய இந்த பாடல் தொகுப்புக்கு தாம் இசையமைத்துள்ளதாகவும் ‘இறையருள்’ கவிஞர் சீனி நைனா முகமது, ரஸிடா பேகம் பாடகர் சைட் அலி  உட்பட நானும் பாடலை எழுதியுள்ளேன்.
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் எனும் நோக்கில்‘யா ரஹுமானே’  ஆல்பம் மலேசிய கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த பாடல் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு தொழிலதிபர்கள், சமூக ஆரவலர்கள் உட்பட பல்வேறு இந்திய முஸ்லீம் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பாடல் தொகுப்பை வாங்கி ஆதரவு கொடுத்தனர்.

Friday, 19 April 2019

600மேற்பட்ட குழந்தைகள் ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டன் தேர்வுச் சுற்றில் கலந்து கொண்டனர்


கோலாலம்பூர்-
கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 13ஆம் தேதி புக்கிட் கியாரா, ஜுவாரா அரங்கத்தில் நாடு தழுவிய நிலையில் நடைபெற்று வரும் 4ஆவது ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டன் தேர்வுச் சுற்றில் கோலாலம்பூரில் 7 முதல் 12 வயதிற்கு உட்பட்ட 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டார்கள். இந்தத் தேர்வுச் சுற்றில் நம்முடைய மலேசிய இந்தியர் குழந்தைகளும் கலந்து கொண்டு தங்களுடைய பூப்பந்து விளையாட்டு திறமையை வெளிக்காட்டியுள்ளார்கள்.

2012-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆஸ்ட்ரோ கேம் பேட்மிட்டன், 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளார்கள். நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அடிப்படையில், பூப்பந்து விளையாடும்  திறமையான குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி சிறந்த விளையாட்டாளராக உருவாக்குவதே ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டனின் தலையாய நோக்கமாகும்.



அவ்வகையில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த பூபதி வேலயுதம் கேம் பேட்மிண்டனில் கலந்து கொண்டு மாநில ரீதியில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆகவே, தேசிய, சர்வதேச பூப்பந்து போட்டிகளில் தொடர்ந்து குழந்தைகள் தங்களுடைய திறமைகளைத் தக்க வைத்துக்கொள்ள ஆஸ்ட்ரோவின் கேம் பேட்மிண்டன் திட்டம் கடமைப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டன் தேர்வுச் சுற்று இவ்வாண்டு நாடு தாழுவிய 6 இடங்களில் இடம்பெறவுள்ளது. வரும் ஏப்ரல் 20, 27ஆம் தேதி முறையே சபாவில் கோத்தா கின்பாலு, சரவாக்கில் குசிங் எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

மேல் விவரங்களுக்கு www.astrokasih.org/ms/kem-badminton அல்லது www.facebook.com/myastrokasih முகநூல் அகப்பக்கத்தை வலம் வருங்கள்.


மீண்டும் வந்துவிட்டது ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி


கோலாலம்பூர்-
திறமையான படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

9ஆவது முறையாக நடைபெறவுள்ள இவ்வாண்டு ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டியில் 18 வயதுக்கு மேம்பட்ட மலேசியர்கள் கலந்துகொள்ளலாம். 13-15 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தைத் தயாரிக்க வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் ஆஸ்ட்ரோ உலகம் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடி, அங்குள்ள குறும்படப் போட்டியின் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.

இந்தப் போட்டியின் முதல் நிலை வெற்றியாளருக்கு ரிம 10,001 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் முறையே வெ.7,501 மற்றும் வெ.5,001 ரொக்கப் பரிசு தட்டிச் செல்லலாம். ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரிம 2,501 ரொக்கம்  வழங்கப்படும். அதுமட்டுமின்றி, வெற்றி பெறும் அனைத்து குறும்படங்களும் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ செயலியில் ஒளிபரப்பப்படும்.

எதிர்வரும் மே 14ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் தங்களுடைய படைப்புகள் அனுப்பி வைக்க வேண்டும். ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டியை குறித்து மேல் விவரங்களை அறிய www.astroulagam.com.my/shortfilm என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர்

சென்னை-
தமிழகத்தில் இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று காலை ரஜினி, கமல், விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க சென்னை வளசரவாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்றபோது அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதேபோல், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படவில்லை கூறப்படுகிறது.

தமிழக தேர்தல்; வாக்கை செலுத்திய திரை பிரபலங்கள்


சென்னை-
இன்று காலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய 40 நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி முதல் தொடங்கியது.

ரஜினிகாந்த்
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கை செலுத்தினார். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தமது மனைவி ஷாலியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.

விஜய்
நீலாங்கரையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று  தனது வாக்கை பதிவு செய்தார்.

கமல்ஹாசன்
தேனாம்பட்டையில் உள்ள பள்ளியில் நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் வாக்களித்தார். இங்கு வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் காத்திருந்து தனது வாக்கை கமல்ஹாசன் செலுத்தினார்.

Thursday, 18 April 2019

ஐ.நா. ஒப்பந்தத்திற்கு ஏற்ப கல்வி உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்- கணபதிராவ் வலியுறுத்து

ஷா ஆலம்-
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மக்கள் மத்தியில் குறிப்பாக பெற்றோரிடத்தில் ஆளும் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வையே உண்டாக்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் வலியுறுத்தினார்.

ஐநாவின் சிறார் உரிமை மாநாட்டு ஒப்பந்தம் பிரிவு 28இன் கீழ் அனைத்து மாணவருக்கும் கல்வி உரிமை தரப்பட வேண்டும். அதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி உரிமை வழங்கிட கடமைப்பட்டுள்ளது.

கல்வி உரிமையை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுமேயானால் அது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில் 8ஏ,9ஏ பெற்ற மாணவர்கள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த புறக்கணிப்புக்கு பி40 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என காரணம் சொல்வது ஏற்புடையதல்ல.

மெட்ரிக்குலேஷன் தேர்வுக்கான கல்வி தரம், இன விகிதாச்சார அடிப்படை புள்ளி விவரங்களை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்த புள்ளி விவரங்கள் ரகசியமானது அல்ல என்பதால் அதனை பொதுவில் வெளியிட அரசாங்கம் தயக்கம் காட்டக்கூடாது என கணபதிராவ் குறிப்பிட்டார்.

மெட்ரிக்குலேஷன்: நஜிப் வழங்கிய 2,200 இடங்கள் என்னவானது? சரவணன் கேள்வி

கோலாலம்பூர்-
தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக 2,200 இடங்களை  ஒதுக்கிய நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அவ்வெண்ணிக்கை என்னவானது? என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேள்வி எழுப்பினார்.

2019ஆம் ஆண்டுக்கான மெட்ரிக்குலேஷன் மாணவர் தேர்வில் தகுதியுடைய இந்திய மாணவர்கள் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்று மஇகாவின் முயற்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமையில் இந்திய மாணவர்களுக்காக 2,200 இடங்களை ஒதுக்கப்பட்டது.

ஆனால் இன்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அந்த எண்ணிக்கை பூர்த்தி செய்யப்பட்டதா? எத்தனை இந்திய மாணவர்களுக்குதான் மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது?

மஇகா அன்று அவ்வளவு செய்தும் குறை கூறி கொண்டிருந்த இன்றைய மாண்புமிகுகள் ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதிக்கின்ற போதிலும் இவ்விவகாரம் தலை தூக்குவது ஏன்?

மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் 2,200 எண்ணிக்கையை முடிந்தால் அதிகரியுங்கள். இல்லையேல் அந்த எண்ணிக்கையை நிலைநிறுத்தி இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். இந்திய சமுதாயம் என்றுமே உங்களை மறவாது என்று மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் வெளியிட்டுள்ள குரல் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

அதோடு, மெட்ரிக்குலேஷன் விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கிற்கு டத்தோஸ்ரீ சரவணன் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Wednesday, 17 April 2019

'தர்பார்' திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம்?

சென்னை-

'பேட்ட' படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதி மும்பையில் துவங்கியது.

இந்தப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் என இரு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.

இந்நிலையில், தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும். பிளாஸ்பேக்கில் வரும் தந்தை சமூக ஆர்வலராகவும், அவரது மகனான ரஜினி காவல் அதிகாரியாகவும் நடிக்கவுள்ளார் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ரிக்குலேஷன் விவகாரம்; மஇகாவை விமர்சித்த மாண்புமிகுகள் மெளனம் காப்பதா?

ஆதிரன்

கோலாலம்பூர்-
எஸ்பிஎம் தேர்வு முடிவுக்குப் பின்னர் மெட்ரிக்குலேஷன் முடிவுக்காக காத்திருந்த பெரும்பாலான இந்திய  மாணவர்களின் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்றும் மெட்ரிக்குலேஷன் பயிலும் வாய்ப்பு கிடைக்காமல் அலைகழிக்கப்படும் இந்திய மாணவர்களின் வேதனை பக்காத்தான் ஆட்சியிலும் தொடரத்தான் வேண்டுமா? என்ற ஆதங்கம் இந்திய சமுதாயத்தின் மத்தியில் எழுந்துள்ளது.

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற மாணவி ஒருவரின் மெட்ரிக்குலேஷன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் பலரின் பரிதாப நிலை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின்போது ம இகாவின் முயற்சியில் 1,500 மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மஇகா முன்னெடுத்த இந்த முயற்சியையே விமர்சனம் செய்த இன்றைய மாண்புமிகுகள் (அன்றைய எதிர்க்கட்சியினர்) தங்களது ஆட்சியில் இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரலெழுப்ப தயக்கம் காட்டுவது ஏன்?


தேமுவையும் மஇகாவையும் விமர்சித்தே அரசியல் செய்த மாண்புமிகள் பலர் ஆளும் அரசாங்கமும் ஆட்சியும் நம்மிடையே உள்ளது என்பதை உணர்ந்து இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவதே சாலச் சிறந்ததாகும்.

Tuesday, 16 April 2019

பக்காத்தான் கூட்டணிக்கு இந்தியர்களின் ஆதரவு சரிந்து வருகிறது- சிவகுமார் எச்சரிக்கை

கோலாலம்பூர்-

தேசிய முன்னணியை புறக்கணித்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய இந்தியர்கள் தற்போது மீண்டும் தேசிய முன்னணிக்கு திரும்புவதை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் எச்சரித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலின்போது இந்திய சமுதாயம் பெருமளவு ஆதரவை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வழங்கினர். ஆனால் நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் (கேமரன் மலை, செமினி, ரந்தாவ்) இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கு சரிந்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீது இந்திய சமுதாயம் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தது. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கைச் செலவீனம் போன்றவற்றில் ஆளும் அரசாங்கம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் இந்திய சமுதாயத்தின் மத்தியில் மனநிறைவை அளிக்காததால் இந்தியர்களின் ஆதரவு சரிந்து வருகிறது.

ஆயினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை. இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முனைய வேண்டும். அப்போதுதான் இந்திய சமுதாயத்தின் ஆதரவு இக்கூட்டணிக்கு வலுவாக இருக்கும் என்று ஜசெக துணைச் செயலாளருமான சிவகுமார் குறிப்பிட்டார்.

மாயமான இரு தோழிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா-
நேற்றிரவிலிருந்து (ஏப்.14) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட இரு இந்திய சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற திவ்யா, நட்சத்திரா ஆகிய இரு பதின்ம வயது தோழிகள் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அவ்விருவரும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுவர் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சானி பின் சே மாட் தெரிவித்தார்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என கூறிய அவர், அதன் பின்னரே அவர்கள் எவ்வாறு மாயமாகினர் என்பது தெரிய வரும் என்றார்.

ஆலயத்திற்குச் சென்ற சிறுமிகள் மாயம்

பெட்டாலிங் ஜெயா-
நேற்று கொண்டாடப்பட்ட சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற இரு பதின்ம வயது சிறுமிகள் மாயமானது தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

எம்.திவ்யா (16),என்.நட்ஷத்தரா (15) ஆகிய இரு சிறுமிகளும் நேற்றிரவு 11.40 மனியளவில் ஜாலான் காசிங் இண்டா, மெக்ஸ்வெல் டவர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய திவ்யாவின் தாயார் தி.சாந்தி, பள்ளி தோழிகளான இருவரும் தமிழ்ப் புத்தாண்டு பூசைக்காக ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
சில சமயங்களில் நட்ஷத்தரா வீட்டில் பொழுதை கழிக்கு திவ்யா, 10 நிமிடங்களில் வீட்டிற்கு வந்து விடுவார்.

ஆனால் சம்பவத்தன்று இரவு 11.00 மணியளவில் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய திவ்யா, கிரேப் வாகனத்திற்கு காத்திருப்பதாக கூறினார். ஆனால் இன்னமும் வீட்டிற்கு வரவில்லை என்று அவர் சொன்னார்.

நட்ஷத்தராவுடன் வீட்டின் கீழ்த்தளத்தில் கிரேப் வாகனத்திற்காக காத்திருந்த வேளையில் பின்னர் அதனை ரத்து செய்துள்ளனர்.

இதன் தொடர்பில் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரிடம் விசாரித்தபோது இரு சிறுமிகள் நடந்து சென்றதை கண்டதாக கூறியுள்ளார்.
10 நிமிடங்களுக்குள் என்ன நடந்து என்பதை கணிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

சிறுமிகள் மாயமானது தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீஸ் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஷானி சே டின், இப்புகாரை உறுதிபடுத்தியதோடு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சொன்னார்.

அதே வேளையில் இத்தகைய சம்பவம் பற்றி நிறுவனம் அறிந்திருக்கவில்லை என்று கிரேப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.  அவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்ததால் அதன் ஓட்டுநர் பயணி வேறொரு பயணியை ஏற்றிச் சென்றதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவலை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இச்சிறுமிகளை காண்போர் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.


ரயில் மோதி தள்ளியதில் இருவர் மரணம்


கோலாலம்பூர்-
சுங்கை பூலோவிலிருந்து கெப்போங் நோக்கி வந்த கேடிஎம் ரயில் மோதியதில் இரு அந்நிய நாட்டவர்கள் மரணமடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.03 மணியளவில் நிகழ்ந்தது.

30 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தபோது மியன்மார் நாட்டைச் சேர்ந்த அவ்விருவரும் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதி தள்ளியது என்று கேடிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவ்விருவரையும் ரயில் மோதி தள்ளிய பின்னர் அதன் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சவப்பரிசோதனைக்காக அவ்விருவரின் சடலங்களும் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.


Sunday, 14 April 2019

ரந்தாவை தற்காத்தது தேமு

சிரம்பான்-
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

10,397 வாக்குகளை பெற்று முகமட் ஹசான்  முன்னிலை வகித்த நிலையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் 5,887 வாக்குகளையே பெற்றார்.

சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கிய இருவர் சொற்ப வாக்குகளையே பெற்றனர்.

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்

சென்னை-
நாயகன், எல்கேஜி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்த நடிகர் ஜே.கே. ரித்தீஷ் தேர்தல் பிரச்சாரத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

46 வயதான ஜே.கே.ரித்தீஷ் ஏம்.18ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக கேணிக்கரை பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

நடிகரும் ராமநாதபுரம் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷ் மரணம் அடைந்தது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தமது அதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.