ரா.தங்கமணி
சிரம்பான் -
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் மிகவும் பலம் வாய்ந்த ஒரு போட்டியாக கருதப்படுவதோடு இதில் மலேசியர்களின் ஒற்றுமையை புலப்படுத்தும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
அம்னோ, தேமுவின் இடைக்காலத் தலைவராக விளங்கும் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் இத்தொகுதியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் நாட்டின் வருங்கால பிரதமர் எனும் தோரணையுடன் இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.
ஆனால் மதவாதத்தை மையமாக வைத்து செயல்படும் பாஸ் கட்சியும் இனவாதத்தை மையமாக கொண்டு செயல்படும் அம்னோவும் மக்களை பிரித்தாளும் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
ஆனால் டாக்டர் ஶ்ரீராம் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழந்த போதிலும் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி கண்டதால் இந்த இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றார்.
புதிய மலேசியாவில் இனம் சார்ந்த கருத்து வேறுபாடுகளை மறந்து மலேசியராய் ஓரணியில் திரண்டதன் விளைவாக 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சிக்கு முடிவு கட்டி பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி ஆள வழிவகுத்தது.
அதே போன்று இந்த இடைத் தேர்தலில் இனம், மதம் சார்ந்த விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் மலேசியராய் ஓரணியில் திரண்டு டாக்டர் ஶ்ரீ ராமின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment