கோ.பத்மஜோதி, ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற கல்வியே மிகச் சிறந்த ஆயுதம் ஆகும். கல்வி ஒன்றினால் மட்டுமே வாழ்விலும் சமுதாயத்தில் ஓர் உன்னத நிலையை அடைய முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கல்வியில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதையே பலர் தங்களது குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறனர். அதில் பலர் வெற்றி கொள்வதும் சிலர் பின்தங்கி விடுவது வாடிக்கையான ஒன்றாக அமைந்து விட்டது.
கல்வியின் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சிய வேட்கை கொண்டுள்ள மாணவர்களிடையே பற்றி எரியும் தீப்பொறியை சுடர் விடும் ஜோதியாக மாற்றும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இராஜயோக சக்திமிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம் (ஆர்பிடி) கல்வி கருத்தரங்கை அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தது.
ஆர்பிடி இயக்கத்தின் ஸ்தாபகர் யோகஞான சித்தர் ஓம்ஶ்ரீ இராஜயோக குரு டத்தோஶ்ரீ வி.பாலகிருஷ்ணன், அவர்தம் துணைவியார் டத்தின்ஶ்ரீ சுந்தரி பாலகிருஷ்ணன் அவர்களின் ஆசியோடு நேர்த்தியான முறையில் இப்பயிலரங்கு நடைபெற்றது.
இந்த பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வழிமுறைகள், எளிமையான முறையில்
கல்வி பயில்வதற்கான அணுகுமுறைகள் ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டன.
கல்வி மட்டுமின்றி பசுமை புரட்சியை மாணவர்களிடையே விதைக்கும் வகையில் 'ஒரு வீடு, ஒரு மரம், ஓர் ஆண்டு' எனும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு 450 மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த மரக்கன்றுகளை மாணவர்கள் தத்தம் பள்ளிகள் நடவு செய்து அதனை முறையாக பராமரித்து வர வேண்டும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் கல்வி அமைச்சின் கல்வி தொழில்நுட்பப் பிரிவின் துணை தலைமை இயக்குனருமான ஜெயகுமார் தெரிவித்தார்.
இந்த கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடிக்கும் வரை 10 மாணவருக்கு ஓர் ஆசிரியர் எனும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.
நாடு தழுவிய நிலையில் பிடி3, எஸ்பிஎம், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக நடைபெற்ற இந்த கல்விக் கருத்தரங்கில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கல்வி கருத்தரங்கு வெற்றிகரமாக நடந்தேற நிபுணத்துவ ஆசிரியர்கள், 250 தன்னார்வலர்கள் சிறந்த முறையில் தங்களது சேவையை வழங்கினர்.
இராஜயோக சக்திமிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம் (ஆர்பிடி) மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தியான மையங்களை அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment