Monday, 31 December 2018

A BRAND-NEW TELEMOVIE “RAIL PAYANANGAL” ON ASTRO VAANAVIL

Kuala Lumpur-

To close off the year with a bang while setting the mood for 2019, Astro Vaanavil (CH 201) will showcase a brand-new telemovie, Rail Payanangal, written and directed by renowned director, Shalini Balasundram, who also directed Geethayin Raadhai and Thirudathey Papa Thirudathey. Rail Payanangal will be shown on Astro Vaanavil (CH 201) and Astro GO on January 1, 2019 at 4pm.


Synopsis
Since her father passed away, Sweetha, a young physiotherapist, now looks after her father’s watch shop in Brickfields. Her mother is currently looking for a potential groom for Sweetha but Sweetha finds it difficult to match her own principles with the suitors her mother introduces to her.

One day, during her journey to work, Sweetha notices Vijay who coincidentally dropped his watch in the train. She picks it up and tries to return it to him but is unable to. Sweetha eventually meets Vijay again and as their friendship blossoms, they fall in love. Unbeknownst to Sweetha, Vijay is in a marriage to Risha which is not supported by his parents. However, Vijay and Risha end up in a huge conflict which leads to them separating. While all of this takes place, Sweetha’s mother has also found a suitable groom for her, Vinoth.

Will Vijay convince Sweetha to give him a chance, or will she choose to marry Vinoth?

Cast
Shalini Balasundram, Kabil Ganesan, Yawanes Robert, MS. Karthik, Aahmuu Thirunyanam, Phonenix Dassan, Gunasegran Karuppiah, Kalaiselvy and Susila Devi

Music Composer
Jay Raggaveindra

Singer
Thanneer Narayanan

Cinematographer, Colourist & Editing
Sathish Natarajan

For more details, please log on www.astroulagam.com.my.

ஆஸ்ட்ரோ வானவிலில் “இரயில் பயணங்கள்” புத்தம் புதிய டெலி மூவி


கோலாலம்பூர்- 

‘கீதையின் ராதை’, ‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படங்களின் இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் எழுதி இயக்கி நடித்துள்ள “இரயில் பயணங்கள்” புத்தம் புதிய டெலி மூவி அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் ஒளியேறவுள்ளது.


கதைச் சுருக்கம்
இயன்முறை மருத்துவரான (Physiotherapist) சுவேதா, குடும்ப சூழ்நிலையால் தன்னுடைய தந்தையின் வியாபாரத்தை ஏற்றிக் கொண்டு ஒரு வாட்ச் மெக்கானிக்காக இக்கதையில் வலம் வருகின்றார். பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய கடைக்கு ஒவ்வொரு நாளும் சுவேதா இரயிலில் பயணம் செய்கிறார்.

தன்னுடைய மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடும் சுவேதாவின் அம்மா ஒரு புறம், தனக்கு வாழ்க்கைத் துணையாக வரப் போகும் ஆண் தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோள்களுக்கு பொருத்தமானவராக இருக்க வேண்டும் என சுவேதா ஒருபுறம் என்று கதை நகர்கின்றது. 

இரயில் பயணத்தின் போது சுவேதா விஜயைச் சந்திக்கிறார். இவர்களின் சந்திப்பு முதலில் நட்பில் தொடங்கி, பிறகு காதலாக மாறுகின்றது. நாட்கள் நகர எதிர்பார்க்காத சம்பவங்கள் இக்கதையில் நடக்கின்றது. இறுதியில், சுவேதா மற்றும் விஜய் ஒன்று சேர்கின்றார்களா அல்லது தன்னுடைய தாயார் பார்க்கும் மணமகனைச் சுவேதா திருமணம் செய்து கொள்கிறாரா? என்பதுதான் கதையாகும்.

கதாப்பாத்திரங்கள்
இந்த டெலி மூவி விழுதுகள் அறிவிப்பாளரும் நடிகருமான கபில் கணேசன், யவனேஸ் ரோபாட், கார்த்திக், அம்மு திருஞானம், ஃபீனிக்ஸ்தாசன், குணசேகரன் கருப்பையா, கலைச்செல்வி, சுசீலா தேவி எனப் பலர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நம் உள்ளூர் இசையமைப்பாளர் ஜெய் ராகவேந்திரா இசையில் இந்த டெலிமூவியில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை இளம் பாடகர் தண்ணீர் நாராயணன் பாடியுள்ளார். அதே வேளையில், இந்த டெலி மூவியை சதீஸ் நடராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“இரயில் பயணங்கள்” குறித்த மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் முகநூல் அல்லது www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

கேமரன் மலை: தேமு வேட்பாளராகிறாரா டத்தோ முருகையா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
விரைவில் இடைத் தேர்தலை சந்திக்கவுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ.முருகையா களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்பாளரை களமிறக்க மஇகா முனைகிறது.

மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான இங்கு மஇகா வேட்பாளரே களமிறக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு போட்டியிட தகுதி வாய்ந்த வேட்பாளராக டத்தோ முருகையாவுக்கே வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

முன்னாள் துணை அமைச்சராக பதவி வகித்த அனுபவமும்  மஇகாவின் உதவித் தலைவராக பதவி வகிப்பதும் அவருக்கு இந்த இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சூழல் அதிகமாக உள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் கேமரன் மலைக்கான தேமு வேட்பாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்பதும் டத்தோ முருகையாவை தவிர்த்து வேறு வேட்பாளர் யாராவது களமிறக்கப்படுகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, 29 December 2018

போட்டியிடவும் வாக்களிக்கவும் முடியாது; சிவராஜுக்கு விழுந்தது தடை


கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த டத்தோ சி.சிவராஜ் இனி ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் முடியாது என தேர்தல் ஆணையத் தலைவர் அஷார் ஹருண் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பூர்வக்குடியினத் தலைவர்களுக்கு கையூட்டு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிவராஜின் வெற்றி செல்லாது என சிறப்பு தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த சிவராஜ், தேர்தல் குற்றச் சட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு  தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோடு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

தற்போது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்த பின்னர் இடைத் தேர்தலில் சிவராஜ் போட்டியிட முடியாது என்ற முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாக அஷார் ஹருண் தெரிவித்தார்.

அடுத்தான்டு ஜனவரி 26ஆம் தேதி  கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி வேட்புமனு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'பரிவுமிக்க அரசாங்கம்' திட்டத்தின் கீழ் புது வீடு பெற்றனர் லெட்சுமணன் தம்பதியர்


ரா.தங்கமணி

சபாக் பெர்ணாம்-
மிக மோசமாக சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த கு.லெட்சுமணன் - திருமதி ஜெயா தம்பதியர்  சிலாங்கூர் மாநிலத்தின் அரசின்  'பரிவுமிக்க அரசாங்கம்' எனும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டை பெற்றுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் புதிய வீட்டை பெறுவதற்கு முயற்சி செய்த இவர்களுக்கு சபாக் பெர்ணாம் மாநகர் மன்ற உறுப்பினர் ஹரிகுமார் முயற்சியில்  'பரிவுமிக்க அரசாங்கம்' திட்டத்தின் கீழ் 52,000 வெள்ளி செலவில் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

சபாக் பெர்ணாம், கம்போங் ராஜாவில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இக்குடியிருப்பின் சற்று தொலைவில் இந்த புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தம்பதியர் புதிய வீட்டை பெறுவதற்கு பெரும் உதவி புரிந்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஹரி குமார் தெரிவித்தார்.

Sunday, 23 December 2018

வேதமூர்த்தி அமைச்சராக நீடிக்க வேண்டும்- ம.இ.ச. வேண்டுகோள்

கோலாலம்பூர்-
பிரதமர் துறை அமைச்சராக பொன்.வேதமூர்த்தி  நீடிக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் தாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்திற்கு மலேசிய இந்து சங்கம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆனால் அச்சம்பவங்களை காரணம் காட்டிஅமைச்சர் வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்வது நியாயமானது அல்ல. நாட்டின் நல்லிணக்கத்திற்கும் இந்து சமய விவகாரங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் வேதமூர்த்தி அப்பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மோகன் ஷாண் வெளியிட்டுள்ள அறிக்கை


நடவடிக்கைக்கு தயார்; மன்னிப்பு கோரமாட்டேன் - ராமசாமிக்கு சைட் சித்திக் பதிலடி

கோலாலம்பூர்-
பிரதமர் துறை அமைசர் பொன்.வேதமூர்த்தியை பதவி விலகச் சொன்னதில் தாம் தவறு இழைத்திருந்தால் அதற்கான நடவடிக்கைக்கு தயாராகவே இருக்கிறே. இவ்விவகாரத்தில் தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சித்திக் கூறினார்.

வேதமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பெர்சத்து கட்சி இளைஞர் பிரிவு பிரதமர் துன் மகாதீரிடம் மகஜர் வழங்கியதற்கு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கண்டனம் தெரிவித்தார்.

இச்செயல் துன் மகாதீரின் அமைச்சரவையை அவமதிக்கும் வகையில் உள்ளது சைட் சித்திக் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ராமசாமி வலியுறுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்த சைட் சித்திக், நான் தவறு இழைத்திருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதற்கு நான் அஞ்சப்போவதில்லை. ஆனால் வேதமூர்த்தியை பதவி விலக்குமாறு மகஜர் வழங்கியது தொடர்பில் மன்னிப்பு கோரப்போவதில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

Saturday, 22 December 2018

முகமட் அடிப்பின் சவப் பரிசோதனை விரைவில் வெளியிடப்படும் - டான்ஶ்ரீ முஹிடின்

மூவார்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலில் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான சவப்பரிசோதனை அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

இந்த சவப்பரிசோதனை அறிக்கை போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸு ஹருண் விவரிப்பார்.

சவப் பரிசோதனை அறிக்கை முழுமை பெறுவதை போலீஸ், மருத்துவரிடம் ஒப்படைக்கிறேன். இன்னும் சில நாட்களில் அந்த சவப் பரிசோதனை வெளியிடப்படும் என்றார் அவர்.

வேதமூர்த்தி தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும்- காடீர் ஜாசின்

கோலாலம்பூர்-
மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதால்  ஒருமைப்பாடு- சமூகநலத் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தி தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ஏ.காடீர் ஜாசின் வலியுறுத்தினார்.

பிரதமர் துன் மகாதீருக்கு சிரமத்தை கொடுக்காமல் தன்னார்வ முறையில் வேதமூர்த்தியே அப்பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

வேதமூர்த்தியின் செயல்பாடுகள் மனநிறைவு அளிக்காததால் இவ்வாறு கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

"வேதமூர்த்தி அமைச்சராக பொறுப்பேற்கும்போது அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன் ஆனால் அவர் ஒரு தகுதியற்றவர் என கூறுவதால் மன்னிப்பு கோருகிறேன்' என்று தமது வலைதத்தில் பதிவிட்டார்.

வேதாவை பதவி விலகச் சொல்வதா?; அடிப்படையற்றது- மணிமாறன் சாடல்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தியை விலகச் சொல்வது ஏற்புடைய ஒரு செயல் அல்ல என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கும் அதன் பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதால் மரணமடைந்த தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் மரணத்திற்கும் எவ்விதத்திலும் அமைச்சர் வேதமூர்த்தி பொறுப்பேற்க முடியாது.

இவ்விரு சம்பவங்களும் யாருமே எதிர்பாராத நிலையில் நடந்த ஒன்றாகும். அதற்கு வேதமூர்த்தி எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

ஒருமைப்பாடு- சமூகநலத்துறை பொறுப்புக்கு பதவியேற்றுள்ளதால் நாட்டிலுள்ள இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை காக்கத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி விலகச் சொல்வது நியாயமாகாது.

சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கு யார் மூலக் காரணம் என்பதை நாடே அறியும். அப்படியிருக்கும்போது வேதமூர்த்தி மீது மட்டும் குறி வைத்து தாக்குதல் தொடுப்பது ஏற்க முடியாததாகும்.

வீணான கோரிக்கைகள் விடுத்து நாட்டில் இன்னமும் இனவாத அரசியலை தூண்டி கொண்டிருப்பதை விட 'புதிய மலேசியாவை' கொள்கையை அறிவித்த பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதனை செயல்படுத்துவதில் முக்கியத்துவம் காட்ட வேண்டுமே தவிர இதுபோன்ற விவகாரங்களில் அல்ல என்று மணிமாறன் மேலும் சொன்னார்.

வேதாவுக்கு எதிராக பேரணி- மகஜர் சமர்பிப்பு

புத்ராஜெயா-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிம் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தின் எதிரொலியாக பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சில முஸ்லீம் அமைப்பினர் இன்று அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

இன்று  புத்ராஜெயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் பிரதமர் துறை அலுவகத்திற்கு வந்த நூற்றுக்கணக்கானோர் வேதாவுக்கு எதிராக  குரல் எழுப்பினர்.

இதில் கலந்து கொண்டவர்கள் மறைந்த முகமட் அடிப்பின் படத்தை ஏந்தியதோடு 'வேதாவை நீக்கவும்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தினர்.

இந்த அமைதி மறியலில் சில தலைவர்கள் உரையாற்றிய பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு நடந்துச் சென்று மகஜர் சமர்ப்பித்தனர்.

ஊழல் குற்றச்சாட்டு இல்லை; சிவராஜ் வேட்பாளராக களமிறங்கலாம்- யுகேஎம் பேராசிரியர்

கோலாலம்பூர்-
ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தப்படாததால் மஇகா உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ்  கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கலாம் என்று கிளாந்தான் மலேசிய பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் டத்தோ டாக்டர் அப்துல் ஹலிம் சிடேக் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியதாக மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டதால் அவரது வெற்றி நிராகரிக்கப்பட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ் ஆகியவற்றில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படாததால்  இந்த இடைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு சிவராஜுக்கு எவ்வித தடையும் இல்லை.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ சிவராஜின் வெற்றி எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பூர்வக்குடியினத் தலைவர்களுக்கு பணம் வழங்கியது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவரது வெற்றி செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் சிறப்பு தேர்தல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மஇகா மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்த நிலையில் 14 நாட்களுக்கு பின்னர் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தெதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மறைந்தவர்களின் பெயரையே பள்ளிகளுக்கு சூட்ட முடியும்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
அமைச்சர்களின் பெயர்கள் பள்ளிகளுக்கு சூட்ட வேண்டுமென்றால் அவர்கள் இறந்திருக்க வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

1974 முதல் 1977 வரை கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சர்களின் பெயரை பள்ளிகளுக்கு சூட்ட தடை விதித்தேன்.

அதனால்தான் இன்றைய காலத்தில் அமைச்சர்களின் பெயர்கள் எந்தவொரு பள்ளிக்கும் சூட்டப்படவில்லை.

ஒருவரின் பெயரை பள்ளிக்கு சூட்டுவதற்கு அவர் மறைந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் எந்தவொரு கட்டடத்திற்கும் எனது பெயரை சூட்டுவதற்கு நான் அனுமதிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Friday, 21 December 2018

வேதாவுக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் அணி திரளுமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலுக்கு பின்னர் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்கு எதிராக குரல்கள் வலுபெற்று வரும் நிலையில் இந்திய சமுதாயம் அவருக்கு பின்னால் அணிவகுக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த ஆலயத்தில் நடைபெற்ற மோதலின்போது கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மரணமடைந்தார்.

இவரின் மரணத்திற்கு பின்னர் ஒருமைப்பாடு- சமூகநலத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள பொன்.வேதமூர்த்தி அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று அம்னோ உட்பட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள  பெர்சத்து, பிகேஆர் கட்சிகள் கூட கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய சமுதாயத்தின் எழுச்சி பேரணியான ஹிண்ட்ராஃப் பேரணியில் ஒரு தலைவராக செயல்பட்ட வேதமூர்த்திக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

ஆலய விவகாரம் விஸ்வரூபம் அடைந்ததைத் தொடர்ந்து ஐசெர்ட் விவகாரத்தில் உயிர் பெற்ற வேதமூர்த்திக்கு எதிரான எதிர்ப்பலை தற்போது முகமட் அடிப் மரணத்தில் மீண்டும் துளிர் விட்டுள்ளது.

இன ரீதியிலான கருத்துகளை முன்வைத்து வேதமூர்த்திக்கு எதிராக எழுப்பப்படும் குரல்வளையை நெறிக்க இந்திய சமுதாயம் தனது அரசியல் வேறுபாடுகளை களைந்து வேதமூர்த்திக்கு ஆதரவாக அணி சேருமா? அமைச்சர் பதவியில் வேதமூர்த்தி நீடிப்பதற்கான தனது ஆதரவு குரலை இந்திய சமுதாயம் உயர எழுப்புமா? என்ற கேள்வி தொடர்கிறது.

இடைத்தேர்தலில் போட்டியிட சிவராஜ் தகுதியற்றவர்- ராயர் குற்றச்சாட்டு

ஜோர்ஜ்டவுன் -
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மஇகா உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் போட்டியிட தகுதியற்றவர் என்று  ஜசெக வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.

1954 தேர்தல் ஆணையத்தின் சட்டத்தை மீறியதற்காக சிவராஜின் வெற்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் அவர் இத்தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆகிறார்.

சட்ட ரீதியில் போட்டியிட தகுதி இழந்துள்ளதால் அவர் இத்தேர்தலில் போட்டியிட முடியாது என ராயர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தேர்தல் குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதால் அவரின் வெற்றி நிராகரிக்கப்பட்டது.

37ஆவது சட்டப்பிரிவை சுட்டிக் காட்டிய அவர், வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்ட நபர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ சிவராஜ் 597 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பூர்வக்குடியின தலைவர்களுக்கு கையூட்டு வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிவார்ஜ் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனவரி 26ஆம் தேதி கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது.

வேதாவை நீக்க வேண்டுமா; முடிவு என் கைகளில் - துன் மகாதீர்

கோலாலம்பூர்-
அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தியை விலக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தாலும் இறுதி முடிவு என் கைகளிலே உள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்தார்.
ஒருமைப்பாடு- சமூகநலத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்கின்றனர். மக்கள் கருத்துகளை சொல்லலாம். ஆனால் முடிவு என்னிடம் மட்டுமே உள்ளது.

இந்த அமைச்சர் பொறுப்பில் வேதமூர்த்தி சிறப்பாக செயல்படுகிறார் என்றே உணர்கிறேன். அமைச்சர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டுமா, இல்லையா? என்பதை நானே முடிவு செய்வேன் என்று மகாதீர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் சீபில்ட்  ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிம் சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி விலக வேண்டும் என்று அம்னோ உட்பட பிகேஆர், பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 20 December 2018

கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை- பாஸ் கட்சி

பெட்டாலிங் ஜெயா-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடாது என்று அவர் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த தேர்தலில் எங்களது குரல் எதிரொலிக்கும்.
நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக திகழ்ந்திட இந்த முறை எதிர்க்கட்சியாக சிறந்த முறையில் பங்காற்றுவோம்.

நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து எதிரணியில் உள்ள எந்த கட்சி போட்டியிட்டாலும் அவர்களுக்கு தமது ஆதரவை புலப்படுத்துவோம் என்று அவர் சொன்னார்.

செனட்டராக பதவியேற்றார் சுரேஷ் சிங்

கோலாலம்பூர்-
தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங்கிடம் செயலாளராக பணியாற்றி வந்த சுரேஷ் சிங் இன்று காலை மேலவை உறுப்பினராக (செனட்டர்) பதவியேற்றுக் கொண்டார்.
இன்றுக் காலை மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் பதவியேற்றார்.

இவர் தொழிற்சங்க போராட்டவாதியான டாக்டர் வி.டேவிட்டுடன் இணைந்து பணியாற்றிய ராஷ்பால் சிங்கின் மகனாவார்.  1990ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுரேஷ் சிங், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கோபிந்த் சிங்கின் செயலாளராக பணியாற்றினார்.

தனக்கு கிடைக்கப்பெற்றுள்ள செனட்டர் பதவியின்  மூலம் பூச்சோங் வட்டார மக்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங்குடன் இணைந்து சிறப்பாக சேவையாற்றுவதாகவும் எவ்வித பாரபட்சமுமின்றி தனது சேவை அமைந்திருக்கும் என்றும் சுரேஷ் சிங் கூறினார்.

மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவம், சமூக நல உதவிகள் குறித்து அடுத்த மேலவை கூட்டத்தில் பேசவிருப்பதாக கூறிய அவர், தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆதரவும் ஊக்கமும் தந்த தாயார் திருமதி ராஜலெட்சுமி, அமைச்சர் கோபிந்த் சிங் உட்பட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் நன்றி கூறி கொள்வதாக அவர் சொன்னார்.
இதனிடையே, கோத்தா அங்கிரிக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான யாக்கோப் சப்ரியும் மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

கேமரன் மலை இடைத் தேர்தல்; ஜனவரி 26 வாக்களிப்பு

கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் என்று மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் எனவும் தேர்தல் பிரச்சாரம் 14 நாட்களுக்கு நடைபெறும் எனவும் அது தெரிவித்தது.

பூர்வக்குடியின தலைவருக்கு கையூட்டு வழங்கியதன் தொடர்பில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சிவராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

அமைச்சர் பதவியிலிருந்து வேதா விலக வேண்டும்- பல்வேறு தரப்பினர் நெருக்குதல்

கோலாலம்பூர்-
பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றன.

கடந்த மாதம் சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது தாக்கப்பட்ட தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் நேற்று முன்தினம் மரணமடைந்ததைத் தொடர்ந்து வேதமூர்த்திக்கு இந்த நெருக்குதல் அதிகரித்துள்ளது.

ஒருமைப்பாடு- சமூகநலத் துறைக்கான அமைச்சர் பொறுப்பை வகிக்கும் வேதமூர்த்தி நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதில் தோல்வி கண்டுள்ளார் என கூறி அம்னோ இளைஞர் பரிவு உட்பட நடப்பு அரசாங்கமான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த பெர்சத்து, பிகேஆர் கட்சியின் கூட வேதமூர்த்தி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அம்னோவின் பொதுத் தலைவராக நஜிப் நியமிக்கப்பட வேண்டும்- டத்தோ லொக்மான்

பெட்டாலிங் ஜெயா-
அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பதாக  டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ள நிலையில் அம்னோவின் பொதுத் தலைவராகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நியமிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் நோர் அடாம் தெரிவித்தார்.

தலைவர் பொறுப்பை துணைத் தலைவரிடம் ஸாஹிட் ஹமிடி ஒப்படைத்துள்ளது துன் மகாதீரின் வெற்றியாகவே கருதப்படுகிறது.

அம்னோவின் இன்றைய இக்கட்டான சூழலில் அதனை காப்பாற்றுவதற்கும் தேமு எம்பிக்கள் கட்சி தாவலில் ஈடுபடாமல் இருக்கவும் அனுபவமிக்க தலைமைத்துவம் தேவைப்படுகிறது.

அதற்கேற்ப டத்தோஶ்ரீ நஜிப்பை அம்னோவின் பொதுத் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் டத்தோஶ்ரீ ஸாயிட் நியமனம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சாலை விபத்து- தந்தை பலி; மகள்கள் படுகாயம்

கோத்தா திங்கி-
இரு வாகனங்கள் நேரெதிரே மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தந்தை கொல்லப்பட்ட வேளையில் இரு மகள்கள் கடுமையாக காயங்களுக்கு இலக்காகினர்.

இன்று அதிகாலை 3.51 மணியளவில் செனாய்- டெசாரு நெடுஞ்சாலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இதில் மற்றொரு காரில் பயணித்த நான்கு பேரும் காயமடைந்தனர்.
அதிகாலை 4.00 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் இதில் இரு கார்களில் அறுவர் காயமடைந்து கிடந்ததாகவும் பெனாவார் தீயணைப்பு, மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

காயமடைந்தவர்களை ஜோகூர்பாரு, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மரணமடைந்த ஆடவரின்  சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும அவர் சொன்னார்.

Wednesday, 19 December 2018

அம்னோ தலைவர் பதவியை துணைத் தலைவரிடம் ஒப்படைத்தார் டத்தோஶ்ரீ ஸாயிட்

கோலாலம்பூர்-
அம்னோவின் தலைவர் பதவியை துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசினிடம் ஒப்படைத்தார் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி.
 
தமது தலைவர் பதவியை துணைத் தலைவர் மிகச் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை  உண்டு.

பல்வேறு நெருக்குதல்களுக்கு மத்தியில் தனது தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பதாகவும் இனி அம்னோவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொள்வதாகவும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டார்.

டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடியின் தலைமைத்துவத்தை விரும்பாததால் அம்னோவில் இருந்து விலகுவதாக ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்தே ஸாயிட் ஹமிடி இம்முடிவை எடுத்துள்ளார் என நம்பப்படுகிறது.

இன விவகாரங்கள் 'நெறி'படுத்த வேண்டும்; 'வெறி'யேற்றக்கூடாது - மணிமாறன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இனங்களுக்கிடையிலான விவகாரங்களை கையாளும் முறை நெறிபடுத்த வேண்டுமே தவிர அதில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய 'வெறி' தூண்டப்படக்கூடாது என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

இங்கு பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் வாழ்கின்றனர்.  அனைத்துத் தரப்பினரின் சமய விவகாரங்களும் மிக கவனமான முறையில் கையாளப்பட வேண்டும்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் சுமூகமான முறையில் தீர்வு காணும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் இன்று தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப்பை இழந்திருக்க மாட்டோம்.

சமயம் என்பது ஒரு மனிதனை நெறிபடுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். அதுவே  ஒருவருக்கும் வெறி ஏற்றும் கருவியாக மாறிவிடக்கூடாது.
சமயம் சார்ந்த விவகாரங்களை முறையாக கையாள்வதற்கு ஏதுவாக சிறப்பு பணிக்குழு அமைப்பதில் நடப்பு அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும். சீபில்ட் ஆலயம் மட்டுமே பிரச்சினைக்குரிய ஆலயம் அல்ல. அதையும் தாண்டி பல ஆலயங்கள் இன்னமும் நிலப் பிரச்சினையும் தலைமைத்துவப் பிரச்சினையும் எதிர்நோக்கியுள்ளன.

அப்பிரச்சினைகளை முறையாக களைவதற்கு ஏதுவாக சிறப்பு பணிக்குழு அமைப்பது ஏற்புடையதாகும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்று மணிமாறன் கூறினார்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளான தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முகமட் அடிப்பின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு இச்சம்வபத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

சீபில்ட் ஆலயத்தில் போலீஸ் குவிப்பு

சுபாங்-
சீபிட்ல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய மோதலில் தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவ்வாலய வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் எஃப்ஆர் யூ, போலீசார் என  பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு யுஎஸ்ஜே 25 அருகில் உள்ள சாலைகளில் மூன்று போலீஸ் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.

முகமட் அடிப் மீதான தாக்குதல் கொலை வழக்காக மாறியது

ஷா ஆலம்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளான தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் வழக்கை கொலை வழக்காக மாற்றியது காவல்துறை.

இதுநாள் வரை 307 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த இச்சம்பவம் இனி 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படவுள்ளது. இதில் குற்றஞ்சாட்டப்படுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலை அப்துல் ரஷீட் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலின்போது தீ வைக்கப்பட்ட கார்களின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முகமட் அடிப்பை ஒரு கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

ஐஜேஎன் -இல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த முகமட் அடிப்பின்
உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானதைத் தொடர்ந்து நேற்றிரவு 9.41 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

Tuesday, 18 December 2018

முகமட் அடிப் மரணமடைந்தார்

கோலாலம்பூர்-
சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது தாக்கப்பட்டதீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் இன்று மரணமடைந்தார்.

பலத்த காயங்களுக்கு ஆளாகி ஐஜேஎன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முகமட் அடிப் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக மரணமடைந்தார்.

சுவாசக் கருவிகளின் துணையின்றி சுவாசிக்க சிரமப்பட்ட முகமட் அடிப்புக்கு தீவிர சிகிச்சை அளக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இரவு 9.41 மணியளவில் உயிரிழந்ததாக வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஸூராய்டா கமாருடின் தெரிவித்தார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி சீபிலட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நுழைந்த கும்பல் ஒன்று இந்தியர்களை தாக்கியது. பதிலுக்கு இந்தியர்களும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அங்கு கலவரம் மூண்டது.

சம்பவ இடத்தில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முகமட் அடிப் சில தரப்பினரால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார் என்று தீயணைப்பு, மீட்புப் படை கூறியது.

Monday, 17 December 2018

தேமு சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் - மணிமாறன் வலியுறுத்து


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
ஆபத்தான் சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் தேசிய முன்னனி தேசிய, மாநில அளவிலான கலந்துரையாடலை நடத்தி பங்காளி கட்சிகளின் கருத்துகளை கேட்டறிவது  காலத்தின் கட்டாயம் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேசிய முன்னணி மீண்டும் தன்னை வலுபடுத்திக் கொள்ளவும் சீரமைக்கவும் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை இழந்த பின் கூட்டணியை விட்டு  பல கட்சிகள் வெளியேறிய நிலையில் இப்போது இக்கூட்டணியில் அம்னோ, மஇகா, மசீச ஆகியவை மட்டுமே எஞ்சியுள்ளன.

தற்போது அம்னோவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி பிற கட்சிகளில் இணைவது அம்னோவுக்கு பலவீனமாகும். இந்நிலை தொடர்ந்தால் தேசிய முன்னணி  மிகவும் பலவீனமான கூட்டணியாக மாறிவிடும்.
இதனை சரி செய்ய  தேசிய முன்னணி சிறப்பு கலந்துரையாடலை மாநில, தேசிய அளவில் நடத்தி தனது பலவீனத்தை களைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதனை செய்யத் தவறினால் 61 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள தேசிய முன்னணி நாளைய வரலாற்றிலிருந்து காணாமல் போய்விடலாம் என்று மணிமாறன் தெரிவித்தார்.

அவண்ட்- ஓவியாவின் முயற்சியில் ஓவியமும் கவிதையும் இணைந்த 'கலையும் கவியும்- அத்தியாயம் 1'


ரா.தங்கமணி

ஒரு புகைப்படம் ஆயிரம் கதை சொல்லும் என்பார்கள். ஒவ்வொரு புகைப்படக்காரரின் ஒவ்வொரு கிளிக்குகளும் எதை சொல்கின்றன என்பதை நாமாகவே எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஓர் ஓவியக் கலைஞனின் சித்திரம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாது. ஒரு ஓவியனின் கற்பனைத் திறனில் வெளிபடும் ஓவியத்திற்கு அர்த்தம் சொல்வது எளிதானது அல்ல.  அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும்.

அப்படிப்பட்ட சாத்தியத்தைதான் ஓவியர்  அவண்ட் (நிமலேஷ் ஆதிமூலம்), பேசும் கவிதைகள் ஓவியா (வாணி ஒமாபதி) மேற்கொண்டிருக்கும் முயற்சி இன்று 'கலையும் கவியும் - அத்தியாயம் 1' என்ற நூலாக உருமாறியுள்ளது.

'பேசும் கவிதைகள்' எனும் பெயரில் கவிதைகள் புனைவது மட்டுமல்லாது திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் ஓவியா மலேசிய கலைத்துறையில் நன்கு அறிமுகமானவர்.

'கலையும் கவியும்' கவிதை நூல் உருவாக்கம் குறித்தி மனம் திறந்தனர் ஓவியா, அவண்ட்.

இன்றைய இளைஞர்களை சமூக வலைத்தலங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை ஆக்கிரமித்துள்ள நிலையில் எங்களது 'கலையும் கவியும்' படைப்பை சமூக வலைதளங்களில் பகிர்ந்தோம்.

2017ஆம் ஆண்டு எங்களின் கூட்டுப்பணி தொடங்கியது.  அவண்ட் வரையும் ஓவியங்களுக்கு நான் கவிதை எழுதி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தோம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை எங்களது படைப்புகள் பகிரப்படும்போது அது பெரும்பாலானோரை கவர்ந்தது என்கிறார் ஓவியா.

அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான குட்டி கவிதைகள் வாசகர்களை ஈர்த்தது. அவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட
கவிதைகளின் தொகுப்பே 'கலையும் கவியும் - அத்தியாயம் 1' நூல் ஆகும்.

கலை மீது கொண்ட ஆர்வத்தினால் முழு நேர ஓவியராக உருவெடுத்த வேளையில்  'அவண்ட் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை வழிநடத்தி பிறர் ரசிக்கும் வகையான ஓவியங்களை வரைந்து ஓர் ஓவியனாக வளர்ச்சி கண்டுள்ளேன். ஓவியாவுடன் இணைந்து ஓவியத்துடன் கவிதை படைக்கும் முயற்சி வாசகர்களின் ரசனையை மேலும் தூண்டியது என ஓவியர் அவெண்ட் விவரித்தார்.

சமூக ஊடகங்களில் கிடைக்கப்பெற்ற ஆதரவை தொடர்ந்து அதனை கவிதை தொகுப்பாக வெளியிட நினைத்தோம். அதன் அடிப்படையிலே கவிதை நூல் உருவாக்கம் கண்டது.

'கலையும் கவியும் - அத்தியாயம் 1' கவிதை நூலில் 44 கவிதைகள் வண்ணப் பக்கங்களாக அச்சிடப்பட்டுள்ளன. புது கவிதைகளாக புனையப்பட்டுள்ள இக்கவிதைகள் பெரும்பாலும் மாணவர்களை ஈர்த்துள்ளது. அதனாலேயே அவர்களது பெற்றோர்கள் இந்நூலை வாங்கிச் சென்று ஆதரவு கொடுக்கின்றனர் என ஓவியா கூறிகிறார்.

2009ஆம் ஆண்டு முதல் கவிதை படைத்து வரும் ஓவியா தமிழ்ப்பள்ளி ஆசிரியரும் ஆவர். ஆசிரியர் பணி பாதிக்கப்படாத வகையில் கவிதை புனைவதோடு திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதி வருகிறார்.
மிகப் பெரிய அளவில்  நூல் வெளியீடு செய்யாமல் தற்போது சமூக ஊடகங்களின் மூலமே நூல் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகத்தின் விலை வெ.23.90 மட்டுமே. (தபால் செலவு உள்ளடக்கம்)

'கலையும் கவியும்- அத்தியாயம் 1' கவிதை நூல் வேண்டுபவர்கள்  +6018-462 7889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது avandartz@gmail.com , lyricistoviya@gmail.com என்ற இணையதள முகவரியை நாடலாம்.

Friday, 14 December 2018

'இசா'வில் ஹிண்ட்ராஃப் தலைவர்கள் கைது- 11 ஆண்டுகளை கடந்த வரலாற்று அத்தியாயம்

ரா.தங்கமணி

டிசம்பர் 13, 2007.... மலேசிய இந்தியர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு கறுப்பு அத்தியமாக அமைந்த நாள். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மலேசிய வரலாற்றில் காணப்படாத உரிமை போராட்டமாக அமைந்த  'ஹிண்ட்ராஃப்' போராட்டத்தை வழிநடத்திய ஐந்து தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கைது செய்யப்பட்ட  நாள் இன்று.

கூலித் தொழிலாளியாக மலையகத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தத் தவறிய பிரிட்டன் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பதாக அமைந்த ஹிண்ட்ராஃப் பேரணி, மலேசியத் தொழிலாளர்களின் உரிமை போராட்டக் குரலாக எதிரொலித்தது.

நவம்பர் 25, 2007ஆம் தேதி கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் திரண்ட லட்சக்கணக்கான இந்தியர்களின் ஹிண்ட்ராஃப் போராட்டத்தை கலைப்பதற்காக அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை இந்தியர்களை கோபப்படுத்தியது.

போலீசாரின் கைது நடவடிக்கை, தடியடி, கலகத் தடுப்பு போலீசாரின் தண்ணீர் பாய்ச்சல், புகை குண்டு வீச்சு போன்றவற்றால் இந்தியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக ஆளும் அரசாங்கத்தின் மீது இந்திய சமுதாயம் அதிருப்தி கொள்ளும் வகையில் அமைந்திருந்தது ஹிண்ட்ராஃப் தலைவர்கள் ஐந்து பேர் மீதான கைது நடவடிக்கை.

இசா சட்டத்தின் கீழ் அதன் தலைவர்களான பொன்.உதயகுமார், வீ.கணபதிராவ், மனோகரன் மலையாளம், வசந்தகுமார், கங்காதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இசா சட்ட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 தலைவர்களும் தைப்பிங், கமுண்டிங் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் (495 நாட்கள்) தடுத்து வைக்கப்பட்டனர்.

அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறலாக பார்க்கப்பட்ட இந்த கைது நடவடிக்கை இந்தியர்கள் மத்தியின் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியது மட்டுமின்றின் ஐந்து தலைவர்களையும் 'சமுதாய போராளியாக'வும் உருமாற்றியது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்  தேசிய முன்னணி ஆட்சியை இழப்பதற்கு அஸ்திவாரமாக அமைந்தது. ஹிண்ட்ராஃப் போராட்டம், 5 தலைவர்களின் கைது நடவடிக்கை. மலேசிய இந்தியர்களின் அவலநிலையை உலகளவில் பரவச் செய்த ஹிண்ட்ராஃப் தலைவர்களின் தியாகத்தை மலேசிய இந்தியர்கள் எளிதில் மறந்து விடக்கூடாது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது திணிக்கப்பட்ட 'ஓப்ஸ் லாலாங்' கைது நடவடிக்கைக்குப் பின்னர் மற்றோர் அதிர்ச்சிகரமான கைது நடவடிக்கையாக அமைந்த ஹிணட்ராஃப் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை 11 ஆண்டுகளை கடந்த பின்னரும்  இன்னமும் மலேசிய இந்தியர்களின் மனதில் மாறாத வடுவாக அமைந்துள்ளது

'ஒரு சமூகத்தின் உரிமைப் போராட்ட குரல் வளையை நெறிக்க முயன்றால் தலைமைத்துவத்தையே மாற்றியமைப்போம்' என்ற அத்தியாயத்தை படைத்த  இந்திய சமுதாயத்தின் வழிகாட்டி முன்னோடிகளான  ஹிணட்ராஃப் தலைவர்களின்  தியாகம் மலேசிய அரசியலில் ஒரு வரலாற்று பெட்டகம் ஆகும். அதனை எந்நாளும் போற்றுவோம்... காப்போம்... அடுத்தத் தலைமுறைக்கும் இந்த தியாகத்தை கொண்டுச் சேர்ப்போம்.