Tuesday 23 October 2018

சீபில்ட் மாரியம்மன் ஆலயம்: இடமாற்றமே; உடைக்கப்படவில்லை - கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஹைகோம் (சீபில்ட்) மகா மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படவில்லை; மாறாக இடமாற்றமே செய்யப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம் என கூறப்படும் இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட கா.செல்லப்பா தலைமையிலான நிர்வாகக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதால் இவ்வாலயத்தை இடமாற்றம் செய்யும் பணி முன்னெடுக்கப்படுகிறது. மாறாக, சில தரப்பினர் கூறுவதுபோல் இந்த ஆலயம் உடைக்கப்படவில்லை.

தற்போதைய சீபில்ட் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள நிலத்தை ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு ஏதுவாக யுஎஸ்ஜே 23ஆவது கிலோமீட்டரில் 1 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளதோடு புதிய ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு 15 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய இடத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு இந்து ஆகம் முறைப்படி தெய்வச் சிலைகள் பாலஸ்தாபனம் செய்வதற்கு ஏதுவாக செல்லப்பா குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதனை சிலாங்கூர் மாநில அரசு ஏற்று அதற்கேற்ப செயல்படுகிறது.

இவ்விவகாரத்தின் எந்தவொரு தரப்பினர் பக்கமும் சாய்ந்திடாமல் நடுநிலையோடு செயல்படுகிறோம். நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டு யார் இணங்கினால் அதனை மாநில அரசு ஏற்று செயல்படும். அதன் அடிப்படையில்தான் செல்லப்பா அணியினருடன்  ஆலய இடமாற்றப் பணிக்கு உட்படுகிறோம் என்று இன்று மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கணபதிராவ் கூறினார்.

இவ்விவகாரத்தின் உண்மை நிலையை மறைத்து சில தரப்பினர் மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்புவதோடு உண்மை என்னவென்று அறியாத மக்களை பகடைகாயாகவும் பயன்படுத்துகின்றனர்.

நீதிக்கு உட்பட்டே மாநில அரசு செயல்படும் என்ற நிலையில் அங்கீகரிக்கப்பட்ட செல்லப்பா தலைமையிலான குழுவினருடன் இணைந்து செயல்படும் வேளையில் சமய ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஆலய இடமாற்றம் இடம்பெறும் என்று அவர் சொன்னார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷாண், செல்லப்பா குழுவினர், மேம்பாட்டு நிறுவனத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment