Tuesday 4 September 2018

பக்காத்தான் ஆட்சியில் தேமு பாணி பின்பற்றப்படாது- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
மக்களுக்கு சலுகைகளையும் மானியங்களையும் அள்ளி கொடுத்து உரிமை இழக்கச் செய்யும் தேசிய முன்னணியின் பாணியாகும். அத்தகைய பாணியை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் செய்யாது என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையினாலேயே மக்கள் கூட்டணி அரசு மத்தியிலும் மாநிலத்திலும் அமைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்படுவது அவசியமாகும்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு அன்பளிப்புகளும் உணவுப் பொட்டலங்களும் தாராளமாக வழங்கப்பட்டன. சலுகை என்ற பெயரில் மக்களுக்கு இலவசங்கள் அள்ளி கொடுக்கப்பட்டன.

ஆனால் இந்த சலுகைகள் இந்தியர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு எவ்வித பயனும் கொண்டு வரவில்லை. இந்தியர்களின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் இந்த சலுகைகள் உரிய தீர்வை கொண்டு வரவில்லை.

பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு என பலநிலைகளில் இந்தியர்கள்  பல பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றுக்கு தீர்வு காணாமல் அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்குவதிலேயே கடந்த கால அரசு முனைப்பு காட்டி வந்தது.

ஆனால் தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு இந்தியர்களுக்கு சலுகைகளை வழங்குவதை காட்டிலும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுகிறது.

தேசிய முன்னணி செய்த அதே தவற்றை நாங்கள் செய்ய விரும்பவில்லை. சலுகைகளை காட்டி ஆட்சி புரிந்தது அவர்களது (தேமு) பாணியாக இருக்கலாம். ஆனால் எங்களது பாணி வேறுபட்டது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகக்கு தீர்வு காண்பதே முதல் பணி என்று சிவநேசன் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment