Tuesday, 10 July 2018

ஸாகீர் நாய்க்கை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தற்காப்பது ஏன்? MIV மணிமாறன் கேள்வி


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகீர் நாய்க் விவகாரத்தில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்  கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இழைக்கப்பட்ட தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன் முனுசாமி தெரிவித்தார்.

இந்து மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் வகையில் தவறான கருத்துகளை பரப்பி வரும் ஸாகீர் நாய்க் மீது இந்திய அரசாங்கம் தீவிரவாத தூண்டுதல், பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி சட்டத்தின் முன் நிறுத்த முயன்று வருகிறது.

ஆனால் அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டதை காரணம் காட்டி அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என பிரதமர் துன் மகாதீர்வ் முகம்மது கூறுவது இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை புறக்கணிப்பதற்கு சமமாகும்.

இந்நாட்டில் பிறந்து இங்கேயே வளர்ந்து வரும் எத்தனையோ மலேசிய இந்தியர்கள் குடியுரிமைக்காக இன்னமும் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமய பிரச்சாரத்திற்காக இங்கு வந்த ஒருவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கி, அவரை தற்காத்து நிற்பது எவ்வகையில் நியாயமாகும்?

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போதே ஸாகீர் நாய்கிற்கு எதிராக இந்தியர்கள் கொந்தளித்தனர்.  அவரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அப்போதே குரல் எழுப்பினர். ஆனால் இந்தியர்களின் உணர்வுகளை மதிக்காததால் தான் தேமுவுக்கு எதிராக இந்தியர்கள் திரும்பினர். ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டினர்.

இப்போது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் கூட இந்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்கப்படாதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது.

பல இன மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழ்ந்து வரும் இந்நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் ஸாகீர் நாய்க் உடனடியாக இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற ஒப்பந்தத்தை நடப்பு அரசாங்கம் மதிக்க வேண்டும்.



No comments:

Post a Comment