Thursday 19 July 2018
மஇகாவின் வெற்றிடத்தை ஹிண்ட்ராஃப் பூர்த்தி செய்யுமா?
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தின் குரலாக ஹிண்ட்ராஃப் அமைப்பின் குரல் எதிரொலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகா இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக அங்கம் வகித்தது. மஇகா இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்திருந்தாலும் இந்தியர்களின் ஆதரவை பெற தவறி விட்டதே அதன் தோல்வியாகும்.
இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இந்திய சமுதாயத்தின் குரலாக யார் திகழப் போகின்றனர்? என்ற கேள்வி பல மாதங்களாக இந்தியர்களை சூழ்ந்திருந்தது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக பலர் இருந்தாலும் அவர்கள் பல இன கட்சிகளைச் சார்ந்த (பிகேஆர், ஜசெக) நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே திகழ்வதால் அவர்களால் இந்திய சமுதாயத்திற்கு மட்டும் எவ்வாறு குரல் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுகின்றது.
இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான அமைச்சரவையில் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பொன்.வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு வாழ்வுக்கான 2007ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப் பெரிய எழுச்சி பேரணிக்கு வித்திட்டது ஹிண்ட்ராஃப் அமைப்பாகும்.
இத்தகைய சூழலில் இந்திய சமுதாயத்தின் போராட்ட களமாக திகழ்ந்த ஹிண்ட்ராஃப் இன்று அரசாங்கத்தின் ஓர் அங்கமாக திகழ்கின்ற நிலையில் இந்திய சமுதாயத்தின் குரலாகவும் ஒலித்திட வேண்டும்.
தேசிய முன்னணியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் காலியாகியுள்ளது. மஇகாவின் வெற்றிடத்தை ஹிண்ட்ராஃப் பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment