Wednesday, 11 July 2018

"வயசானாலும் உங்களது வேகமும் அதிரடியும் குறையல"- துன் மகாதீர் 'மலேசியாவின் படையப்பா'


ரா.தங்கமணி

ஒரு தனிநபரின் அரசியல் பங்களிப்பு நாட்டில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டால் 'நிச்சயம் முடியும்' என கைகள் உயர்த்தி சொல்வது 'மகாதீர்' பெயரை தான்.

அரசியலிலிருந்து விடை பெற்றுக் கொண்ட பின்னரும் நாட்டில் நிகழும் அரசியல் முறைகேடுகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் அரசியலுக்கு திரும்பி ஆட்சிக் கட்டிலில் 'சிம்மாசனம்' போட்டு அமர்ந்துள்ளார் துன் மகாதீர்.

துன் மகாதீர்.... இந்த ஒற்றை பெயர் இன்று மலேசியர்களின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு நாமமாகவே மாறிவிட்டது. 2018  மே 9ஆம் தேதி வரைக்கும் 'ஆட்சி மாற்றம் சாத்தியமா?' என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும் என கூறி சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 'பக்காத்தான் ஹராப்பான்' கூட்டணியை உருவாக்கி 14ஆவது பொதுத் தேர்தலில் களம் காணச் செய்து வெற்றியை ஈட்டிக் கொடுத்ததில் துன் மகாதீரின் பங்கு அளப்பரியதாகும்.

1981 முதல் 2003ஆம் ஆண்டு வரை நாட்டின் 4ஆவது பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் அரசியலில் இருந்து விடை பெறும் வகையில்  பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

பதவியிலிருந்து விலகினாலும் நாட்டின் நடப்பு அரசியல் சூழலை மையப்படுத்தி அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு வந்தார். துன் அப்துல்லா அகமட் படாவிக்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற டத்தோஶ்ரீ நஜிப் மீது துன் மகாதீர் முன்வைத்த விமர்சனங்கள் மலேசியாவை தாண்டி உலக நாடுகளின் பார்வையையும் திருப்பியது.

டத்தோஶ்ரீ நஜிப் தொடங்கிய 1எம்டிபி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாக துன் மகாதீர் சுமத்திய குற்றச்சாட்டுகள் அப்போது நாட்டின் அரசியல் சூழலை மாற்றுவதற்கான அடித்தளமாக அமைந்தது.

அம்னோவையும் தேசிய முன்னணியையும் வைத்து பிரதமர் பதவியை அலங்கரித்த துன் மகாதீர், திவாலிலிருந்து நாட்டை காக்க வேண்டும் என்பதற்காக அதனை எதிர்க்க துணிந்தார். மகாதீர் துணிவை ஏற்க விரும்பாத தேசிய முன்னணியின் அப்போதைய அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியையும் அதன் சின்னத்தையும் அங்கீகரிக்காமல் கிடப்பில் போட்டது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் துன் மகாதீர் தொடங்கிய பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) கட்சியை அங்கீகரிக்காமல் இழுத்தடித்தது.

என்ன நடந்தாலும் நடக்கட்டும்.... A  இல்லையா  B,  B இல்லையா  C என தனது திட்டங்களுக்கு எத்தகைய பிரச்சினை வந்தாலும் அதற்கு மாற்றுவழி வைத்து தேர்தலை சந்திக்க தயாரான மகாதீர், 'ஒரே கூட்டணி, ஒரே சின்னம்' என்ற கொள்கையை முழங்கி பிகேஆர் கட்சியின் சின்னத்தின் கீழ் தனது கூட்டணி வேட்பாளர்களை அதிரடியாக களமிறக்கினார்.

தன்னை அரசியல் ரீதியாக எதிர்த்த பிகேஆர் கட்சி மட்டுமல்லாது தன்னை எதிர்த்து வந்த ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்குடனும் கைகோர்த்தது 'அரசியல் சாணக்கியத்தனத்தின்' உச்சக்கட்டமாகும்.

14ஆவது பொதுத் தேர்தலில் பலத்த போட்டிக்கு மத்தியில் ஆட்சியை கைப்பற்றி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்தார். முதல் முறை பிரதமராக பொறுப்பேற்றபோது நாட்டை மேம்படுத்துவதில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் இப்போது மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கும்போது மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இம்முறை மகாதீர் பிரதமராக பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 92. உலகிலேயே 'மிக வயதான பிரதமர்' என்ற அந்தஸ்தை பெற்றுள்ள துன் மகாதீரின் அசாத்தியமான நடவடிக்கைகளுக்கு  பின்னால் மாற்றத்தை விரும்பிய இளைஞர்களும் தேசிய முன்னணி மீது அதிருப்தி கொண்டவர்களும் அணிவகுத்து நின்றதே 'பக்காத்தான் ஹராப்பான்' வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

'லட்சியத்தை அடைவதற்கு வயது ஒரு தடையல்ல, மனதிடம் இருந்தால் போதும்... எதையும் சாதிக்கலாம்' என்ற படிப்பிணையை உணர்த்தியுள்ள துன்  மகாதீரை 'மலேசியாவின் படையப்பா' என்றே சொல்லலாம்.

சூப்பர் ஸடார் ரஜினிகாந்த நடித்த 'படையப்பா' படத்தில் 'வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையல' என்ற வசனம் இடம்பெறும்.

அதேபோன்று  துன் மகாதீருக்கு  'வயசானாலும் உங்களது வேகமும் அதிரடியும் குறையல'ன்னு தைரியமாக சொல்லலாம்.

இன்று 93ஆவது பிறந்தாளை கொண்டாடும் பிரதமர் துன் மகாதீருக்கு 'மைபாரதம்' இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment