Saturday, 7 July 2018
இந்தியாவுக்கான 'விசா' கட்டணத்தை மறுபரிசீலனை செய்க- ராயுடு கோரிக்கை
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு விதிக்கப்படும் 'விசா' கட்டணத்தை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மலேசிய இந்தியர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
இந்தியாவுக்கு அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களில் மலேசியர்களும் அடங்குவர். இங்குள்ள மலேசியர்கள் இந்தியாவுடன் பல்வேறு வர்த்தக உறவுகள் மட்டுமின்றி சமயம், பண்பாடு, கலாச்சார சார்ந்த உறவுகளையும் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்டுள்ள 'விசா' கட்டணம் மலேசியர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது என மலேசிய இந்தியர்களின் குரல் அமைப்பின் தோற்றுனர்களில் ஒருவரான ராயுடு கூறினார்.
முன்பு விதிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள 'விசா' கட்டணத்தால் இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் மலேசியர்களின் எண்ணிக்கை குறையலாம் என குறிப்பிட்ட அவர், இதன் மூலம் இவ்விரு நாடுகளுக்கான வர்த்தக வாய்ப்புகள் மட்டுமின்றி பல வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றார்.
எனவே இவ்விவகாரத்தில் இந்திய அரசும், மலேசியாவுக்கான இந்திய தூதரகமும் கவனம் செலுத்தி மலேசியர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் புதிய 'விசா' கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என ராயுடு வலியுறுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment