Tuesday, 31 July 2018
சமையல் கலையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உணவகங்களில் வேலை வாய்ப்பு - முன்மொழிந்தார் சிவநேசன்
ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்
ஈப்போ-
இங்குள்ள உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்கு பதிலாக சமையல் கலையில் பயிற்சி பெற்ற மாணவர்களை பணியில் அமர்த்துவது தொடர்பில் விவாதிக்கப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டு வரும் க்ரூ ஸ்கீல்ஸ் கல்னெரி ஆசியா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உள்ளூர் உணவகங்களில் பணியாற்றும் வகையில் உணவக உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான இணக்கம் காணப்பட்டால் இங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு வெளிநாட்டு சமையல்காரர்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என இக்கல்லூரியை பார்வையிட வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.
இங்கு சமையல் கலை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் வெறும் இந்திய உணவை மட்டும் சமைக்காமல் மலாய்க்காரர், சீனர் உணவு வகைகளையும் வெஸ்டர்ன் உணவையும் சமைக்கும் பக்குவத்தை கற்றுக் கொண்டுள்ளனர்.
இங்கு பயிலும் மாணவர்கள் சில வறுமை குடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மாநில அரசின் கல்வி உதவிநிதி வழங்கப்படுவதற்காக மாநில மந்திரி பெசாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.
அண்மையில் உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்களை நியமிக்க வேண்டும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் விடுத்திருந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் பணியாற்றுவதை உறுதி செய்வது ஆக்கப்பூர்வமானதாகும் என அவர் சொன்னார்.
இக்கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சுப்பிரமணியம், இயக்குனர் கெர்ரி ப்ரியர், சமையல் கலை வல்லுநர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கல்லூரி நடவடிக்கைகளை விளக்கமளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment