ரா.தங்கமணி
ஷா ஆலம்-
சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்ற பிரதமர் துன் மகாதீர் கூற்று இங்குள்ள இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.
இந்து மதத்தை தவறாக சித்தரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸாகீர் நாயக்கின் நடவடிக்கையை சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் எதிர்த்து வந்தனர்.
தேசிய முன்னணியின் கடந்த கால ஆட்சியின்போது நடந்த பல தவறான திட்டங்களை தற்போதைய நடப்பு அரசாங்கமான பக்காத்தான் ஹராப்பான் நிராகரித்து வருகிறது. அதே போன்றுதான் ஸாகீர் நாயக்கிற்கு நிரந்தர குடியுரிமை கொடுக்கப்பட்டதும் ஆகும்,
இந்தியா- மலேசியாவுக்கு இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நிலுவையில் உள்ள சூழலில் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்தது, பண மோசடி போன்ற குற்றங்களை புரிந்துள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய அரசு தாய்நாட்டு திரும்ப அனுப்பச் சொல்லி கோருகிறது.
சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு இந்தியாவின் கோரிக்கையை நாம் ஏற்க வேண்டுமே தவிர கடந்த தேமு ஆட்சியில் நிகழ்ந்த தவற்றை காரணமாக ஏற்று புறக்கணிக்கக்கூடாது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் எவ்வித இன பாகுபாடும் இல்லாமல் மலேசியர் என்ற ரீதியிலேயே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆதலால் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவதே சிறந்த மக்களாட்சிக்கு அடையாளம் ஆகும்.
தேமு ஆட்சியின்போது நிகழ்ந்த தவறுகளையே மக்களின் தேர்வான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி செய்யக்கூடாது. அது மக்களின் நன்மதிப்பை இழக்கச் செய்திடும் என்பதை உணர்ந்து ஸாகீர் நாய்க் விவகாரத்தில் ஆளும் அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என கணபதி ராவ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment