Friday, 6 July 2018

4 ஆண்டுகளாக தொடரும் விவசாயிகள் பிரச்சினை; தீர்வு காண மந்திரி பெசாருக்கு மகஜர்

ஈப்போ
பேரா மாநிலத்தில் பத்துகாஜா தொகுதியில் உள்ள துரோனோ விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண கோரும் மகஜர் ஒன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் மந்திரி பெசாரிடம் ஒப்படைத்தனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக துரோனோவில் கைவிடப்பட்ட அரசு நிலத்தில் பல் வகையான பயிர்கள்,கால்நடைகள், மீன்கள் வளர்த்து வந்த இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலம் கடந்த 2012-இல் பேராக் மாநில மந்திரி பெசார் வாரியத்திற்கு கடந்த தேசிய முன்னணி அரசு வழங்கிய பின்னர் இவ்விவசாயிகளை அவ்வாரியம் வெளியேற்றுவதற்கு 2014-இல் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கை மேற்கொண்டதாக மாநில மந்திரி பெசாருக்கு வழங்கிய மகஜரில் குறிப்பிட்டனர். முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் ஜம்ரிக்கு பல மகஜர்கள், கடிதங்கள் கொடுத்தும் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட இந்த விவசாயிகளின் உரிமைக்கு சட்ட ரீதியில் வாதிட முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் டத்தோ அம்பிகா முன்வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையில், கடந்த 2016-இல் டிசம்பர் மாதம் ஈப்போ உயர்நீதிமன்றம் இவ்விவசாயிகளை வெளியேற்றுவதற்காண உத்தரவினை பேரா மந்திரி பெசார் வாரியத்திற்கு சாதகமாக பிறப்பித்தால் வேறு வழியின்றி விவசாயிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இருப்பினும் இவ்வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் முன்னால் மந்திரி பெசார் தலையிடக்கோரும் கடிதமும் இவர்கள் வழங்கினர். அதாவது மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இருக்கும் இந்த வழக்கினை தாங்கள் மீட்டுக்கொள்வதாகவும், மாநில முதல்வர் தலையிட்டு சுமூக தீர்வு காண விடுத்த கோரிக்கையினையும் அன்றைய மாநில அரசு செவிசாய்க்கவில்லை என குறைப்பட்டனர்.

ஆகவே, இவ்வழக்கு அடுத்த வாரம் ஜுலை 10 ஆம் திகதி முதல்முறையாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், டத்தோ அம்பிகாவின் ஆலோசனைப்படி இன்றைய ஹராப்பான் மாநில அரசுக்கு வழக்கறிஞர் வாயிலாக ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுக்கோரும் கடிதம் ஒன்று மாநில மந்திரி பெசாரின் அந்தரங்க செயலாளர் நிர்சான் மன்சோருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியதாக கூறினார். மாநில மந்திரி பெசாரை சந்திப்பதற்கு டத்தோ அம்பிகாவும் அவரின் தேதிகளை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

வழக்கு அடுத்த வாரம் வருவதால், பதில் ஏதும் இல்லாததால் நேற்று விவசாயிகளின் வழக்கறிஞர் குணசேகரன் மீண்டும் ஒரு கடிதம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தன் காய் ஏங்கிடம் வழங்கினர். அவரும் அக்கடிதத்தை ஆட்சிகுழு கூட்டத்தின்போது மாநில முதல்வரிடம் வழங்கிவிட்டதாக குணசேகரன் தெரிவித்தார்.

ஆகவே, தொடர் இழுபறியாக இருக்கும் இப்பிரச்சனைக்கு மாநில மந்திரி பெசார் நீதிமன்ற வழக்கிற்கு முன் ஒரு பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்வார் என தாங்கள் நம்புவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்தனர்.

No comments:

Post a Comment