Friday, 6 July 2018

29 தொழிலாளர்களுக்கான பணி நீக்க கடிதம் திரும்ப பெறப்பட்டது - சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
சுங்கை சிப்புட்டிலுள்ள கார் உபரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான 'பெல்டன்' நிறுவனத்தின் பணியாற்றி வந்த 29 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை நிறுவன நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என பேரா மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை முதல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வழங்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறும் நிறுவனம், அவர்களுக்கு வழக்கம்போல் வேலையும் அதற்கான ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

உற்பத்தி பொருட்களின் குறைவால் நஷ்டத்தை சந்திக்கும் சூழலில் சம்பந்தப்பட்ட 29  தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தால் அதற்கான நஷ்ட ஈட்டை கொடுத்து பணியிலிருந்து நீக்க முடியும். இந்த தொழிலாளர்கள் அனைவரும் 25 முதல் 40 வருடங்களாக இங்கு பணி புரிந்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற நேர்ந்தால் புதிய நிர்வாகம் அவர்களுக்கான நஷ்ட ஈட்டை ஏற்றுக் கொண்டால் புதிய நிறுவனத்திற்கு மாறலாம். இல்லையேல் தற்போதைய நிர்வாகமே அவர்களுக்கான நஷ்ட ஈட்டை கொடுக்க வேண்டும் என இன்று காலை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை சிவநேசன் செய்தியாளர்களிடம் விவரித்தார்

பணியிலிருந்து நீக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை கொடுக்காமல் நிறுவன நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. தொழிலாளர் சட்டத் திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். 

அதேபோன்று தொழிலாளர்களும் நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு கட்டுப்பட்டு எவ்வித ஆட்சேபமும் மறியலும் தெரிவிக்காமல் தங்களது தொழிலை மேற்கொள்ள வேண்டும் என சிவநேசன் வலியுறுத்தினார்.

இந்த 29 தொழிலாளர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வழக்கம் போல் தங்களது தொழிலை மேற்கொள்வர் எனவும் புதிய தொழிற்சாலையில் வேலைக்கு செல்வதும் நிராகரிப்பது தொழிலாளர்களின் முடிவு எனவும்  குறிப்பிட்ட சிவநேசன், நிறுவனத்தின் முடிவை வரும் திங்கட்கிழமை தெரிவிக்குமாறு அதன் மனிதவள அதிகாரியை கேட்டுக் கொண்டார்.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நிறுவன மனிதவள அதிகாரி ஃபிஃபி லியோங், மனிதவள இலாகா அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment