Wednesday, 25 July 2018

2,000 ஏக்கர் நில விவகாரம்; அலட்சியப்படுத்தினால் சட்ட நடவடிக்கை பாயும்- அறவாரிய உறுப்பினர்களுக்கு சிவநேசன் எச்சரிக்கை


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 2,000 ஏக்கர் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாரியக் குழுவினர் முறையான கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக 2,000 ஏக்கர் நிலம் பேரா மாநில இந்திய மாணவர், கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலத்தில் செம்பனை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபத்தை தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வழங்கப்பட்டது.
ஆனால் இந்நாள் வரையிலும் அந்த அறவாரியத்திலிருந்து தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக எவ்வித பங்கும் சென்றடையவில்லை.

14ஆவது பொதுத் தேர்தல் முன்பு வரை அந்நில விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தாலும் எவ்வித அதிகாரம் இல்லாமல் இருந்தோம். ஆனால் இப்போது மாநில ஆட்சி எங்கள் வசம் உள்ளது. அதன் அடிப்படையில் 2,000 ஏக்கர் நில விவகாரம் தொடர்பில் குரலெழுப்ப முழு அதிகாரம் உள்ளது.

யாரோ சிலர் சொந்தம் கொண்டாடவும் லாபம் சம்பாதிக்கவும் இந்த 2,000 ஏக்கர் நிலம் யார் வீட்டு அப்பன் சொத்தும் கிடையாது. இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம். அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் மாணவர்களை சென்றடைய வேண்டுமே தவிர சிலரின் கட்டுபாட்டுக்குள் அந்நிதி போய்விடக்கூடாது.

மாநில ஆட்சி மாற்றம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையில் இவ்வாரிய உறுப்பினர்கள் ஒருமுறை கூட  தன்னை சந்தித்து அந்நில விவகாரம் தொடர்பில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என குறிப்பிட்ட சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன், தன்னை அலட்சியப்படுத்தும் போக்கு தொடர்ந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுஒருங்கிணைப்பு குழு சந்திப்புக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

No comments:

Post a Comment