Saturday, 14 July 2018

யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான 'விருது விழா'; செப்.2இல் நடைபெறுகிறது- கணபதி ராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
கடந்தாண்டு நடைபெற்ற யூபிஎஸ்ஆர் தேர்வில் 'ஏ' பெற்ற சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.

சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த விருது விழா இவ்வாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தில் உள்ள ஜூப்ளி பேரா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகளில் கடந்தாண்டு யுபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ, 7ஏ, 6ஏ பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழும் அன்பளிப்பும் வழங்கப்பட்டவுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில்  8ஏ பெற்ற 73 மாணவர்கள், 7ஏ பெற்ற 107 மாணவர்கள், 6ஏ பெற்ற 106 மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வி இலாகா மூலம்  தனது அலுவலக அதிகாரிகள் பெற்றுள்ளதுடன்  இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும் மாநில அரசு  வழங்கவுள்ளது. தமிழ் மொழிக்காகவும் தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் சிறந்த சேவையை வழங்கிய ஐவருக்கு இவ்விருது வழங்கப்படும். இதில் முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களான பழனியப்பன் சின்னப்பன், சுப்பிரமணியம் கண்ணன், இலட்சுமி ஜெயராமன், நடராஜன் சண்முகம், நடராஜன் பொன்னுசாமி ஆகிய இவ்விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு, மாநில அளவில் 'சிறந்த பள்ளி' எனும் விருது மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்தகைய நடவடிக்கை மற்ற பள்ளிகளுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்திடும் என குறிப்பிட்ட கணபதி ராவ், விழாவில் பங்கேற்கவிருக்கும் மாணவர்களின் பெயரை சரி பார்த்து கொள்ள 03- 55447306 என்ற எண்ணில் குமாரி யோகேஸ்வரியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment