Thursday, 28 June 2018

நான் உங்களின் வேலைக்காரன்; கடமையிலிருந்து தவற மாட்டேன் - கேசவன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

'நான் உங்களின் வேலைக்காரன், உங்களுக்கு சேவை செய்யவே என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அந்த கடமையிலிருந்து தாம் ஒருபோதும் விலகி விட  மாட்டேன்'  என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை எனக்கு கொடுத்துள்ளீர்கள். இதனை நான் வெற்றியாக கருதுவதை விட உங்களுக்கு பணியாற்ற எனக்கு இடப்பட்ட கட்டளையாகவே கருதுகிறேன்.

மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அதற்கு முன் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படும் என்றார்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு எத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களை இங்கு கொண்டு வர முடியும், அதனால் மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு மேம்பாடு காணும் போன்றவற்றை ஆய்வு செய்த பின்னரே நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என சுங்கை சிப்புட், மலேசிய இந்து சங்கம், ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்  சார்பில் நடத்தப்பட்ட 'அன்னையர்/ தந்தையர் தின விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.

மேலும், பிள்ளைகளின் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் பெற்றோர் அவர்களின் எதிர்காலத்திற்கு  தேவையான திட்டங்களையும் வகுத்து வருவது பாராட்டுக்குரியது.

திட்டமிடல் இல்லாமல் எதனையும் ஆக்கப்பூர்வமாக செய்ய முடியாது. அவ்வகையில் ஒரு பிள்ளையை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது.  பெற்றோரின் திட்டமிடலும் வழிகாட்டலுமே பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவெடுக்க துணை புரிகிறது.

பெற்றோரின் வழிகாட்டலில் சிறந்து விளங்கும் பிள்ளைகள் தாங்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களை கைவிடக்கூடாது என்பதையும் உணர வேண்டும் என கேசவன் மேலும் சொன்னார்.

இந்நிகழ்வில் சிறந்த அன்னை, தந்தையர் ஐவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதோடு பகாங், முவாட்ஸம் ஷா கல்லூரியில் கணக்கியல் துறையில் பயிலும் மாணவி கார்த்தினிக்கு சுங்கை சிப்புட் இந்து சங்கம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் 'ஶ்ரீகாசி' ஜெயராமன், ஆலயத் தலைவர் கோபாலன், அமுசு. ஏகாம்பரம்  உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment