ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மிகப் பெரிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள மஇகா, பழைய சிந்தாந்தத்தையே பேசி கொண்டிருக்காமல் புதிய தலைமைத்துவம் ஏற்க வழிவகுக்க வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.
மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை 14ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களிடையேயான இந்த மாற்றத்தை ஒரு படிப்பினையாகக் கொண்டு மஇகா மீண்டும் எழுச்சி பெற புதிய தலைமைத்துவத்தை ஏற்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.
மஇகா கட்சித் தேசியத் தலைவருக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் புதிய தலைமைத்துவம் பொறுப்பேற்பதே தற்போதைய அவசியமாகிறது.
தற்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியத்தின் தலைமைத்துவத்தை குறை சொல்லவில்லை. ஆனால் மாற்றத்தை விரும்பும் மக்கள் நமக்கு புகட்டியுள்ள பாடத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மஇகாவின் வரலாற்றில் முன்னாள் தலைவர்கள் சிலர் குறைந்த காலமே தலைவர்களாக பொறுப்பு வகித்துள்ளனர். அதன் அடிப்படையில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்தின் தலைமை காலம் குறைந்ததாக இருப்பினும் இன்னொரு வாய்ப்பு கேட்பது தவறில்லை. ஆனால்இன்னுமொரு வாய்ப்பை கொடுப்பதற்கான காலம் இது இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு மஇகா எழுச்சி பெறுவதற்கு இப்போது ஆக்ககரமான திட்டங்கள் வகுக்கப்படுவது அவசியமாகும். அதன் அடிப்படையில் புதிய தலைமைத்துவம் மஇகா எழுச்சி பெற வழிவகுக்கும் என மணிமாறன் கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment