Wednesday, 13 June 2018

நிலப்பட்டாவை பெறும் 144 பேரின் பெயர்பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்- சிவநேசன்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பெம்பானில் மேற்கொள்ளப்படும்  மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (ஆர்பிடி)
கம்போங் செக்கடி குடியிருப்பில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 144 பேருக்கு முதல் கட்டமாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த 144 பேரின் பெயர் பட்டியலும் பொது மக்களின் பார்வைக்காக ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் பார்வைக்காக வைக்கப்படும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

36.25 ஹெக்டர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீடமைப்பு திட்டம் மலேசியாவிலேயே மிகப் பெரிய இந்தியர் குடியிருப்பாக திகழும் என கூறிய அவர், மூன்று கட்டமாக வீட்டு நிலம் வழங்கப்படும் நிலையில் முதல் கட்டமாக 144 பேருக்கு இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கியது. அதில் அடிப்படை வசதிகளான கால்வாய், சாலை போன்றவை தயார்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டுடைமை வாய்ப்பை பெற்றுள்ள 144 பேரின் விவரங்களும் முழுமையாக ஆராயப்படும் என கூறிய சிவநேசன், வீடில்லாதவர்களுக்கு வீட்டுமையை திட்டத்தில் பங்களிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப பிற வீடு இல்லாதவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

இத்திட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளவர்கள் நில அளவுக்கான செலவீனத் தொகையாக 700 வெள்ளியை தயார்படுத்திக் கொள்வதோடு தீபாவளி பெருநாளுக்கு முன்னதாக இந்த 144 குடும்பங்களும் நிலத்திற்கு உரிமையாளர் ஆக்கப்படுவர் என்றார்.

அடுத்தடுத்த திட்டங்களின் வழி இன்னமும் வீடில்லா பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சிவநேசன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் சிவநேசனுடன் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment