Saturday 19 May 2018
'ஓட்டமா? - சேவையா?'; தோல்வி கண்ட மஇகா வேட்பாளர்களின் நிலையென்ன?
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இத்தேர்தலில் தோல்வி கண்ட வேட்பாளர்கள் இப்போதுதான் மெல்ல வெளியே வர தொடங்கியுள்ளனர்.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த தேசிய முன்னணி இம்முறை ஆட்சி அதிகாரத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடம் பறிகொடுத்தது.
இத்தேர்தலில் தேசிய முன்னணி படுதோல்வியை அடைந்த நிலையில் மத்திய அரசாங்கத்தையும் பல மாநிலங்களின் ஆட்சி உரிமையையும் இழந்து நிற்கிறது.
தேர்தலில் தோல்வி கண்டாலும் தேசிய முன்னணியின் கூட்டணியில் உள்ள அம்னோவும், மசீச தங்களை அடுத்தக்கட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்ள நிதி வளம் கொண்டுள்ள நிலையில் மஇகாவின் நிலை என்னவென்பதே இப்போதைய கேள்வியாகும்.
'தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கான சேவை மையம் திறக்கப்படும்' என்பது மஇகா வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரமாகும். இத்தனை கால தேர்தல்களில் இந்த பிரச்சாரத்தை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாவிட்டாலும் 14ஆவது பொதுத் தேர்தலில் அதன் 'எதிர்ப்பலை' வேகமாக இருந்தது.
'தேர்தலில் தோற்றவுடனேயே யாருமே வருவதில்லை; வேட்பாளரையும் பார்க்க முடியவில்லை. இப்போதுதான் உங்கள் கண்களுக்கு நாங்கள் தெரிகிறோமா?' என மக்கள் கேட்ட கேள்விகள் கொஞ்சநஞ்சமல்ல.
தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே மக்களை சந்திக்க தவறிய மஇகா வேட்பாளர்கள், இப்போது ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ள நிலையில் மக்களுக்கு சேவை செய்ய முன்வருவார்களா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
கொடுத்த வாக்குறுதிக்கேற்ப மக்களுக்கு சேவை செய்ய தோல்வி கண்ட வேட்பாளர்கள் முன்வருவார்களா?, தோற்கடித்து விட்டார்கள்; இனி என்ன செய்ய வேண்டியிருக்கிறது எனும் நினைப்பில் தொகுதியை மறந்தும் எட்டி பார்த்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்களா? என்பதை தெரியவில்லை.
ஆனால், தோல்வி கண்ட வேட்பாளர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் ஐந்தாண்டுகளில் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும். அப்போதும் மஇகா சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கக்கூடும். அப்போது வெற்றி பெற வேண்டுமானால் நிச்சயம் மக்களுக்கு நாம் சேவை செய்தே ஆக வேண்டும்' என்ற சிந்தாந்தக் குரல் ஒலிக்கலாம்.
ஆகவே, தோல்வி கண்ட மஇகா வேட்பாளர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கேற்ப மக்களுக்கான சேவை முன்னெடுப்பார்களா? அல்லது 'ஆட்சியே கைவிட்டு போச்சு' என கூறி ஓட்டம் பிடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment