ரா.தங்கமணி
ஈப்போ-
இந்திய சமுதாயத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் சுரண்டி மக்களை ஏமாற்றி வந்த மஇகா, தேசிய முன்னணிக்கு மக்கள் கொடுத்திருக்கும் 'மரண அடி'யால் இனி அவர்களால் எழுந்திருக்கவே முடியாது என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஆதரித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். மக்கள் அளித்துள்ள இத்தேர்தல் வரலாற்றுப்பூர்வமானதாகும்.
இத்தேர்தல் முடிவு இதுவரை இந்திய சமுதாயத்தை ஏமாற்றி வந்த மஇகா, தேசிய முன்னணித் தலைவர்களுக்கு கொடுத்துள்ள 'மரண அடி'யாகும். இதிலிருந்து அவர்களால் இனி எழுந்திருக்கவே முடியாது.
சிறந்த ஆட்சியை வழங்குவோம் என்ற நம்பிக்கையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஆட்சியமைக்க வழிவகுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் பூர்த்தி செய்யப்படும்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இந்தியர்களின் உரிமைகளும் சலுகைகளும் நிச்சயம் கட்டிக் காக்கப்படும் என்ற சிவநேசன், 50 ஆண்டுகால கட்சியான ஜசெக (டிஏபி) மக்களின் வாழ்வாதாரத்திற்கு எப்போதுமே குரல் கொடுத்து வந்துள்ளது.
அதன் அடிப்படையில் எவ்வித மானியமும் இல்லாமல் 50 ஆண்டுகளாக கட்சியை வழிநடத்திய ஜசெக, ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள சூழலில் இந்தியர்களின் உரிமைகளுக்காக நிச்சயம் குரல் எழுப்பும் என சிவநேசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment