புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பேரா மாநிலத்தில் டான்ஶ்ரீ கோ.இராஜுவுக்கு பின்னர் ஆட்சிக்குழு உறுப்பினராக யாரும் பதவி வகிக்காத அவலம் இந்த தேர்தலில் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. புந்தோங், சுங்காய், ஜெலாப்பாங் ஆகிய மூன்று தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
அதிகமான இந்திய வாக்காளர் உள்ள புந்தோங் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தல் முதல் மஇகா போட்டியிட்டு வருகிறது. இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகாவுக்கு இந்தியர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் புந்தோங் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள திருமதி தங்கராணியை இங்குள்ள வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
2008ஆம் ஆண்டோடு கைநழுவி போன ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியால் மீண்டும் மஇகாவுக்கு கிடைக்க வேண்டும்.
நாம் வெற்றி பெற்று பதவி அதிகாரத்துடன் ஆளும் அரசாங்கத்தில் இடம்பெற்றால்தான் நமது சமுதாயத்திற்கான ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஈப்போ பாராட் மஇகா அலுவலகத்தில் மக்களை சந்தித்தபோது டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் புந்தோங் தேமு வேட்பாளர் திருமதி தங்கராணி, ஈப்போ பாராட் மஇகா தலைவர் டான்ஶ்ரீ கோ.இராஜு உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment