Tuesday 3 April 2018

திருப்புமுனையாகும் சுங்கை சிப்புட் 'அரசியல்'; வேட்பாளராகிறார் டத்தோ இளங்கோ?


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
'சதுரங்க' ஆட்டம் போல் ஒவ்வொரு நாளும் திருப்புமுனையாகிக் கொண்டிருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ வேட்பாளராக களமிறங்கக்கூடும்  என பரபரப்பாக பேசப்படுகிறது.

2008ஆம் ஆண்டு எதிர்க்கட்சியிடம் தோல்வி கண்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றிட தேசிய முன்னணியும் மஇகாவும் இலக்கு வைத்து 'காய்'களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சுங்கை சிப்புட் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவது யார்? என்ற கேள்வியே இத்தொகுதி மக்களின் அரசியல் 'கலவரமாக' மாறியுள்ளது.

 மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எஸ்.சோதிநாதன், மஇகா தலைமை பொருளாளர் டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி, பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ
எஸ்.கே.தேவமணி ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன.

இதுமட்டுமல்லாது உள்ளூர் வேட்பாளர் கோரிக்கையும் இங்கு வலுபெற்ற நிலையில் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி,   தொழிலதிபர் யோகேந்திரபாலன், 'கர்மா' இயக்கத்தின் தலைவர் வின்சென்ட் டேவிட் ஆகியோரின் பெயர்களும் உலா வந்துக் கொண்டிருந்தன.

நாட்டின் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தற்போது புதிதாக டத்தோ இளங்கோவின் பெயர் பரவிக் கொண்டிருக்கிறது.
ஊத்தான் மெலிந்தாங்கில் களமிறங்கோம் என 2 ஆண்டுகளாக அங்கே தீவிர நடவடிக்கையை டத்தோ இளங்கோ மேற்கொண்டு வந்த சூழலில்
அத்தொகுதியை அம்னோ எடுத்துக் கொண்டது மிகப் பெரிய பேரிடியே.

ஊத்தான் மெலிந்தாங் கைவிட்டாலும் சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் கால் பதிக்கலாம் என நினைத்த டத்தோ இளங்கோவுக்கு மசீச கட்சி முட்டுக்கட்டையாக திகழ்கிறது.

பேராக் மாநில  மஇகா  தலைவராகவும் திகழ்கின்ற அவருக்கு நிச்சயம் ஒரு  தொகுதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையின் காரணமாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ இளங்கோ வேட்பாளராக களமிறங்கக்கூடிய சாத்தியம் அதிகமாகவே உள்ளது.

No comments:

Post a Comment