ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கான நிலம் அரசாங்கம் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள போதிலும் மக்களை குழப்பும் வகையில் உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்ட புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என புந்தோங் மைபிபிபி தலைவர் டத்தோ நரான் சிங் கூறினார்.
இவ்வாலயத்திற்கு மாநில அரசு நில ஒதுக்கீடு செய்யாதது ஏன்? என்று சிவசுப்பிரமணியம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
2010ஆம் ஆண்டிலேயே இவ்வாலயத்திற்கான நிலத்தை ஈப்போ இந்து தேவஸ்தானத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் உண்மை நிலவரம் அறியாமல் மக்களை குழப்பும் வகையில் அறிக்கைகள் வெளியிடுவதுதான் ஒரு பொறுப்பான சட்டமன்ற உறுப்பினரின் கடமையா?
ஆலயத்திற்கு நில ஒதுக்கீடு செய்யவில்லை என அறிக்கை விடுத்த சிவசுப்பிரமணியம், அதனை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அறிக்கை விட்டிருக்க வேண்டும்.
உண்மை என்ன என்பதை அறியாமல் தவறான தகவலை வெளியிட்டு அது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி மக்களின் அமைதி தன்மைக்கு ஊறு விளைப்பதாக அமைந்துள்ளது.
ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய நில விவகாரம் தொடர்பில் அறிக்கை விடும் முன்னர் அதன் நிலை என்ன என்பதை ஆலய நிர்வாகத்திடம் முழுமையாக அறிந்து கொண்டு அறிக்கை விடுங்கள், அதை விடுத்து தவறான தகவலை வெளியிட்டு மக்களை குழப்பி கொண்டிருக்க வேண்டாம் என டத்தோ நரான் சிங் கூறினார்.
No comments:
Post a Comment