Friday, 27 April 2018

தொகுதி சீரமைப்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை கைவிட்ட மஇகா- சிவநேசன் சாடல்


ரா.தங்கமணி

ஈப்போ-
2008ஆம் ஆண்டில்  தோல்வி கண்டவுடன் தனது சேவை மையத்தை மூடி விட்டு சென்ற மஇகா இப்போதுதான் தனது சேவை மையத்தை தொடங்கியுள்ளது என  சுங்காய் சட்டமன்றத் தொகுதி ஜசெக வேட்பாளர் அ.சிவநேசன் சாடினார்.

1974இல் இருந்து 2008ஆம் ஆண்டு வரை இங்கு போட்டியிட்ட மஇகா  2008இல் தோல்வி கண்ட பின்னர் மக்களுக்கான சேவையை தொடராமல் சேவை மையத்தை இழுத்து மூடிவிட்டு சென்றனர்.

2004ஆம் ஆண்டு சுங்காய் தொகுதியில் போட்டியிட்டபோது தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கிய டத்தோ கணேசனிடம்  1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டேன். ஆனால் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் தேமு வேட்பாளர் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கத்தை வீழ்த்தி வெற்றி பெற்றேன்.

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு தேர்தலில் மசீசவிடம் தொகுதியை பரிமாறி கொண்ட மஇகா, இங்குள்ள இந்தியர்கள் நலனுக்காக போராடாத மஇகா இப்போது மீண்டும் இங்கு போட்டியிட முனைகிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி எல்லை மறுசீரமைப்பின்போது சீன, இந்திய வாக்காளர்களில் 6,000 பேரை பேராங்,சிலிம் ஆகிய தொகுதிகளுக்கு இடமாற்றம் செய்தது இங்குள்ள மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இந்த வாக்காளர்கள் இடமாற்றம் செய்வதற்கு மசீசவும் மஇகாவும் எதிர்ப்பு குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.

ஆனால்  இந்த வாக்காளர் மறுசீரமைப்பில் இந்திய வாக்காளர்கள் 21 விழுக்காடாக இருந்தது 12 விழுக்காடாக குறைந்தது. 54 விழுக்காடாக இருந்த சீன வாக்காளர்கள் எண்ணிக்கை  44 விழுக்காடாக சரிவு கண்டது.  மேலும் பெராங் தொகுதியிலிருந்து  4,40 மலாய் வாக்காளர்கள் சுங்காய் தொகுதிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த மறுசீரமைப்பை எதிர்த்து வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்டேன். அதன் விளைவாக 12ஆக சரிந்த இந்திய வாக்காளர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. அதேபோன்று 28 விழுக்காடாக இருந்த மலாய்க்காரர்கள் 12 விழுக்காடாக குறைந்துள்ளனர். 3 விழுக்காடாக இருந்த பூர்வக்குடியினர் 5.5 விழுக்காடாக உயர்வு கண்டனர். 54விழுக்காடாக இருந்த சீன சமூகத்தினர் தற்போது 63 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளனர்.

இந்த எல்லை மறுசீரமைப்பை எதிர்த்து நான் மட்டும் போராடவில்லையென்றால் சுங்காயிலுள்ள 8 மஇகா கிளைகள் சிலிம் பகுதியில் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கும்.

இந்த 8 கிளைகளை காப்பற்ற முடியாத  மஇகாவா இத்தொகுதி மக்களை காப்பற்ற போகிறது. ஆகவே வரும் பொதுத் தேர்தலில் சுங்காய் வட்டார மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நன்கு சிந்திக்க வேண்டும் என்றார் சிவநேசன்.

No comments:

Post a Comment