Tuesday, 24 April 2018

தேமுவின் 'பாரம்பரியம்' கொள்கை; ஆபத்தா? - ஆக்கப்பூர்வமா?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகம் தற்போது  பரவலாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வரும் தேசிய முன்னணி இம்முறை வேட்பாளர் விவகாரத்தில் சற்று 'ஆட்டம்' கண்டுள்ளதாகவே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'புத்ராஜெயாவை கைப்பற்றுவோம்' என்ற முழக்கத்துடன் அரசியல் ஜாம்பவன்களான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது, முன்னாள் துணைப் பிரதரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், டான்ஶ்ரீ முகைதீன் யாசீன், டத்தோஶ்ரீ வான் அஸிஸா, லிம் கிட் சியாங், பாஸ் கட்சியிலிருந்து பிரிந்த அமானா, 2007ஆம் ஆண்டு இந்தியர்களின் எழுச்சிக்கு வித்திட்ட ஹிண்ட்ராஃப்- உடன் கூட்டணி என பக்காத்தான் ஹராப்பானில் (நம்பிக்கைக் கூட்டணி) வட- தென் துருவங்கள் இணைந்தபோது பல தலைவர்கள் ஒருங்கிணைந்து  இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

அனல் பறக்கும் தேர்தலாக கருதப்படும் இத்தேர்தலில் தேசிய முன்னணி தனது வேட்பாளர்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனால், அந்த  'கவனம்'தான் தேமுவின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்ற 'பிரமாஸ்திரம்' என்பதை மறுக்க முடியாது.

மக்கள் சேவை VS பாரம்பரியம் VS வெற்றி


மக்களுக்கான சேவையா? அல்லது கட்சியின் பாரம்பரியமா? என்ற கேள்விதான் இன்று தேசிய முன்னணியை உலுக்கி கொண்டிருக்கும் மிகப் பெரிய கேள்வியாகும்.

மக்களுக்கான சேவையை வழங்குபவர்களுக்கே  தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என முன்பு முழங்கிய தேசிய முன்னணி தற்போது கட்சியின்  பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து  தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது தேமு கூட்டணிக்குள் மிகப் பெரிய 'பூகம்பத்தையே' உருவாக்கியுள்
ளது எனலாம்.

மக்களுக்கான சேவைகளை பல ஆண்டுகளாக முன்னெடுத்த மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், புந்தோங் தொகுதியின் மைபிபிபி தலைவர் டத்தோ நரான் சிங், பேரா மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ உட்பட இன்னும் பலர் அந்தந்த தொகுதிகளில் களமிறங்கி மக்களுக்கான சேவையை முன்னெடுத்தனர்.

ஆனால் கட்சி பாரம்பரியத்தை  சுட்டிக் காட்டி   கேமரன் மலையில் டான்ஶ்ரீ கேவியசுக்கும், புந்தோங்கில் டத்தோ நரான் சிங்கிற்கும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு தேர்தல் வெற்றியை காரணம் காட்டி ஊத்தான் மெலிந்தாங்கில்  டத்தோ இளங்கோவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு அந்த தொகுதியை அம்னோ கைப்பற்றி கொண்டது.

'அதிருப்தி' தோல்விக்கு வழிவகுக்குமா?

இப்படி சேவை செய்த தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ள அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்யுமா? என்ற கேள்வி எழுகிறது.

ஊத்தான் மெலிந்தாங்கில் கடந்த ஈராண்டுகளாக வேலை செய்து வெற்றியின் பிரகாசத்தில் ஜொலித்த டத்தோ இளங்கோ, 'சட்டென' அம்னோ எடுத்த முடிவினால் இன்று சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் பலத்த எதிர்ப்புகளுக்ககிடையே களமிறக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று இன்னும் சில தொகுதிகளில் களமிறங்கியுள்ள சமூக சேவகர்கள் மேற்கொண்ட சமூக நடவடிக்கைகளாலும் 'தான் சேர்ந்த கூட்டம்' அவர்களது பின்னாலும் அணிவகுத்து நிற்பதால் தேசிய முன்னணியின் 'ஆதரவு வட்டம்' சுருங்கியுள்ளதாக தெரிகிறது.

வேட்பாளர் தேர்வில் மிகப் பெரிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள  தேசிய முன்னணி, வேட்புமனுவுக்குப் பின்னர் எஞ்சிய 12 நாள் பிரச்சாரத்தில் அதிருப்தி அலைகளை மூழ்கடித்து, மக்கள் மனங்களை வென்று, மக்கள் மத்தியில் தங்களை நிலைநிறுத்தி கொள்வது தற்போதைய காலத்தில் மிக சிரமமானது.

அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி மக்களை கவர்ந்து தேர்தலில் வென்று 'அரியாசனத்தை' கைப்பற்றுபவர்களே 'நிஜ அரசியல்வாதிகள்'.

அந்த 'அதிர்ஷ்டக் காற்று' எத்தனை பேருக்கு வீசப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment