Thursday, 19 April 2018
நான் மைபிபிபி கட்சி உறுப்பினரா?; டான்ஶ்ரீ கேவியஸ் உளறுகிறார்- டத்தோ சிவராஜ் காட்டம்
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி கை நழுவி போகிறது என்ற அச்சத்தில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், தான் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் என கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் கூறினார்.
தனது கட்சியின் உறுப்பினர்கள் யார் என்பது கூட தெரியாத அளவுக்கு மிகவும் பலவீனமாக மைபிபிபி கட்சி இருப்பதை அவரது கூற்று வெளிப்படுத்துகிறது.
நான் 2003இல் பிபிபி கட்சியில் இணைந்ததாகவும் 2004ஆம் ஆண்டு தைப்பிங் போட்டியிட்டபோது பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் டான்ஶ்ரீ கேவியஸ் பொய்யான தகவலை கூறியுள்ளார்.
நான் இணைந்த முதல் கட்சியே மஇகா தான். 2004ஆம் ஆண்டில்தான் மஇகாவில் இணைந்தேன். அதுவரை தனது உயர்கல்வியை முடித்து தொழிலில் கவனம் செலுத்தி வந்தேன். இந்திய சமுதாயத்தின் நலன் கருதியே மஇகாவில் இணைந்தேன். அதன் பிறகு 2013இல் மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவராக பதவியேற்றேன்.
இந்நிலையில், தான் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் என டான்ஶ்ரீ கேவியஸ் கூறுவது அவரது பலவீனத்தையே காட்டுகிறது. 2013ஆம் ஆண்டிலேயே தான் ம இகாவின் இளைஞர் பிரிவுத் தலைவராக பதவியேற்றபோதே தாம் மைபிபிபி கட்சி உறுப்பினர் என்பதை டான்ஶ்ரீ கேவியஸ் அறிந்திருக்கவில்லையா?
நகைப்புக்குரிய வகையில் அறிக்கை விடும் கேவியஸ், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூட மைபிபிபி கட்சி உறுப்பினர் என கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவரின் கூற்று அவரை மட்டுமின்றி கட்சியையும் பாதிக்கச் செய்யும் என்பதால் அறிக்கை விடுவதில் கவனம் கொள்ளுமாறு டத்தோ சிவராஜ் அறிவுறுத்தினார்.
இதனிடையே, நேற்று மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ சிவராஜ் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் எனவும் 2003லேயே அவர் கட்சியின் உறுப்பினராக இணைந்துக் கொண்டார் எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் ஆதாரத்துடன் கூறினார்.
கட்சியிலிருந்து விலகவில்லை; நீக்கப்படவில்லை என்பதால் இன்னமும் அவர் மைபிபிபி உறுப்பினராக கருதப்படுகிறார்.
ஆதலால் டத்தோ சிவராஜ் கேமரன் மலையில் போட்டியிட்டால் அது மைபிபிபி தொகுதியாகவே கருதப்படும் என டான்ஶ்ரீ கேவியஸ் அதிரடியாக அறிவிப்பு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment