Sunday, 15 April 2018

'மஇகாவை குறை கூறுபவர்களுக்கு பதிலடி கொடுங்கள்'- இளைஞர்களுக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மஇகாவை பற்றி யார் குறை கூறினாலும் பதிலடி கொடுக்க தயங்காதீர்கள். அவர்களின் குறைகூறல்களுக்கு பதிலடி கொடுக்காமல் இருப்பதால்தான் குறை கூறுபவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகா முன்பு வலுவான கட்சியாக விளங்கியது. ஆனால் இன்று பலரின் குறைகூறலுக்கு ஆளாகி வலுவற்றதாகவும் ஒதுக்கப்படும் கட்சியாகவும் மஇகா உருமாறி கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் மஇகாவை அழிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின்  திட்டம் அரங்கேற்றப்பட்டு அது மெல்ல மெல்ல சாத்தியமாக்கப்பட்டு வருகிறது.

தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டுமென்றால் இந்தியர்களின் ஆதரவை இழக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய எதிர்க்கட்சியினரின் திட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளும் அரங்கேற்றப்பட்டன.
எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியால் மஇகாவை குறை கூறும் படலம் அதிகரித்து மஇகா வலுவிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

மஇகாவை குறை கூறும் போதெல்லாம் நாம் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருப்பதால்தான் எதிர்க்கட்சியினர் மஇகாவை குறை கூறி கொண்டே இருக்கின்றனர் என பேரா மாநில நட்புறவு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

முன்பு  இருந்த  மஇகா இளைஞர் பிரிவு  மஇகாவின் அரணாக இருந்தது. மஇகாவை யார் குறை கூறினாலும் அதற்கு  மஇகா இளைஞர் பிரிவு பதிலடி கொடுத்தது. மஇகாவின் மேம்பாட்டிற்கு இளைஞர் பிரிவு உத்வேகமாக செயல்பட்டது.

இளைஞர்களின் வலுவான ஆதரவால் மஇகா ஆக்ககரமாக விளங்கியது ஒரு
பொற்காலம். அதுபோன்றதொரு சூழலை மீண்டும் உருவாக்க வேண்டும். மஇகாவை யார் குறை சொன்னாலும் அதற்கு பதிலடி கொடுக்க இளைஞர்கள் குரல் உயர்த்த வேண்டும். நாம் குரல் உயர்த்தினால்தான் எதிர்க்கட்சியினரின் பொய்யான  குற்றச்சாட்டுகளை முறியடிக்க முடியும் என அவர் மேலும் சொன்னார்.

இந்நிகழ்வில் மலேசிய நட்புறவு இயக்கத்தின்  உதவித் தலைவர் நந்தகுமார், பேராக் மாநில நட்புறவு இயக்கத்தின் தலைவர் ராஜ்குமார், பேரா சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி,  பேரா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, பேரா  மஇகா மகளிர் பிரிவுத் தலைவி தி.தங்கராணி உட்பட பல இயக்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment