Tuesday, 6 March 2018

'கேமரன் மலையில் கேவியஸ்'; பிரதமரிடம் போய் கேளுங்கள் - மைபிபிபி இளைஞர் பிரிவு



ரா.தங்கமணி, படங்கள்: மோகன்ராஜ் வில்லவன்

கோலாலம்பூர்-
கேமரன் மலையில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் சேவையாற்றுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்புவதை விட அவரை அங்கு சேவையாற்ற சொன்ன பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடமே கேளுங்கள் என மஇகாவினருக்கு  பதிலடி கொடுத்தார் மைபிபிபி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன்.

மஇகாவில் நிலவிய உட்கட்சி பூசல் காரணமாக அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலை கட்சியிலிருந்து நீக்கி கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியாக அறிவிக்கச் சொல்லி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியது மஇகாவே ஆகும்.

சுயேட்சை தொகுதியாக அறியப்பட்ட அங்கு மக்களின் பிரச்சினைகளை கண்டறியவும் சேவையாற்றவும் டான்ஶ்ரீ கேவியசை அங்கு களமிறங்க சொன்னதே பிரதமர் நஜிப் தான் என்ற நிலையில், இத்தொகுதி எங்களின் பாரம்பரிய தொகுதி என பழங்கதை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணனின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்தார் சத்தியா.

லிப்பிஸ் நாடாளுமன்றத் தொகுதியை பிரித்து கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டதே பிபிபி கட்சிக்காத்தான். 2003இல் அப்போதைய பிரதமர் துன் மகாதீர் இத்தொகுதியை கேவியசுக்காக உருவாக்கினார்.

ஆனால் அவரது பதவி விலகலுக்கு பின்னர் பிரதமராக வந்த துன் அப்துல்லா படாவி 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியை மஇகாவிடம் வழங்கினார்.

பிரதமர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு 2004, 2008 பொதுத் தேர்தல்களில் கெராக்கான் கட்சியின் தைப்பிங் தொகுதியில் போட்டியிட்ட டான்ஶ்ரீ கேவியஸ், அத்தொகுதியை கெராக்கான் கட்சி மீண்டும்  கோரியதால் விட்டுக் கொடுத்தார்.

2013இல் மசீச-வின் பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர், அங்கு தோல்வி கண்ட பின்னர் மசீச-வின் கோரிக்கைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து தனக்காக உருவாக்கப்பட்ட கேமரன் மலை தொகுதியில் 'பிரதமரின் ஆசி'யுடன்  நான்காண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

டான்ஶ்ரீ கேவியசின் சேவைகளை தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ்  நன்றி தெரிவித்துள்ளார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களையே பிரதமர் நஜிப் களமிறக்குவார் என்பதன் அடிப்படையில்  கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில்  டான்ஶ்ரீ கேவியஸ் 'வேட்பாளராக களமிறக்கப்படுவார்; வெற்றி பெறுவார்' என சத்தியா சுதாகரன் கூறினார்.

டான்ஶ்ரீ கேவியசின் மக்கள் பணி சேவைகளை கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்காக ஆக்ககரமான திட்டங்களில் மஇகாவின் அதீத கவனம் செலுத்த வேண்டும் என இன்று மைபிபிபி கட்சி தலைமயகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சத்தியா இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment