Friday, 30 March 2018

விருது பெற்றாலும் மகளின் ஏக்கம் வேதனை தருகிறது - திருமதி இந்திரா காந்தி


புனிதா சுகுமாறன் 

 ஈப்போ:

அமெரிக்காவின் துணிவுமிக்க பெண் விருதை பெற்றது பெருமையாக இருந்தாலும் ஒரு தாயாக பெற்ற மகளை இன்னமும் பிரிந்திருப்பது வேதனையாகவே உள்ளது என திருமதி இந்திரா காந்தி தனது மனவேதனையை வெளிபடுத்தினார்.

தனது முன்னாள் கணவரால் மூன்று பிள்ளைகளும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டார் திருமதி இந்திரா காந்தி.

தனது முன்னாள் கணவரின் செயலை எதிர்த்து துணிச்சலாக சட்டப் போராட்டம் நடத்தி அதில்  வெற்றி கண்டதை அடுத்து அமெரிக்காவின் 'துணிச்சல்மிகு பெண்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார் அவர்.

இவ்விருதை நேற்று பெற்றுக் கொண்ட அவர், இவ்விருது எனக்கு பெருமையாக உள்ளது; ஆனாலும் என் மகளை பார்க்காமல் மனம் வேதனை அடைகிறது.

பெற்ற தாய்க்கு பிள்ளைகள் தானே சொர்க்கம் என்ற நிலையில் பிள்ளையை பிரிந்துள்ள துயரம் வேதனை அடையச் செய்கிறது.

ஆயினும் இவ்விருதை எனக்கு அளித்த மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் கமலா ஷரீனுக்கு நன்றி கூறிக் கொள்ளும் வேளையில் இவ்விருதை என்னை போல் தனித்து வாழும் அனைத்து பெற்றோருக்கும் சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.

மேலும், இந்த வழக்கில் தனது உறுதுணையாக இருந்து சட்டப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வழக்கறிஞர் எம்.குலசேகரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


கடந்த 2009ஆம் ஆம் ஆண்டு தனது இஸ்லாத்திற்கு மதம் மாறிய முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் என்ற கே, பத்மநாபன் மூன்று பிள்ளைகளையும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தார்.

அதோடு, 9 மாத கைக்குழந்தையாக இருந்த பிரசன்னா டிக்‌ஷாவை தன்னோடு கொண்டு சென்ற முகமட் ரிடுவான் இப்போது தலைமறைவாக உள்ளார்.


No comments:

Post a Comment