நேர்காணல்: ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயம் பெருமளவு பின்னடைவை சந்தித்துள்ளதற்கு காரணம் முறையான தகவல்களை அறிந்து வைத்திராததே ஆகும்.
அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளையும் நாம் முழுமையாக அறிந்து வைத்திராததால் அந்த வாய்ப்புகளை பெற முடியாமல் தவிக்கும் சூழலை எதிர்கொள்கிறோம் என பேராக் மாநில மைபிபிபி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் நோர் ஃபட்சில் பின் சாஹுல் ஹமிட் குறிப்பிட்டார்.
ஒரு தகவலை முழுமையாக அறிந்த சமுதாயமாக எப்போது இந்திய சமுதாயம் உருமாறுகிறதோ அப்போதுதான் இந்திய சமுதாயத்தின் நிலை மேம்பாடு காணும் என 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின்போது சுங்கை சிப்புட் மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர் கூறினார்.
அவருடனான சிறப்பு நேர்காணல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
கே: அரசியல் ரீதியில் இந்தியர்களின் நிலை எவ்வாறு உள்ளது என உணர்கிறீர்கள்?
ப: இந்திய இன்றைய நிலை பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது என கூறலாம். கல்வி, பொருளாதாரம், அடிப்படை வாழ்வாதாரம் போன்ற நிலையில் முந்தைய காலத்தை விட தற்போது வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சியில் அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்க முடியாது. ஏனெனில் முன்னேற்றம் கண்ட இந்திய சமுதாயத்தினரின் மத்தியில் இன்னமும் நடுத்தர சூழலும் வறுமை கோட்டின் கீழும் வாழும் நிலை உள்ளது.
வளர்ச்சி கண்ட இடங்களில் உள்ள இந்தியர்களின் வாழ்வாதாரமும் வளர்ச்சி காணாத இடங்களில் உள்ள இந்தியர்களின் வாழ்வாதாராமும் இன்னமும் மாறுபட்டுக் கிடக்கிறது.
கே: இந்திய சமுதாயத்தின் மத்தியில் இந்த மாறுபட்ட இடைவெளி என்ன காரணம்?
ப: இந்த இடைவெளிக்கு காரணமே சரியான தகவல்கள் மக்களை சென்றடையாததே ஆகும். அரசாங்கத்தின் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலை மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் அரசாங்கம் வழங்கும் எத்தகைய தகவலையும் அறிந்திடாமல் இருக்கும் மக்கள் தான் இன்று தங்களது வாழ்வில் பின் தங்கியவர்களாக கிடக்கின்றனர்.
ஆளும் அரசாங்கம் மக்களுக்கான வாய்ப்புகளையும் சலுகைகளையும் நிறையவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால் அந்த சலுகைகள், வாய்ப்புகளை பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கும் மக்களின் வாழ்வாதாரம்தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கே: சுங்கை சிப்புட் மக்களிடையேயான இன்றைய வாழ்வாதார சூழல்
எவ்வாறு உள்ளது? அங்குள்ள மக்களுக்கு தேவையானது என்ன?
ப: சுங்கை சிப்புட் தொகுதியில் உள்ள மக்களுக்கு மிக தேவையானது பொருளாதார வளர்ச்சிதான். அங்குள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுதான் இப்போது மிக முக்கியமானது.
முறையான வேலை வாய்ப்பு வசதி இல்லாததால் வேலை வாய்ப்புக்காக இன்று இங்குள்ள இளைஞர்கள் பலர் வெளிமாநிலங்களையும் வெளிநாட்டையும் தேடி செல்கின்றனர்.
இதனால் இங்கு இளைஞர்களின் ஆற்றல் இல்லாமல் எவ்வித மேம்பாடும் காணாமல் வளர்ச்சி இல்லாத தொகுதியாவே சுங்கை சிப்புட் மாறியுள்ளது.
கே: இங்குள்ள இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
ப: இன்றைய இளைஞர்களின் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது சொந்தத் தொழிலைதான். அதே சூழல்தான் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நிலவுகிறது. இங்குள்ள இளைஞர்களும் சொந்தத் தொழில் செய்வதையே விரும்புகின்றனர். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கின்றனர்.
கே: அத்தகைய இளைஞர்களுக்கு நீங்கள் காட்டும் வழி?
ப: சொந்தத் தொழிலில் ஈடுபட முனையும் இளைஞர்களை வரவேற்கிறோம்; அவர்களின் முயற்சியை ஆதரிக்கிறோம். எந்த தொழிலாக இருந்தாலும் அதை நன்கு திட்டமிடுவது அவசியமாகும்.
அதற்கேற்ப சொந்தத் தொழிலில் ஈடுபட முனையும் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களை ஆலோசனைகளை வழங்குகிறோம். சில இளைஞர்கள் சொந்தத் தொழிலில் ஈடுபட முனைந்தாலும் 'முதலீடு' இல்லாததால் முடங்கி விடுகின்றனர்.
அவர்களுக்கும் சில பயிற்சிகள் வழங்கி பெரு நிறுவனங்களிடம் பேசி அதன் கிளை நிறுவனங்களை இவர்களை நடத்துவதற்கு உந்துதல் அளிக்கிறோம். அதற்கேற்ப அதன் பயிற்சியையும் செலவீனங்களையும் பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் சூழலில் அவர்களை ஒரு வர்த்தகர்களாக உருவாக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
அரசு சார்பு நிறுவனங்களின் வாயிலாக வியாபாரத் திட்டத்திற்கு 'கடன்' திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் முழு தகவலையும் அறிந்திடாததன் காரணமாக பல வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்டுகிறது.
யயாசான் பினா உபாயாவுடன் பேராக் மாநில மைபிபிபி இணைந்து 'வர்த்தகர் பயிற்சி' திட்டங்களை முன்னெடுத்து செய்கிறோம். அதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு வர்த்தகம் தொடர்பான பயிற்சிகளும் அதன் பின்னர் வர்த்தக வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
-தொடரும்...-
No comments:
Post a Comment