Thursday, 15 March 2018
சுங்காய் தொகுதியை தான் கைப்பற்றினால் டத்தோஶ்ரீ ஸாயிட் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா? - சிவநேசன் சவால்
ரா.தங்கமணி
ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்காய் சட்டமன்றத் தொகுதியை வென்றெடுக்க வேண்டும் என தேமுவினருக்கு அறைகூவல் விடுத்துள்ள துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, இத்தொகுதி மீட்கவில்லையென்றால் அரசியலிலிருந்து விலக தயாரா? என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் சவால் விடுத்தார்.
அண்மையில் இங்கு நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற டத்தோஶ்ரீ ஸாயிட், கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சி வசம் வீழ்ந்து கிடக்கும் சுங்காய் நாடாளுமன்றத் தொகுதியில் எவ்வித மேம்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.
இத்தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றினால் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என கூறிய டத்தோஶ்ரீ ஸாயிட், இத்தொகுதியை மீட்டெடுப்பதில் தேமுவினர் முனைப்பு காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் மேம்பாடு இல்லை என கூறும் டத்தோஶ்ரீ ஸாயிட், தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டே சுங்காய் சட்டமன்றத் தொகுதி உள்ள நிலையில் மேம்பாட்டுத் திட்டங்களை தேசிய முன்னணி மேற்கொள்ளாதது ஏன்?
தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டு சுங்காய், சிலிம் ரீவர், பெராங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. சுங்காய் தொகுதியில் மேம்பாடு இல்லை என கூறும் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, ஆளும் தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த சிலிம் ரீவர், பெராங் தொகுதிகளில் எத்தகைய மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை விவரிக்க முடியுமா?
கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நானும் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ நிஸார் ஜமாலுடினும் சிலிம் ரீவர் பகுதியில் ஏர் ஆசியாவின் இரண்டாவது விமான நிலைய முனையத்தை அமைக்க முயற்சி மேற்கொண்டோம். ஆனால் 11 மாத ஆட்சிக்கு பின்னர் மாநில ஆட்சியை தேமு கைப்பற்றியவுடன் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மாநில ஆட்சி எங்கள் வசம் இருந்திருந்தால் இந்நேரம் சுங்காய் தொகுதி மட்டுமல்லாது பல இடங்களில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்திருப்போம். ஆனால் தங்கள் வசம் உள்ள நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூட மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்காத தேமு, சுங்காய் தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என வாய்சவடால் விட வேண்டாம்.
வரும் பொதுத் தேர்தலில் சுங்காய் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றினால் தான் அரசியலிலிருந்து முழுமையாக விடுபட்டுக் கொள்வதாகவும் ஒருவேளை அத்தொகுதியை தான் கைப்பற்றினால் டத்தோஶ்ரீ ஸாயிட் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா? என சிவநேசன் சவால் விடுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment