Thursday, 22 March 2018

'நட்சத்திர விழா'வினால் இந்திய சமுதாயத்திற்கு என்ன நன்மை?; நடிகர்கள் வசூலித்த தொகை எவ்வளவு? - சிவகுமார் கேள்வி


ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
கடந்த ஜனவரி நடைபெற்ற  'நட்சத்திர விழா'வில் இந்திய சமுதாயம் அடைந்த நன்மைகள் என்ன? என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர்களோடு உள்நாட்டு கலைஞர்கள் சிலர் பங்கேற்ற இந்த நட்சத்திர விழாவுக்கு இங்குள்ள ஓர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இடைதர்கர்களாக செயல்பட்டதை கண்டு வேதனை அடைகின்றேன்.

உள்நாட்டு கலைஞர்களுக்கே போதுமான நிதியை அரசாங்கம் வழங்காதபோது தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிக்காக  அரசியல்வாதிகள் நிதி திரட்டி கொடுப்பது ஏன்?

இந்நிகழ்ச்சியின் வழி தங்களது கட்டடத்திற்காக தென்னிந்திய நடிகர்கள் பணத்தை வசூல் செய்துள்ளனர். இங்குள்ள இந்தியர்களுக்கு இதனால் எவ்வித நன்மையும் இல்லை. இந்நிகழ்ச்சியின் நாம் முட்டாளாக்கப்பட்டுள்ளோம்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கேள்வி
நேரத்தின்போது 'நட்சத்திர விழா' குறித்து கேள்வி எழுப்பினேன்.

இவ்விழாவிற்காக மலேசிய சுற்றுலா, பண்பாட்டு துறை அமைச்சு எவ்வளவு நிதி வழங்கியது, இந்நிகழ்வின் மூலம் எவ்வளவு நிதி திரட்டப்பட்டது? எவ்வளவு நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது?, தமிழ்நாட்டுக் கலைஞர்கள் எவ்வளவு நிதியை வசூல் செய்து கொண்டுச் சென்றனர்? போன்ற கேள்விகளை முன்வைத்தேன்.

இந்நிகழ்விற்கு சுற்றுலா, பண்பாட்டு துறை அமைச்சு  10 லட்சம் வெள்ளி வழங்கியது என அறிவிக்கப்பட்டது.  மேலும் மற்ற செலவு 53 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

என்னை பொறுத்தவரையில் இவ்வளவு பெரிய தொகையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டுமா?. இதனால் யாருக்கு லாபம் கிடைத்தது.
டிக்கெட் விற்பனை வழி எவ்வளவு நிதி திரட்டப்பட்டது?, இதற்கானசெலவை ஈடுகட்டுவதற்கு எப்படி நிதி திரட்டப்பட்டது என்றெல்லாம் நான் எழுப்பிய கேள்விக்கு சரியான பதில் இல்லை.

இந்த நட்சத்திர விழாவுக்கு 250 தமிழ்த் திரைப்பட நடிகர்கள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிகழ்ச்சியின் வழி இந்திய சமுதாயம் அடைந்த  நன்மைகள் என்னவென்று கேள்வி எழுப்பிய சிவகுமார், 'காசிம்' அமைப்பு வழங்கப்பட்ட நிதி பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை. மாறாக தென்னிந்திய நடிகர்கள் எவ்வளவு பணத்தை வசூல் செய்து சென்றனர்? என்பதே எனது கேள்வியாகும் என்றார் அவர்.

No comments:

Post a Comment