ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
இந்து ஆலயங்கள் உடைபடும் நடவடிக்கையை மாநில அரசாங்கத்தின் விவகாரம் என மத்திய அரசாங்கம் தட்டிக் கழிக்கக்கூடாது. ஏனெனில் இது இன ரீதியிலான உணர்வுகளை தூண்டக்கூடியது என்பதால் மத்திய அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ஜோகூர், மாசாயில் ஶ்ரீ சிவசக்தி ஶ்ரீ சின்ன ஆண்டவர் ஆலயம் உடைப்பட்டது தொடர்பில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்வி மக்களவை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் ஜோகூர் மக்கள் மட்டுமல்லாது மலேசிய இந்தியர்களிடையே ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கேள்வி அரசியலைப்பு சட்டவிதியின்படி மாநில அரசாங்கத்தின் விவகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அதை மக்களவையில் விவாதிக்க முடியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.
உண்மைதான். மாநில விவகாத்திற்கு உட்பட்டதை மக்களவையில் விவாதிக்க முடியாதுதான். ஆனால் ஆலய உடைப்பினால் மத ரீதியிலான உணர்வுகள் தூண்டப்படுவதோடு அது தேசிய ஒற்றுமைக்கு பாதகமாக அமைகிறது.
தேசிய ஒற்றுமையை பேணுவதற்கு ஏதுவாக பிரதமர் துறையின் கீழ் ஒற்றுமை துறை இலாகா செயல்படுகிறது. அதன் அடிப்படையில் தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைகின்ற ஆலய உடைப்பு விவகாரத்திற்கு ஒற்றுமை துறை இலாகா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட இலாகாவின் கடமையாகும்.
மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆலய உடைப்பு விவகாரங்களில் தேசிய ஒற்றுமைத் துறை இலாகா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திய சிவகுமார், தான் எழுப்பிய கேள்விக்கு மக்களவை சபாநாயகரிடம் விளக்கம் அளித்துள்ள நிலையில் கூடிய விரைவில் தனது கேள்விக்கு பதிலளிக்கப்படும் என நம்புவதாக அவர் சொன்னார்.
No comments:
Post a Comment