Tuesday, 27 March 2018

மக்களின் நிலையை அறிந்த வேட்பாளரே வெற்றி பெற முடியும்- முகமட் நோர் ஃபட்சில் - பகுதி -2


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கின்ற நிலையில் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான ஆதரவு அலை திரும்பி கொண்டிருக்கின்றது.

அந்த ஆதரவு அலையை தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்  பேராக் மாநில மைபிபிபி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் அறவாரியத்தின் செயல்முறை அதிகாரியுமான முகமட் நோர் ஃபட்சில் பின் சாஹுல் ஹமிட்.

அண்மையில் அவருடன் 'மை பாரதம்' மேற்கொண்ட நேர்காணலின் தொடர்ச்சி  வாசகர்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.


கே: யயாசான் சுங்கை சிப்புட் மூலம் இந்தியர்கள் அடைந்துள்ள பலன்கள்?

: யயாசான் சுங்கை சிப்புட் மூலமாக இந்திய சமுதாயத்திற்கு பல உதவிகள் வழங்கப்படுகின்றன. பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி பலவகைகளில் உதவிகள் செய்யப்படுகின்றன.

ஆனால் அந்த உதவிகளை பெறுவதில்தான் நாம் தவறு இழைக்கின்றோம். உதவிகள் விண்ணப்பங்கள் முறையாக இல்லாததால் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை முறையாக செய்யத் தெரியாதவர்களுக்காக அலுவகலத்திலேயே உதவிகள் வழங்குகிறோம். எங்களை முறையாக நாடி விண்ணப்பங்களைச் செய்தாலே உதவிகள் பெற முடியும் என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்.

கே: அரசியலை பொறுத்தவரை சுங்கை சிப்புட் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது?

: சுங்கை சிப்புட்டை பொறுத்தவரை அரசியல் நிலவரம் பரபரப்பாகத்தான் உள்ளது. வேட்பாளர் விவகாரம், மக்களுக்கான சேவை, அரசியல் சூழல் உட்பட பல விவகாரங்களால் இங்கு அரசியல் நிலவரம் சூடாக உள்ளது.

கே: இங்கு களமிறங்கும் வேட்பாளர் விவகாரம் குறித்து...?

: சுங்கை சிப்புட்டில் களமிறங்கும் வேட்பாளர் முதலில் இங்குள்ள மக்களின் நிலைமைகளை புரிந்தவராக இருப்பது மிக அவசியம். பொதுவாகவே இங்கு களமிறங்கும் வேட்பாளர்கள் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

தலைநகரில் வாழும் மக்களின் சூழல் வேறு; இங்குள்ள மக்களின் வாழ்வாதார சூழல் வேறு. இங்குள்ள மக்கள் தோட்டப்புற சூழல் சார்ந்திருப்பவர்கள், ஆனால் தகைநகரில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதார சூழலும் மாறுபட்டிருக்கும்.

ஆதலால் இங்கு களமிறங்கும் வேட்பாளர் முதலில் மக்களின் சூழலை உணர்ந்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தான் வாழ்ந்த சூழலை இங்குள்ள மக்களிடம் திணிக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைதான் இங்குள்ள மக்களிடம் வெறுப்புணர்வை உண்டாக்கும். அது வேட்பாளருக்கு உகந்தது அல்ல.

கே: சுங்கை சிப்புட்டில் தேசிய முன்னணிக்கான மக்களின் ஆதரவு எப்படி உள்ளது?

: கடந்த காலங்களை விட மக்களிடையே தற்போது மாற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் எதிர்க்கட்சியை ஆதரித்தவர்கள் எல்லாம் தற்போது தேசிய முன்னணியை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மக்களிடையேயான இந்த மாற்றத்தை தேசிய முன்னணி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலவீனத்தை உண்டாக்கிக் கொள்வதை விட பலம் பொருந்தியதாக தேசிய முன்னணி தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திடும்.

- நன்றி-

No comments:

Post a Comment