Saturday 31 March 2018

சுங்கை சிப்புட்; உள்ளூர் வேட்பாளரை களமிறக்கினால் தேமு வெற்றி உறுதி செய்யப்படும்- கிருஷ்ணன் (வீடியோ இணைப்பு)

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி இழந்து விடக்கூடாது என கருதப்பட்டால் இம்முறை நடைபெறும் 14ஆவது பொதுத் தேர்தலில் உள்ளுரைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என மூத்த குடிமக்களில் ஒருவரான க.கிருஷ்ணன் (வயது 84)வலியுறுத்தினார்.

இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர் யார்? என்ற விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரின் கருத்துபடி உள்ளூர் வேட்பாளரே அவர்களது தேர்வாக உள்ளது.

வெளியிலிருந்து வரும் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரை தேடி நாங்கள்  தலைநகருக்குச் செல்ல வேண்டும்; தோற்றால் இந்த தொகுதியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

ஆனால், உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக களமிறக்கினால் வென்றாலும், தோற்றாலும் அவர் இங்கேயே இருப்பார்; மக்களுக்கு சேவை செய்யுமாறு உரிமையுடன் குரல் உயர்த்துவோம்.

இங்குள்ள எதிர்கால சந்ததியினரின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தேமு சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருப்பதை தாம் விரும்புவதாக தேசிய முன்னணியின் தீவிர ஆதரவாளரான கிருஷ்ணன் கூறினார்.

அவ்வகையில், இங்கு களமிறங்கி சேவையாற்றிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் யோகேந்திரபாலனுக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டால் நிச்சயம் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேமு வெற்றி கொள்ளும் என அவர் மேலும் சொன்னார்.

வீடியோ இணைப்புக்கு கீழே உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்:
https://web.facebook.com/BhaarathamOnlineNews/videos/292977271236116/



பினாங்கு விமான நிலையத்திற்கு அருகிலிருந்த கிடங்குகளில் தீ


ஜோர்ஜ்டவுன் -

பினாங்கு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிடங்குகளில் ஏற்பட்ட தீச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்றிரவு  ஏற்பட்ட இத்தீச்சம்பவத்தில் 4 கிடங்குகளில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இரவு 10.50 மணியளவில் தகவலை பெற்ற தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் நான்கு கிடங்குகளும் 90 விழுக்காடு முற்றிலுமாக சேதமடைந்தது என குறிப்பிட்ட பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை குழுத் தலைவர் சாடோன் மொக்தார் கூறினார்.

அந்த கிடங்குகளில் உணவுப் பொருட்கள், மரச்சாமான்கள், மின்சார சாதனங்கள் ஆகியவை கிடத்தி வைக்கப்பட்டதோடு மறுசுழற்சி செய்யும் கிடங்கும் உள்ளடங்கும்.

மறுசுழற்சி கிடங்கில் ஏற்பட்ட தீயே இதர கிடங்குகளுக்கு பரவியுள்ளதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சாடோன் மொக்தார் குறிப்பிட்டார்.

இந்த தீச்சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் பரவிய வேளையில், பினாங்கு விமான நிலையத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவி பரபரப்பை உண்டாக்கின.

ஆயினும் இத்தீச்சம்பவத்தில பினாங்கு விமான நிலையம் பாதிக்கப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

மாணவி வசந்தபிரியாவின் மரண விசாரணை வழக்கு மே 24,25க்கு மாற்றம்



ஜோர்ஜ்டவுன் -
மாணவி வசந்தபிரியாவின் மரண விசாரணை வரும் மே 24,25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஆசிரியரின் கைப்பேசி களவு போனது தொடர்பில் விசாரிக்கப்பட்ட மாணவி வசந்தபிரியா, வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்காமல் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மரணமடைந்தார்.

மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணை ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக தாம் நீதிமன்றத்திடன் விண்ணப்பம் செய்திருப்பதாக கைப்பேசியை தொலைத்த ஆசிரியையின் சார்பில் கண்காணிக்க அமர்த்தப்பட்டுள்ள  வழக்கறிஞர் வி.பார்த்திபன் கூறினார்.

வசந்தபிரியாவின் மரண விவகாரம் தொடர்பில் எத்தனை பேர் சாட்சிகளாக நிறுத்தப்படுவர் என்பது தெரியாத நிலையில்  எத்தனை நாட்களுக்கு இவ்வழக்கு நடத்தப்படும் என்பது குறித்து கருத்துரைத்த முடியாது என இந்த
மரண விசாரணையை நடத்தும் நீதிபதி நோர்சால்ஹா ஹம்சா குறிப்பிட்டார்.

நிபோங் திபால் இடைநிலைபள்ளியில் இரண்டாம் படிவம் பயின்று வந்த மாணவி வசந்தபிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனமுடைந்த தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது.

Friday 30 March 2018

விருது பெற்றாலும் மகளின் ஏக்கம் வேதனை தருகிறது - திருமதி இந்திரா காந்தி


புனிதா சுகுமாறன் 

 ஈப்போ:

அமெரிக்காவின் துணிவுமிக்க பெண் விருதை பெற்றது பெருமையாக இருந்தாலும் ஒரு தாயாக பெற்ற மகளை இன்னமும் பிரிந்திருப்பது வேதனையாகவே உள்ளது என திருமதி இந்திரா காந்தி தனது மனவேதனையை வெளிபடுத்தினார்.

தனது முன்னாள் கணவரால் மூன்று பிள்ளைகளும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டார் திருமதி இந்திரா காந்தி.

தனது முன்னாள் கணவரின் செயலை எதிர்த்து துணிச்சலாக சட்டப் போராட்டம் நடத்தி அதில்  வெற்றி கண்டதை அடுத்து அமெரிக்காவின் 'துணிச்சல்மிகு பெண்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார் அவர்.

இவ்விருதை நேற்று பெற்றுக் கொண்ட அவர், இவ்விருது எனக்கு பெருமையாக உள்ளது; ஆனாலும் என் மகளை பார்க்காமல் மனம் வேதனை அடைகிறது.

பெற்ற தாய்க்கு பிள்ளைகள் தானே சொர்க்கம் என்ற நிலையில் பிள்ளையை பிரிந்துள்ள துயரம் வேதனை அடையச் செய்கிறது.

ஆயினும் இவ்விருதை எனக்கு அளித்த மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் கமலா ஷரீனுக்கு நன்றி கூறிக் கொள்ளும் வேளையில் இவ்விருதை என்னை போல் தனித்து வாழும் அனைத்து பெற்றோருக்கும் சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.

மேலும், இந்த வழக்கில் தனது உறுதுணையாக இருந்து சட்டப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வழக்கறிஞர் எம்.குலசேகரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


கடந்த 2009ஆம் ஆம் ஆண்டு தனது இஸ்லாத்திற்கு மதம் மாறிய முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் என்ற கே, பத்மநாபன் மூன்று பிள்ளைகளையும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தார்.

அதோடு, 9 மாத கைக்குழந்தையாக இருந்த பிரசன்னா டிக்‌ஷாவை தன்னோடு கொண்டு சென்ற முகமட் ரிடுவான் இப்போது தலைமறைவாக உள்ளார்.


வேன் கவிழ்ந்தது; 2 அந்நிய நாட்டவர்கள் பலி


குவாந்தான் -

தூக்க கலக்கத்தில் வாகனத்தை செலுத்தியதால் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு அந்நிய நாட்டவர்கள் மரணமடைந்ததோடு அறுவர் படுகாயம் அடைந்தனர்.

வங்காளதேச நாட்டவர்களை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் பிறபகல் 4.45 மணியளவில் குவாந்தான், கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1, 1214ஆவது கிலோ மீட்டரில் தடம் புரண்டது.
இதில் இரு வங்காளதேசிகள் மரணமடைந்தனர். இதில் மரணமடைந்த ஒருவர் குத்தகை தொழிலாளர் ஹுசேய்ன் ஃபோர்ஹாட் (36) என அடையாளம் காணப்பட்ட வேளையில் மரணமடைந்த மற்றொரு நபர் அடையாளம் காணப்படவில்லை என தெமர்லோ போலீஸ் தலைவர் ஏசிபி ஸுன்டின் மாமூட் கூறினார்.
இதில் நிஸான் வேனை செலுத்திய பொறியியல் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான முகமட் கமருல் பஹரின் (52) காயமடைந்தார்.
"வேனை செலுத்திய ஆடவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் சாலை தடுப்பை மோதி கால்வாயில் தடம் புரண்டதாக நம்பப்படுகிறது என அவர் சொன்னார்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களும்  மரணமடைந்தவர்களின் உடலும்  சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொகுதி எல்லை மறுசீரமைப்பு; அரசாங்கத்தின் தலையீடு கிடையாது- பிரதமர் நஜிப்


கோலாலம்பூர்-

தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

நாட்டுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதாக கூறிய அவர், அவற்றின் செயல் நடவடிக்கைகளில் தலையிடுவது கிடையாது.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையை சில கட்சிகள் ஆதரிக்கவில்லை என்ற போதிலும் அரசாங்கம் அதன் நடவடிக்கைகளில் தலையிடுவதும் அதிகாரம் செலுத்துவதும் இல்லை.

தொகுதி எல்லை மறுசீரமைப்பு தொடர்பிலான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 129 உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் மீதான விவாதத்திற்கு பின்னர் மக்களவையில் பேசியபோது பிரதமர் நஜிப் இவ்வாறு கூறினார்.

14ஆவது பொதுத் தேர்தலில் அமல்படுத்தப்படவுள்ள இந்த தொகுதி எல்லை மறுசீரமைப்பில் கூடுதலாக எவ்வித தொகுதிகளும் உருவாக்கப்படவில்லை.

மாறாக, 12 நாடாளுமன்றத் தொகுதிகள், 28 சட்டமன்றத் தொகுதிகள் பெயர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுக்கு பின்னரே மக்களின் விருப்பத்தை அறிய முடியும்- மணிமாறன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்- 
மக்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பது தேர்தல் முடிவு தெரிந்த பின்னரே அறிய முடியும்.  தேர்தலில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படாத வரை மக்கள் யாரை விரும்புகின்றனர் என்பதை யாராலும் கணிக்க முடியாது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வேட்பாளர் குறித்த ஆருடங்கள் இன்னும் வலுபெற்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் 'மக்கள் விரும்புபவரே வேட்பாளராக களமிறக்கப்படுவர், கட்சி அடிப்படையில் அல்ல' என பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் கூறியுள்ளதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி  குறித்து கருத்துரைத்த மணிமாறன், மக்கள் விரும்பும் வேட்பாளர் யார்? என்பதை யாராலும் கணிக்க முடியாது.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரே களமிறக்கப்படும் வேட்பாளர் மக்களின் விருப்பத்திற்குரியவரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அதை விடுத்து வீணான கருத்துகள் பகிரப்படுவது தேமுவின் பலவீனத்தை காட்டும் என சுட்டிக் காட்டிய அவர், மக்கள் விரும்புபவர்களுக்கே முன்னுரிமை என்றால் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின் போது 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளை பக்காத்தான் கூட்டணி கொண்டிருந்தது. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில்  அதிகமான  'நாற்காலி'களை கொண்டிருந்ததால் மத்திய அரசாங்கம்  அமைக்கும் ஆட்சி அதிகாரத்தை  தேசிய முன்னணி பெற்றது.

மேலும், கட்சியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமானால் நாட்டின் அரசியல் கட்சிகளே தேவையில்லாத சூழல் ஏற்பட்டு விடலாம்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதால் வீணான, தேவையற்ற அறிக்கைகள் மக்களை குழப்பி, கட்சி உறுப்பினர்களையும் பலவீனமாக்கி தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என மணிமாறன் மேலும் கேட்டுக் கொண்டார்.

சித்தியவான் தொகுதி பெயர் மாற்றம்; ஜசெக வெற்றியை சீர்குலைக்கும் முயற்சியா?


ஈப்போ-

சித்தியவான் சட்டமன்றத் தொகுதியின் பெயரை 'அஸ்தாகா' என மாற்றம் செய்துள்ளது நியாயமானது அல்ல என பேராக் மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

சித்தியவான் சட்டமன்றத் தொகுதி ஜசெகவின் கோட்டையாகும், இங்கு நடைபெற்ற தேர்தல்களில் ஜசெக ஒருபோதும் தோற்றது இல்லை.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பில் சித்தியவான் சட்டமன்றத் தொகுதியின் பெயர் 'அஸ்தாகா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சித்தியவான் சட்டமன்றத் தொகுதியின் பெயரை 'அஸ்தாகா' என மாற்றுவதால் அதை இழந்து விடக்கூடும் என நினைக்கின்றனர். ஆனால்  ஒரு திடலுக்கும் அரேனாவுக்கும் வைக்கப்பட்ட வேண்டிய பெயர் சட்டமன்றத் தொகுதிக்கு வைக்கப்படுவதில் என்ன நியாயம் உள்ளது? என அவர் கேள்வி எழுப்பினார்.

ஜசெக-வை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு திடலின் பெயரை சட்டமன்றத் தொகுதிக்கு வைத்து இங்குள்ள மக்களை கேவலப்படுத்தியுள்ளார். இது சித்தியவான் அக்களை அவமதிக்கும் செயலாகும்.

தேசிய முன்னணியின் வெற்றிக்காக தொகுதி எல்லை சீரமைப்பின் வழி  மிக எளிதாக சட்டமன்றத் தொகுதியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இங்கு களமிறங்கும் தேமு வேட்பாளர் தோல்வி காண்பதை விட, 'டெபோசிட்' இழக்கச் செய்திட வேண்டும் என இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஙா கோர் மிங் கூறினார்.


Thursday 29 March 2018

தொகுதி எல்லை சீரமைப்பு; 129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது



கோலாலம்பூர்-
தொகுதி எல்லை மறுசீரமைப்பு தொடர்பான  அறிக்கையை இன்று மக்களவையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த நிலையில் 129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு  அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தொகுதி எல்லை மறுசீரமைப்பு தீபகற்ப மலேசியாவில் 98 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 165 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

இந்த அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் தேசிய முன்னணி சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. விவாதம் முடிந்த நிலையில் அறிக்கை ஏற்றுக் கொள்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும்  80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இந்த தொகுதி எல்லை சீரமைப்பில் சில தொகுதிகளின் பெயர்கள் மாற்றம் கண்டுள்ளதோடு சில தொகுதிகள் வாக்காளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும் உள்ளது.

தொகுதி எல்லை சீரமைப்பு இன்று முடிவடைந்துள்ள நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நாடாளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரன் மலையில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டால் தேமுவின் வெற்றி கேள்விக்குறியாகலாம்- டான்ஶ்ரீ கேவியஸ்



நேர்காணல்: ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

கேமரன் மலை-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி உறுப்பினராக டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் இன்னமும் நீடித்திருந்தால்  நிச்சயம் அங்கு நான் களமிறங்கியிருக்க மாட்டேன்.

ஆனால், அவரை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்த பின்னரே அங்கு சேவையாற்ற களமிறங்கினேன். தேசிய முன்னணி பிரதிநிதித்து டத்தோஶ்ரீ பழனிவேல் அங்கு இருந்திருந்தால் நான் அவருக்கு தொல்லைகள் கொடுத்திருக்க மாட்டேன்.

தான் சார்ந்துள்ள ஒரு கூட்டணியை பிரதிநித்து ஒருவர் இருக்கும் சூழலில் அங்கு களமிறங்கி சேவையாற்றுவது ஆரோக்கியமான நடவடிக்கையாக கருத முடியாது. அதனால்தான் நானும் அமைதியாக இருந்தேன்.

ஆனால் டத்தோஶ்ரீ பழனிவேலை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களைக்கு மஇகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்த பின்னரே அத்தொகுதியில் தேமுவின் வெற்றியை உறுதி செய்ய களமிறங்கினேன் என்கிறார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.

அண்மையில் 'மை பாரதம்' மின்னியல் ஊடகம்  அவருடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

கே: தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலை சந்திப்பதுண்டா?

: தொடக்கத்தில் இங்கு சேவையாற்ற வந்தபோது டத்தோஶ்ரீ பழனிவேலை சந்தித்துள்ளேன். சில நிகழ்வுகளில் அவருடன் பங்கேற்றுள்ளேன். ஆனால் இப்போது அவரை சந்திப்பது குறைவாக உள்ளது.

கே: டத்தோஶ்ரீ பழனிவேல் இங்கு போட்டியிடுவதாக இருந்தால் நீங்கள் போட்டியிட எத்தனித்திருப்பீர்களா?

: நிச்சயமாக இல்லை. மஇகாவின் தலைவராக டத்தோஶ்ரீ பழனிவேல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தால் நிச்சயம் நான் இங்கு களமிறங்கியிருக்க மாட்டேன்.

ஆனால், மஇகாவின் உட்பூசலில்  தேசியத் தலைவராக இருந்த அவரை கட்சியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களவைக்கு தெரியப்படுத்திய பின்னரே கேமரன் மலையில் களமிறங்கினேன்.

கே: கேமரன் மலைன் தொகுதியில் நீங்கள் (டான்ஶ்ரீ) போட்டியிடாமல் மஇகா வேட்பாளர் போட்டியிட்டால் மைபிபிபி ஆதரவளிப்பீர்களா?

: எவ்வாறு ஆதரவு கொடுக்க முடியும். கட்சி உட்பூசலை அடுத்து இங்கு களமிறங்கி மக்களுக்கு சேவை செய்ய மஇகா முனையவில்லை. கடந்த நான்காண்டுகளாக நான் இங்கு களமிறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். 'உண்மையான சேவையாளன்' யார் என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சேவை செய்து இங்கு தேசிய முன்னணிக்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளேன். கஷ்டப்பட்டு சேவை செய்துள்ள தனக்கு 'சீட்' கிடைக்காமல் பிறருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் கட்சி உறுப்பினர்கள் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? தேமு எனும் நிலையில் நான் ஆதரித்தாலும் கட்சி உறுப்பினர்கள், வாக்காளர்களின் ஆதரவை பெற நிச்சயம் பெற முடியாது.

கே: நீங்கள் போட்டியிட்டால் கேமரன் மலை  மஇகாவினர் ஆதரிப்பார்கள் என நினைக்கிறீர்களா?

: நிச்சயம் ஆதரவு கிடைக்கும். கேமரன் மலை எனக்கு புதிதானது அல்ல. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெந்தா தோட்டத்தில்தான். இங்கே எனக்கு அதிகமாக உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எனது சொந்த மண்ணில் நிச்சயம் எனக்கான ஆதரவு கிடைக்கும்.

மஇகாவில் உள்ள பெரும்பாலானவர்கள் எனது உறவினர்கள், நண்பர்களாக
இருக்கின்றனர். அதன் அடிப்படையில் எனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.

நான் இங்கு போட்டியிட்டால் நிச்சயம் தேசிய முன்னணி வெற்றி பெறும். என்னை தவிர யார் போட்டியிட்டாலும் அவர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியே.

இதை நான் எச்சரிக்கையாக சொல்லவில்லை. இதுதான் உண்மை. ஆதலால் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை வேட்பாளர் விவகாரத்தில் தேசிய முன்னணி சிறந்த முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.

- நன்றி -

முந்தைய பதிவுகளுக்கு:

-  கேமரன் மலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் தேடிய 'அருமருந்து'தான் நான் - டான்ஶ்ரீ கேவியஸ்- பகுதி- 2

-  எனக்கான தொகுதியில் பிரதமரின் 'ஆசி'யுடனே 'வேட்பாளராக' என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன் - டான்ஶ்ரீ கேவியஸ் - பகுதி -1

உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதில் மலேசிய அபிராம் இயக்கம் இலக்கு கொண்டுள்ளது - தலைவர் சண்முகம்


ரா.தங்கமணி

ஈப்போ-
நாடு தழுவிய நிலையில் 5,000க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு ஒரு வலுவான இயக்கமாக உருவெடுக்க மலேசிய அபிராம் இயக்கம் இலக்கு கொண்டுள்ளது என அதன் தலைவர் சண்முகம் கிருஷ்ணன் தெரிவித்தார்.
சமூலநல நடவடிக்கைகள் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் மக்களுக்கான திட்டங்களை மலேசிய அபிராம் இயக்கம் முன்னெடுத்து வருகிறது.

இந்திய சமுதாயம் பின்னடைவை சந்தித்து விடக்கூடாது எனும் இலக்கில் பயணிக்கும் இவ்வியக்கம், மக்களுக்கு ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அவ்வகையில் வரும் ஏப்ரல் மாதம் மிகப் பெரிய அளவில் ஶ்ரீ சஹஸ்ரநாம லலிதாம்பிகை பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி, பொருளாதாரம், சமூகநலன், நாட்டுப் பற்று, சமயம் என அனைத்து ரீதியிலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆக்ககரமான  திட்டங்கள் முன்னெடுக்கபடுகின்றன என்று அண்மையில் இவ்வியக்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு
சொன்னார்.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் இயக்கத்தின் செயல் நடவடிக்கைகள், திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு இயக்கத்தை இன்னும் வலுவடையச் செய்வதற்கு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட செய்வதும் நாடு தழுவிய நிலையில் பல தொகுதிகளை அமைப்பதும் முன்னெடுக்கப்படுவதும்  திட்டமிடப்பட்டுள்ளது என சண்முகம் கூறினார்.

இந்த கூட்டத்தில் இயக்கத்தின் ஆலோசகர் அமுசு. ஏகாம்பரம், பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவில் திருமதி தங்கராணி, இயக்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கரன் துரைசாமி, செயலாளர் பி.கணேசன் உட்பட செயலவையினரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தொகுதி எல்லை சீரமைப்பு மசோதாவை எதிர்த்து பெர்சே அமைப்பின் பேரணி


கோலாலம்பூர்-
மலேசிய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள தொகுதி எல்லை சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை எதிர்த்து பெர்சே அமைப்பு இன்று மக்களவை சபாநாயகரிடம் மனுவை சமர்ப்பித்தனர்.

இன்று காலை நாடாளுமன்ற  வளாகத்தில் திரண்ட பேர்சே ஆதரவாளர்களில் 10 பேர் மட்டும் உள்ளே நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சஹாருடின் அப்துல்லா கூறினார்.

துகு நெகாராவில் திரண்ட 200க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி வந்தனர். இந்த பேரணியில் எவ்வித விரும்பதாக செயல்களும் இடம்பெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.

இதில்  பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது,  தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா, அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு,  அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமாருடின், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday 28 March 2018

கொஸ்மோபொயிண்ட் கல்லூரியின் உபகாரச் சம்பளத்துடனான உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
எஸ்பிஎம் தேர்வை முடித்த மாணவர்கள் தங்களது உயர்கல்வியை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா 'உயர்கல்வி வழிகாட்டி' நிகழ்வை நடத்தியது.

ஈப்போவில் உள்ள கொஸ்மோபொயிண்ட் கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர்கல்வி மீதான வழிகாட்டல் வழங்கப்பட்டது.

அதோடு, கொஸ்மோபொயிண்ட் கல்லூரி வழங்கும் உபகாரச் சம்பளத்துடனான கல்வி வாய்ப்பு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

திரளான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன், முன்னாள் தொகுதித் தலைவர் லோகநாதன், எஸ்ஐடிஎஃப் அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

திருமதி இந்திரா காந்திக்கு அமெரிக்காவின் 'துணிச்சல்மிகு பெண்' விருது


 கோலாலம்பூர்-
ஒருதலைபட்சமாக தனது மூன்று பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றி கண்ட திருமதி இந்திரா காந்தியின் பெயர் அமெரிக்காவின் 'துணிச்சல்மிக்க பெண்' விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தமக்கு தெரியாமல் தனது முன்னாள் கணவர் கே.பத்மநாபன் மூன்று பிள்ளைகளையும் மதமாற்றம் செய்ததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியவர் திருமதி இந்திரா காந்தி.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போராட்டத்தை மேற்கொண்ட இந்திரா காந்தியின் செயலை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இவ்வாண்டின் உலக மகளிர் தினம், மார்ச் மாதம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டு வரும் மகளிர் வரலாற்று மாதத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் கமலா ஷிரின்  நாளை நடைபெறும் விருந்துபசரிப்பு நிகழ்வில் இந்த விருதை இந்திரா காந்திக்கு வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

ஒருதலைபட்சமாக  செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் மதமாற்றமும் செல்லத்தக்கது அல்ல என கடந்த ஜனவரி 29ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்காவின் அனைத்துலக துணிச்சல்மிக்க பெண்மணி விருது சிறந்த தலைமைத்துவ ஆற்றல், துணிச்சல், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டோலேசா ரைஸால்  அறிமுகம் செய்யப்பட்ட இவ்விருதை மலேசியாவின் திருநங்கைகள் போராட்டவாதியான நிஷா ஆயோப் 2016இல் பெற்றார்.

2 நாடாளுமன்றம், 3 சட்டமன்றத் தொகுதிகள்; மைபிபிபி இலக்கு


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 2 நாடாளுமன்றத் தொகுதிகள், 3 சட்டமன்றத் தொகுதிகளில் மைபிபிபி கட்சி இலக்கு கொண்டுள்ளது என அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ லோக பால மோகன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக திகழும் மைபிபிபி, இலக்கு கொண்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கேமரன் மலை தொகுதியும் ஒன்றாகும்.

இங்கு கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் களமிறங்கி சேவையாற்றி வரும்  நிலையில் எஞ்சிய ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதிகளை இலக்கு கொண்டுள்ளோம் என கூட்டரசு பிரதேச துணை அமைச்சருமான டத்தோ லோக பால மோகன் குறிப்பிட்டார்.



Tuesday 27 March 2018

மக்களின் நிலையை அறிந்த வேட்பாளரே வெற்றி பெற முடியும்- முகமட் நோர் ஃபட்சில் - பகுதி -2


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கின்ற நிலையில் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான ஆதரவு அலை திரும்பி கொண்டிருக்கின்றது.

அந்த ஆதரவு அலையை தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்  பேராக் மாநில மைபிபிபி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் அறவாரியத்தின் செயல்முறை அதிகாரியுமான முகமட் நோர் ஃபட்சில் பின் சாஹுல் ஹமிட்.

அண்மையில் அவருடன் 'மை பாரதம்' மேற்கொண்ட நேர்காணலின் தொடர்ச்சி  வாசகர்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.


கே: யயாசான் சுங்கை சிப்புட் மூலம் இந்தியர்கள் அடைந்துள்ள பலன்கள்?

: யயாசான் சுங்கை சிப்புட் மூலமாக இந்திய சமுதாயத்திற்கு பல உதவிகள் வழங்கப்படுகின்றன. பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி பலவகைகளில் உதவிகள் செய்யப்படுகின்றன.

ஆனால் அந்த உதவிகளை பெறுவதில்தான் நாம் தவறு இழைக்கின்றோம். உதவிகள் விண்ணப்பங்கள் முறையாக இல்லாததால் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை முறையாக செய்யத் தெரியாதவர்களுக்காக அலுவகலத்திலேயே உதவிகள் வழங்குகிறோம். எங்களை முறையாக நாடி விண்ணப்பங்களைச் செய்தாலே உதவிகள் பெற முடியும் என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்.

கே: அரசியலை பொறுத்தவரை சுங்கை சிப்புட் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது?

: சுங்கை சிப்புட்டை பொறுத்தவரை அரசியல் நிலவரம் பரபரப்பாகத்தான் உள்ளது. வேட்பாளர் விவகாரம், மக்களுக்கான சேவை, அரசியல் சூழல் உட்பட பல விவகாரங்களால் இங்கு அரசியல் நிலவரம் சூடாக உள்ளது.

கே: இங்கு களமிறங்கும் வேட்பாளர் விவகாரம் குறித்து...?

: சுங்கை சிப்புட்டில் களமிறங்கும் வேட்பாளர் முதலில் இங்குள்ள மக்களின் நிலைமைகளை புரிந்தவராக இருப்பது மிக அவசியம். பொதுவாகவே இங்கு களமிறங்கும் வேட்பாளர்கள் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

தலைநகரில் வாழும் மக்களின் சூழல் வேறு; இங்குள்ள மக்களின் வாழ்வாதார சூழல் வேறு. இங்குள்ள மக்கள் தோட்டப்புற சூழல் சார்ந்திருப்பவர்கள், ஆனால் தகைநகரில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதார சூழலும் மாறுபட்டிருக்கும்.

ஆதலால் இங்கு களமிறங்கும் வேட்பாளர் முதலில் மக்களின் சூழலை உணர்ந்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தான் வாழ்ந்த சூழலை இங்குள்ள மக்களிடம் திணிக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைதான் இங்குள்ள மக்களிடம் வெறுப்புணர்வை உண்டாக்கும். அது வேட்பாளருக்கு உகந்தது அல்ல.

கே: சுங்கை சிப்புட்டில் தேசிய முன்னணிக்கான மக்களின் ஆதரவு எப்படி உள்ளது?

: கடந்த காலங்களை விட மக்களிடையே தற்போது மாற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் எதிர்க்கட்சியை ஆதரித்தவர்கள் எல்லாம் தற்போது தேசிய முன்னணியை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மக்களிடையேயான இந்த மாற்றத்தை தேசிய முன்னணி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலவீனத்தை உண்டாக்கிக் கொள்வதை விட பலம் பொருந்தியதாக தேசிய முன்னணி தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திடும்.

- நன்றி-

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் 'மீஃபா'வுக்கு தலைமை ஏற்பேன் - சிவகுமார் அதிரடி



ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்திற்கு (மீஃபா) நிச்சயம் தலைமை தாங்குவேன் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

மக்களவை கூட்டத் தொடரின்போது மீஃபா, பக்தி சக்தி, ஶ்ரீ முருகன் நிலையம் போன்ற அரசு சார்பற்ற பொது இயக்கங்களுக்கு 'செடிக்' மூலம் வழங்கப்பட்ட மானியம் எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினேன்.

ஆனால், செடிக் அமைப்பிற்கும் சம்பந்தப்பட்ட பொது  இயக்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதால் அதனை பொதுவில் சொல்ல முடியாது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.

ஆனால், மீஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன், அண்மையில் செடிக் மூலம் மீஃபாவுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்த மானிய விவரங்களைதானே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால் ஒப்பந்த உடன்படிக்கையை காரணம் காட்டி பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி பதிலளிக்க மறுத்த வேளையில் டத்தோ மோகன் எவ்வாறு அவ்விவரங்களை பொதுவின் அறிவித்தார்?

டத்தோ மோகனால் மானிய விவரங்களை பொதுவில் அறிவிக்கும்போது டத்தோஶ்ரீ தேவமணி நாடாளுமன்றத்தில் அறிவிக்க மறுத்தது ஏன்?
மேலும், மீஃபாவுக்கு தலைமை ஏற்க விரும்பினால் தனக்கு விட்டுக் கொடுக்க விருப்பதாக மோகன் கூறியுள்ளார். மீஃபாவின் தலைவர் பதவியை எனக்கு விட்டு கொடுக்க வேண்டியதில்லை.

ஏனென்றால் வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் நிச்சயம் மீஃபாவுக்கு தலைமை தாங்குவேன் என இங்கு தாமான் செமிரியில் நடைபெற்ற 'புதிய அரசாங்கம்; புதிய நம்பிக்கை ' எனும் தலைப்பில் கலந்து கொண்டபோது சிவகுமார் இவ்வாறு கூறினார்.

தமிழ் இடைநிலைப்பள்ளி; தேமு நிலம் கொடுக்கவில்லையென்றால் நம்பிக்கைக் கூட்டணி கொடுக்கும்- கணபதிராவ்


ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்பதற்கான நிலத்தை பேராக் மாநிலத்தை தற்போது ஆட்சி புரியும் தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கீடு செய்யாவிட்டால் அம்மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி அமைந்தால் நிச்சயம் ஒதுக்கீடு செய்யப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணி அறிமுகம் செய்துள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி நிச்சயம் நிர்மாணிக்கப்படும்.

தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்பதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி புரியும் பினாங்கு மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது சிலாங்கூர் மாநில அரசு 8 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது அதிகமான இந்தியர்கள்  வாழ்கின்ற மாநிலமான பேராக் மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்பதற்கு தற்போதைய தேசிய முன்னணி அரசு முனைய வேண்டும்.

இல்லையேல், வரும் தேர்தலில் பேராக் மாநில ஆட்சியை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றியதும் நிச்சயம் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான நிலம் ஒதுக்கப்படும் என இங்கு நடைபெற்ற 'புதிய அரசாங்கம், புதிய நம்பிக்கை' எனும் தலைப்பிலான சொற்பொழிவில் உரையாற்றுகையில் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியை ஆதரித்தது போதும்; இனியும் தண்டிக்கப்பட வேண்டாம்- மஇகா இளைஞர் பிரிவு சாடல்


ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி

சுங்கை சிப்புட்-
எதிர்க்கட்சியின் ஆட்சியில் கடந்த இரு தவணைகளாக சுங்கை சிப்புட் மக்கள்  தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனையிலிருந்து மீள வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு சுங்கை சிப்புட் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலு தெரிவித்தார்.

மக்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதே தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதே ஆகும். ஆனால் கடந்த இரு தவணைகளாக  தவறான ஒரு மக்கள் பிரதிநிதியை இங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன் விளைவாகவே இங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டு அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மானியங்கள் இல்லாமல் மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரே காரணம் தங்களின் பிரதிநிதியாக எதிர்க்கட்சியினரை தேர்ந்தெடுத்ததன் விளைவே ஆகும் என நேற்று இங்குள்ள அரேனாவில் நடைபெற்ற 'பிஎன் 4 யூ' நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு  தீர்வு காண்பது மஇகாவும் தேசிய முன்னணியும் தான் ஆகும்.

ஆகவே, வரும் பொதுத் தேர்தலில் இங்கு களமிறங்கும் தேசிய முன்னணி வேட்பாளரை மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும். அவரின் வெற்றிக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தினாளன் வலியுறுத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான மு.நேருஜி உரையாற்றுகையில், எதிர்க்கட்சியின் ஆட்சியில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே அடமானம் வைத்து விட்டனர்.

மானியம் வழங்கப்படாமல் எவ்வித சமூகநல உதவிகளும் இல்லாமல் மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர வேண்டும். இந்த தண்டனை எல்லாம் போதும். இனிமேலாவது அந்த தண்டனையிலிருந்து விடுபட மக்கள் முனைய வேண்டும்.

ஆதலால் வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

புகழ் பெற்ற உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுடன்  நடைபெற்ற இந்நிகழ்வில் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, மஇகா இளைஞர் பிரிவினர், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஜசெகவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு இடைநீக்கம்


கோலாலம்பூர்-
மக்களவையை அவமதிப்பு செய்ததற்காக ஜசெகவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ பண்டிகார் அமின் மூலியா மீது குற்றச்சாட்டு சுமத்தியதோடு அவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா மோர் மிங், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹா ஆகியோர் கோரியிருந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோருமாறு கடந்த மார்ச் 14ஆம் தேதி கடிதம் வாயிலாக டான்ஶ்ரீ பண்டிகார் அமின் மூலியா கோரியிருந்த போதிலும் அவர்கள் மன்னிப்பு கேட்க தவறியதால் இன்று 26ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை துணை சபாநாயகர்
டத்தோ ரோனால்ட் கியாண்டி அறிவித்தார்.

ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க கூட்டணி சேர வேண்டாம் எனவும் மக்களவை சபாநாயகர் பதவியிலிருந்து பண்டிகார் அமின் விலக வேண்டும் எனவும் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரியிருந்தனர்.

Sunday 25 March 2018

களைக்கட்டியது இயாசாவின் மாணவர் விழா 2018

கோ.பத்மஜோதி

கிள்ளான்-
மலேசிய இந்திய ஆத்ம சக்தி இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக மாணவர் விழாவை மிகச் சிறப்பாகவும் துடிப்புடனும் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இவ்வாண்டிற்கான மாணவர் விழா கிள்ளானில் அமைந்துள்ள தமது தலைமையகத்தில் மிகச் சிறப்பாக தொடக்கம் கண்டது.

மாணவர்கள் கல்வி கேள்விகளிலும், புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அதோடு, இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதுபோல சமுதாயத்தின் நற்பெயரை பள்ளிகளில் நிலைநாட்ட வேண்டும் என்று இந்த மாணவர் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

மாணவர்கள் கல்வி கேள்விகளில் மட்டுமில்லாமல் புறப்பாட நடவடிக்கைகள், பாரம்பரிய விளையாட்டுகளிலும் பீடுநடைபோட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இயாசா இயக்கம் மாணவர்களுக்காகவே ஒவ்வோர் ஆண்டும் பள்ளி விடுமுறை காலங்களில் இந்த மாணவர் விழாவை மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவின் வழி, மாணவர்களின் திறமைகளை வெளிகொணரவும் இது தளமாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரை பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி மொத்தம் 18 போட்டிகளை இயாசா நடத்தி வருவதாக இவ்வியக்கத்தின் தலைவர் எம்.வசந்தகுமார் தெரிவித்தார். 

தற்போது, கிள்ளானில் மேற்கொண்டு வரும் இந்த மாணவர் விழாவை பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் பாரு என இதர மாநிலங்களில் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் நன்மை பயக்கும் வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற இயாசாவின் நோக்கம் கூடிய விரைவில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக, ஜோகூர் மாநிலத்தில் உள்ள 18 இடைநிலைப்பள்ளியில் மாணவர் விழாவை தொடக்கி விட்டதாகவும் கூறினர்.

இந்த மாணவர் விழாவை மாணவர்களே எடுத்து நடத்துவதுதான் இதன் சிறப்பு அம்சமாக திகழ்கிறது. ASIA METROPOLITAN UNIVERSITY நிர்வாக குழுவினர் இயாசா இயக்கத்திற்கு வெ.25,000 நிதியுதவி வழங்கியது.