Friday, 9 February 2018
வேலை வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் மலேசியத் தொழிலாளர்கள்? - சிவநேசன் எச்சரிக்கை
ரா.தங்கமணி
ஈப்போ-
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால் மலேசியர்கள் பலர் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது என தொழிலியல் வழக்கறிஞர் அ.சிவநேசன் எச்சரித்துள்ளார்.
நாட்டில் தற்போது 14 மில்லியன் மலேசியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். மேலும் 10 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் நாட்டில் வேலை செய்து வருகின்றன்றனர்.
30 மில்லியன் மலேசியர்களின் மக்கள் தொகையில் தற்போது 14 மில்லியன் பேர் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 12.6 மில்லியன் பேர் தனியார் துறை ஊழியர்களாகவுக் 1.6 மில்லியன் பேர் அரசாங்கப் பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இந்த தொழிலாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால் 1955 தொழில் சட்டத்தின்படி ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றால் முதலில் மனிதவள அமைச்சுக்கு தெரிவிக்க வேண்டும்.
அந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்பில் நிறுவன நிர்வாகம், தொழிலாளர் பிரதிநிதிகள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பு நடத்தப்பட வேண்டும். அந்த சந்திப்பில் ஆட்குறைப்பு செய்யப்படும் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்பதே சட்டம் வகுத்துள்ள நடைமுறையாகும்.
ஆனால் இதனை பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை. தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு தயக்கம் காட்டுவதே இதற்கான காரணம் ஆகும்.
தற்போது நாட்டை சூழ்ந்துள்ள பொருளாதார வீழ்ச்சியில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கம்தான். அதற்கு உதாரணம் ஒரே மலேசியா மக்கள் கடையாகும். அரசாங்கம் அறிமுகப்படுத்திய இந்த மக்கள் கடைக்கு 100 மில்லியனை ஒதுக்கீடு செய்தது அரசாங்கம்.
மைடின் நிறுவனத்தின் கீழ் இயங்கிய இந்த மக்கள் கடை பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடுத்தர, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமான மக்கள் கடைகள் மூடப்பட்டதிலிருந்தே பொருட்களை வாங்கும் சக்தியை மக்கள் இழந்துள்ளனர் என புலப்படுத்துகிறது. பொருட்களை வாங்க முடியாத அளவுக்கு மக்களிடையே பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. பொருட்களை வாங்கும் சக்தி இழந்த மக்களின் நலன் காக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
ஆதலால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தங்களுக்கு சிறந்த அரசாங்கம் எது என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 14 மில்லியன் தொழிலாளர் வர்க்கம் நினைத்தால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
பொருளாதார நெருக்கடியில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டை மீட்டெடுக்க அரசியல், ஆட்சி மாற்றம் அவசியமாகிறது. ஆதலால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது என சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் வலியுறுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment