Tuesday, 6 February 2018

அமானா சஹாம்; செயல்படாத திட்டத்தை எதற்காக இந்திய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும்? - டாக்டர் ஜெயகுமார்


பெட்டாலிங் ஜெயா-
அமானா சஹாம் பங்குடைமை திட்டம் மலாய்க்காரர்களையே மேம்படுத்தாதபோது செயல்படாத ஒரு திட்டத்தை இந்திய சமுதாயத்திற்காக எதற்கு அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.

அமானா சஹாம் திட்டம் மலாய்காரர்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. ஆனால் இன்னமும் அச்சமுதாயத்தில் ஏழைகள் உள்ளனர். இத்தகைய சூழலில் இந்திய சமுதாயத்திற்கு இத்திட்டம் எவ்வாறு நன்மையளிக்கும்?

தற்போது அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அமானா சஹாம் ஒரே மலேசியா திட்டத்தில் நடுத்தர, உயர் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற நிலையில் ஏழை இந்தியர்களுக்கு இது எவ்வாறு நன்மையை கொண்டு வரும்?, இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஏழை இந்தியர்களிடம் பணம் இல்லை.

இந்திய சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை அரசாங்கம் உண்மையிலேயே கொண்டிருந்தால், வீடமைப்புத் திட்டங்களை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கலாம்.

அமானா சஹாம் பங்குகளை வழங்கும் திட்டத்தை விட மக்களின் வீடமைப்புப் பிரச்சினைகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சுங்கை சிப்புட் வட்டாரத்திலேயே 60 முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அரசாங்க நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிப்படை வசதியான வீடுகளைப் பெற்றுக் கொண்டாலே போதும். அமானா சஹாம் பங்குடைமைக்கு பதிலாக அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டால் சொந்த வீடுகளை கட்டிக் கொள்வர். அதன் மூலம் அவர்களின் பொருளாதார பலத்தை வலுபடுத்திக் கொள்வர் பிஎஸ்எம் கட்சியின்  சட்ட விவகாரப் பிரிவுத் தலைவருமான டாக்டர் ஜெயகுமார் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment