Saturday, 3 February 2018
"என் கதறலை ஒரு கிராமமே கேட்டதாக உணர்கிறேன்"- தந்தை வேதனை
நிபோங் தெபால்-
"என்னுடைய கதறலை ஒரு கிராமமே கேட்டதாக உணர்கிறேன்' என்று மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர்.முனியாண்டி (54) தெரிவித்தார்.
என்னுடைய மகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்தபோது அசைவற்ற நிலையில் அவளை கண்டபோது கண்ணீர் விட்டு கதறியது ஒரு கிராமமே கேட்டதாக உணர்கிறேன்.
அச்சமயம் அவளை காப்பாற்றி முதலுதவி வழங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உறவினர்களிடம் உதவி கோரினேன். சுங்கை பாக்காப் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் அவளை செபெராங் ஜெயா மருத்துவமனையின் அவசர பிரிவில் அனுமத்தி சிகிச்சை அளித்தனர்.
கைத்தொலைபேசியை திருடியதாக ஆசிரியர் ஒருவர் வசந்தபிரியா வீடு திரும்பும் வரை ஓர் அறையில் அடைத்து விசாரிக்கப்பட்டுள்ளார். வீட்டுக்கு வந்த அவள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டாள். ஆசிரியரின் கைத்தொலைபேசியை தான் திருடவில்லை என கூறினாள்.
"கவலைப்படாதே; இப்பிரச்சினைக்கு தீர்வு காண்கிறேன' என நான் கூறினேன்.
ஆனால் அறைக்குள் நுழைந்த அவள் கதவை பூட்டிக் கொண்டு சோஃபா நாற்காலியை நகர்த்தி கதவருகில் வைத்துக் கொண்டாள். கஷ்டப்பட்டு அறைக்குள் நுழைந்தபோது அவள் தூக்கு மாட்டி கொண்டிருப்பதை கண்டதாக முனியாண்டி வேதனையுடன் கூறினார்.
மருத்துவமனையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வசந்தபிரியா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment